நிலவே எம்மிடம் நெருங்காதே!
Dr.நிரோஷன் தில்லைநாதன் – யேர்மனி
நிலா நிலா ஓடி வா…? வேண்டாம் வராதே!
„நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா“ முதல் „நிலாவே வா, செல்லாதே வா“ வரை சந்திரனை அழைத்துப் படிக்கப் படும் பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றன. இந்த நிலா ஒரு நாள் நாங்கள் எல்லோரும் ஆசையாக அழைக்கின்றோம் என்று நமது பூமியை நோக்கி வந்தால் என்ன ந டக்கும்? என்ன புரியவில்லையா? நமது பூமியைச் சுற்றிச் சுற்றி வரும் சந்திரன் ஒரு நாள் திடீரென்று பூமியில் வந்து விழுந்தால் என்ன நடக்கும்? இதற்குரிய பதிலை அறிய விரும்பினால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
சந்திரன் பூமியிலிருந்து சுமார் 384.000 kmதூரத்தில் தன் பாட்டுக்குத் தன்னைத் தானே மற்றும் நமது பூமியையும் சுற்றி வருகிறது. எனவே மேலே குறித்தது போல் சந்திரன் நமது பூமியில் வந்து விழுவதற்கு சுமார் 384.000 kmதூரத்தைச் சுழன்று சுழன்று கடந்து வர வேண்டும். சரி, இப்படிச் சுழன்று வந்து பூமியைத் தாக்கச் சரியாக ஒரு வருடமாகும் என்று எடுத்துக்கொள்வோம். இந்த ஒரு வருடத்தின் முதலாவது மாதத்தின் முதல் சில நாட்களில் குறிப்பிடத்தக்கதாக ஒன்றுமே இருக்காது. சந்திரன் ஒரு கொஞ்சம் பிரகாசமாக ஜொலிக்கக்கூடும் அவ்வளவு தான். ஆனால் நாட்கள் போகப் போக இந்த முதலாவது மாதத்திலே மூன்று மீட்டர் உயரைத்தைக் கொண்ட அலைகள் கடற்கரைகளைத் தாக்க ஆரம்பித்து விடுவன. இதுவே சந்திரன் தொடர்ந்து பூமிக்கு அருகே வர வர கடற்கரைகள் மட்டுமில்லாமல் கிராமங்களிலும் நகரங்களிலும் உப்பு நிறைந்த கடல் நீர் பரவ ஆரம்பித்துவிடும்.
இரண்டாவது மாதத்தில் நகரங்களை வந்தடையும் அலைகளின் உயரம் 10 மீட்டரைத் தாண்டி விடும். கடற்கரைப் பகுதிகளில் வாழும் சுமார் 100 கோடி மக்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும். அது மட்டுமில்லாமல் கப்பல்கள் பயணிக்க இயலாத நிலைக்கு வந்து விடும். இதன் விளைவாக மனிதர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஒன்றுமே ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்குக் கொண்டு செல்ல இயலாத நிலைமை உருவாகிவிடும். இது எல்லாமே போதாது என்று இந்த நவீன உலகின் கருவாகிய இணையம் அதாவது iவெநசநெவ சேவை முற்றிலும் நின்றுவிடும். ஆக மொத்தத்தில் நமக்குத் தெரிந்த உலகம் முற்றிலும் மாறுபட்டு உலகமெங்கும் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு வந்து விடும்.
மூன்றாவது மாதத்தில் சந்திரன் பூமிக்கும் மிகவும் அருகே வந்து விடும். குறிப்பாக நமது பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் (satellite) தமது செயல்பாடு இழந்து பூமியை விட்டு விலகிவிடுவன. அதைத் தொடர்ந்து நான்காம் மற்றும் ஐந்தாம் மாதங்களில் காணப்படும் கடலலையின் உயரம் சுமார் 30 – 100 மீட்டரைத் தொட்டுவிடும். இது எல்லாமே போதாது என்று பூமியில் இது வரை காணாத நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்.
ஆறாவது மற்றும் ஏழாவது மாதங்களில் சந்திரன் சுமார் 50.000 மஅ தூரத்தில் மட்டுமே காணப்படும். இந்த நிலையில் புவியின் ஒரு பகுதி கடல் நீரினால் மூழ்கியும் மறு பகுதி கடல் நீர் இல்லாமல் காணப்படும். 8-11 மாதங்களில் அதாவது சந்திரன் பூமியில் வந்து விழப்போகும் கடைசி மாதங்களில் பூமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும். பயங்கரமான நிலநடுக்கங்கள் மட்டுமில்லாமல் மாபெரும் எரிமலை வெடிப்புகளைக் காணமுடியும். இதன் விளைவாக ஏற்படும் தூசி கலந்த புகை புவியெங்கும் பரவி, சூரிய ஒளி பூமியை வந்தடைவதைக் கடினமாக்கும். அதனால் பூமியின் வெப்பநிலை கீழ்நோக்கிச் செல்லும். இதனால் பெரும்பாலான மனிதர்களும் விலங்குகளும் அழிந்துவிடுவன.
சரி அப்படியே இறுதிச் சுற்றுக்கு வருவோம். 12 ஆவது மாதம். அதாவது சந்திரன் பூமியில் வந்து விழும் அந்த மாதத்தைப் பார்ப்போம். இப்போது சந்திரன் வெறும் 10.000 மஅ தூரத்தில் தான் இருக்கும். இந்நிலையில் உருண்டை வடிவில் நமக்கு நன்றாகத் தெரிந்த சந்திரன் வெடித்து லட்சக்கணக்கான கற்களாகப் பூமியைச் சுற்றி வரும். இதைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. சுற்றி வரும் கற்களில் சில பூமியில் வந்து விழக்கூடும். அப்படி இல்லையென்றால் பூமியைச் சுற்றி வரும் கற்கள் சூரிய ஒளியை முற்றிலும் மறைத்து பூமியில் ஒரு பனியுகத்தை ஏற்படுத்தக்கூடும். அவ்வளவு தான், இத்துடன் நமது கதை முடிந்துவிடும்.
ஆக மொத்தத்தில் சந்திரன் எங்கே இருக்கிறதோ அங்கே அப்படியே இருந்தால் எங்கள் எல்லோருக்கும் நல்லது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. எதிர்காலத்திலும் இதில் ஒரு மாற்றமும் வரக்கூடாது என்று நம்புவோம்…
1,102 total views, 2 views today