சர்வதேச மகளிர் தினமும் புலம் பெயர் நாடுகளில் நமது பெண்களும்!

பூங்கோதை-இங்கிலாந்து.

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவிய தினமாகும். பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும் இந்த நாள் குறிக்கிறது.
எந்த ஒரு சமூகத்திலும் பெண்களின் முன்னேற்றம் பல தளங்களிலும் ஏற்றம் அடைகின்ற போது அச்சமூகமும் பல வழிகளில் முன்னேறுகின்ற தன்மையை நாம் பல நாடுகளில் பார்க்கிறோம். இந்த சிறு கட்டுரை மூலம், சர்வதேச மகளிர் தினம் குறித்து ஒரு சில முக்கியமான விடயங்களை மட்டும் கவனத்திற் கொண்டு, இவ்வேளையில் தமது உரிமைகளை பெற்றுக் கொள்வதில் அல்லது தக்க வைத்துக் கொள்வதில், எமது பெண்களுக்கான சவால்களையும் அவர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளையும் பார்ப்போம்.

சர்வதேச மகளிர் தினத்தின் தோற்றமும் வரலாறும் பின்வருமாறு திகதிப்படுத்தப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் (IWD) 1900 களின் முற்பகுதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 1908 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 15,000 பெண்கள் குழு நியூயார்க் நகரத்திற்கு அணிவகுத்து, சிறந்த வேலை நேரம், ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரியது.

Foto: Group of striking women-shirtwaist workers in New York City, circa 1909.

On November 23, 1909, more than 20,000 Yiddish-speaking immigrants, mostly young women in their teens and early twenties, launched an eleven-week general strike in New York’s shirtwaist industry. Dubbed the Uprising of the 20,000, it was the largest strike by women to date in American history.


ஒரு வருடம் கழித்து, 1909 இல், குழு முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது. சர்வதேச அளவில் முறையான அங்கீகாரம் 1910 இல் தொடங்கியது, டென்மார்க்கில் உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் க்ளாரா ஜெட்கின் என்ற பெண்மணி ஒரு சிறப்பு நாள் அங்கீகாரத்தை பரிந்துரைத்தார்.
இப்படியான முன்னெடுப்புக்களினால், உலகளாவிய ரீதியில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், பாலின சமத்துவமின்மை என்கின்ற பிரச்சனை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது, குறிப்பாக எமது புலம் பெயர் தேசங்களில் எமது பெண்களுக்கான உரிமைகள் பேணப்படுகின்றனவா அல்லது அது குறித்து பாலின பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களே, அதை உணருகிறார்களா என்று அவதானித்தால் அது கவலைக்கிடமாகவே இருக்கிறது.

இனி,கீழே தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்களில் சிலவற்றைப் பாருங்கள் (https://www.bbc.co.uk/ news/world- 48623037). ஆண் மற்றும் பெண் சகாக்களிடையே இன்னும் வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்:
• 42மூ பெண்கள் வேலையில் பாலின பாகுபாட்டினால் அவதியுறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
• பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல முக்கிய தடைகளில் பாதிக்கு மேற்பட்டவை பாலின பாகுபாடு மற்றும் பாலின சார்பு தொடர்பானவை.
• ஒரு நிறுவனத்தில் 90மூ மூத்த தலைவர்கள் ஆண்களாக இருக்கும் போது, தங்கள் நிறுவனத்தில் பெண்கள் நன்கு பிரதிநிதித்துவம் பெறுவதாக பாதி ஆண்கள் நம்புகிறார்கள்.

மேற்கூறப்பட்ட தரவின் படி, பரந்துபட்ட ரீதியில் பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், பாலின ரீதியில் பாரபட்சம் அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தாலும்,புலம் பெயர் பெண்களின் வாழ்வில் இது ஒரு படி கூடுதலாகவே உள்ளதற்கு, எமது சமூகத்தின் கட்டுமானமும் அதன் எதிர்பார்ப்புகளும், பெண்கள் தமக்காக நடைமுறையில் இருக்கும் பல சேவைகளைப் புரிந்து கொண்டு அவற்றை பாவிக்காத தன்மையும், அதற்கான விழிப்புணர்வு இல்லாமையும் முக்கிய காரணங்கள் எனலாம்.

நம்மைச் சுற்றியுள்ள சிக்கலான உலகத்தைப் புரிந்துகொள்வதற்காக, நாம் சந்திக்கும் விஷயங்களை எப்படி எதிர் கொள்வது எனச்சிந்திக்கவும், அலசி ஆராய்வதற்கும், சரியான தீர்மானங்களை எடுப்பதற்கும், அநேகமான நமது பெண்களுக்கு மொழியும் ஒரு தடைக்கல்லாக இருப்பது கண்கூடு. புலம் பெயர் தேசங்களில் வசிக்கும் எமது பெண்களுக்கு அவர்கள் வாழுகின்ற நாடுகளில் இருக்கின்ற பல குடும்ப, சமூக, அரசியல் நலத்திட்டங்களை அறிந்து அவற்றை தகுந்த முறையில் பாவிக்கின்ற தன்மை இல்லாது இருத்தல், அவர்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க ஒரு தடைக்கல்லாகவும் ஒரு பாரிய பின்னடைவாகவும் உள்ளது.
தகவல்களை அறிந்து கொள்வது என்பது ஒரு செல்வம் (Information is wealth) எனக்கருதி பெண்கள் அனைவரும் தமது குடும்பம், குழந்தைகள், தம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் தேவைகளை அறிந்து கொள்வது, அதிலும் முக்கிய மாக வீட்டு வன்முறைகள் சார்ந்த தகவல்கள், அதற்கான பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அது குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது என்பன மிக அவசியம்.

தமக்கு தேவையானது எதுவென்று அறியக்கூடிய வரையிலாவது பெண்கள் இருக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை சுமப்பது மட்டுமே அக்குடும்பத்தை, அவர்கள் வாழும் சமூகத்தை முன் நோக்கி எடுத்துச் செல்லாது. பெண்கள் தமது குழந்தைகளுக்கும் தம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழக் கூடிய வல்லமை கொண்டவர்கள். தமது வாழ்வில் பல சவால்களை முறியடித்து வெற்றி பெற்ற பல பெண்கள் உலகளாவிய ரீதியிலும், புலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் இருக்கிறார்கள்.
பெண்களே,பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள். பெண்கள் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

1,184 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *