குருதி அணல்வாதம் என்றால் என்ன?
உடலில் வரவு,செலவுக் கணக்கு சரியாக
இருக்கவேண்டும்!சேமிப்பு ஒருபோதும் கூடாது!!
வைத்தியர் ஏ.சி.டில்சாட்
DA (Col) ,BAMS (India), Panchakarma (Kerala)
மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை நிந்தவூர்.இலங்கை.
நேர்காணல் – பைஷல் இஸ்மாயில் -இலங்கை
இரத்தக்கொதிப்பை தமிழில் குருதி அணல்வாதமென்றும், ஆங்கிலத்தில் ஹைபெர்டென்சன் (Hypertension) என்று அழைக்கின்றனர். மேலும், இரத்தச்சூடு, இரத்த அழுத்தம், இரத்த மிகுதி, இரத்த அமுக்கம், இரத்தப் பெருக்கம், இரத்தாதிக்கம், நரம்பிறுக்கம், நாடி இறக்கம், போன்ற பெயர்களாளும் அழைக்கப்படும். அதாவது, காரணம் கண்டுபிடிக்க முடியாத மிகையான இரத்தழுத்தம் என்பது இதன் பொருளாகும். உணர்ச்சிகள் கட்டுப்பாடற்று கொந்தளிப்பு அடையும்போது இரத்த ஓட்டம் தடைப்படும் நிலையில், மூளையின் சில பகுதிகளுக்கு பிராணவாயு சரியான முறையில் கிடைக்காமல் மூளையின் செயற்பாட்டு விசை நரம்புகள் செயல் இழக்கின்றன. இந்த உணர்ச்சி அலைமோதல் எல்லை கடக்கும் நிலையில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
பொதுவாக, இன்றைய அவசர குழப்பமயமான வாழ்க்கை முறையே இந்நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. இதனை இன்னுமொரு முறையில் கூறப்போனால், எமக்கு ஏற்படப்போகும் பாரிய நோயின் முன்னறிவித்தல் என்றுகூடச் சொல்லலாம். இரத்த அழுத்தம் உடலில் அதிகரிக்கும்போது, ஆரம்பத்தில் அதுபற்றி பெரும்பாலாநோருக்கு வெளியே தெரிவதில்லை.
இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?
உணர்ச்சிகள் அல்லது மனப்பளு, மனக்கொந்தளிப்பினாலும், இதயம் இரத்தத்ததை வாயுவின் வேகத்தால் உந்தித்தள்ளும் வேகத்தின் இயல்பில் மாற்றம் ஏற்படும்போதும் ஏற்படுகின்றது.
நெடு நாட்கள் தொடரான மலச்சிக்கல், மதுபானை, புகையிலை பாவனை, மாப்பொருட்கள், கொழுப்பு, இறைச்சி போன்றவற்றை அதிகமாக உண்பதனாலும், மிகுந்த உழைப்பு, மனக்களிப்பு, நாடியின் மிகுந்த துடிப்பு, அதிக சிந்தனை, காமம், மேக நோய்கள், தொண்டை நோய், பித்தப்பை நோய், ஈரல் மற்றும் நீர்பபை போன்றவற்றில் ஏற்படும் புண்கள், மனக்கவலை, பயம், பதட்டம் காரணமான உறைப்புக்களை உண்ணுதல், நச்சுள்ள உணவுப் பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகின்றது.
இந்நோய் இயல்பாகவே கூடவும், குறையவும் செய்யும். நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது இரத்த அழுத்தம் குறைவடைகின்றது. திடீரென ஏற்படும் மன எழுச்சி இரத்த அழுத்தத்தினை திடீரென உயர்த்துகின்றது. உடலியல் மற்றும் மனவியல் காரணங்கள் ஆகிய இரண்டு விதமான செய்கைகளே குருதி அணல்வாதத்திற்கு காரணிகளாக அமைகின்றன.
நீங்கள் குறிப்பிட்ட இரு காரணிகளையும் தெளிவுபடுத்த முடியுமா?
ஆம், உடலியல் காரணி என்றால் – புகை பிடிப்பவர்களுக்கும், மதுபோதை, போதை மருந்துகள் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கும் இரத்த நாளங்கள் குறுகி விடுகின்றன. அதாவது, இரத்த நாளங்கள் விரிந்து சுருங்கும் தன்மை சிறிது சிறிதாக குறையத் தொடங்குகின்றது. இதனால் இந்நோய் ஏற்பட ஏதுவாகிறது. மேலும், அதிகமாக மீன், இறைச்சி உண்பதினால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிகின்றது. இதனாலும் இந்நோய் ஏற்பட ஏதுவாகிறது.
எந்தவித வேலைகளையும் செய்யாமல் உடற்பயிற்சியின்றி சோம்பேறித்தனமாய் இருப்பவர்களுக்கு உணவு அதிகமாகி உடல் எடை கூடுகின்றது, இதனால் உடல் உழைப்புக் குறைந்து கொண்டே போவதால் உடலில் கொழுப்புப்படிவு அதிகமாகி நோயைத் தோற்றுவிக்கின்றது.
உடலைப் பொறுத்தமட்டில் வரவு செலவுக் கணக்கு சரியாக இருக்கவேண்டும். சேமிப்பு ஒருபோதும் இருக்கக்கூடாது. நாம் உண்ணும் உணவில் உப்பு, சீனி கூடினாலும் இரத்தத்தின் கெட்டித்தன்மையை அதிகமாக்கி பாயும் தன்மையைக் குறைக்கின்றது. இரத்த ஓட்டத்தில் பலத்த மாறுபாடுகளை இவை உண்டாக்குவதால் அவற்றை அளவுடன் சேர்த்துக்கொள்வதே நல்லது.
மனவியல் காரணி என்றால் – கோபம், பகைமை, வெறுப்பு, வஞ்சம் போன்ற தீய குணங்கள் எமது நாளமில்லாச் சுரப்பிகளையும், தானியங்கி நரம்பு மண்டலத்தையும் தாக்குவதால் இரத்த அழுத்தம் கூடுகின்றது. ஆகவே, தீய எண்ணங்கள் மற்றும் குணங்கள் எம்மை நோயாளிகளாக மாற்றுகின்றது. பயம், பதற்றம், கவலை போன்ற குணங்கள் எமது உடலின் இயக்கத்தில் பல மாற்றங்களைத் தோற்றுவித்து இரத்த அழுத்தத்தைக் கூட்டுகின்றன. சில சில நேரங்களில் கவலைப்படுவார்கள், சிலர் எப்போதும் கவலைப்படுபவதை பழக்கப்படுத்தி தொழிலாக வைத்துக்கொள்வார்கள். அவர்களில் சிலருக்கு இந்நோயின் வாய்ப்பு அதிகமாகின்றது.
உணர்ச்சிகளினால் ஏற்படும் மனப்போராட்டம் மற்றும் தொடராக இருக்கும் மனப்போராட்டம் போன்றன நரம்பு மண்டலத்தை தாக்கும்போது கூடுதல் இரத்த அழுத்தம் உருவாகிறது. சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினைகள், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் தோன்றும்போது வாழ்க்கை துன்பகரமாகத் தோன்றி மனப்பளு தோன்றுகிறது. மனப்பளுவும் இந்நோய்க்கு மூல காரணமாகின்றது.
பெண்கள் கருவுற்ற காலங்களில் உடலில் நச்சுநிலை கூடுவதால் இரத்த அழுத்தம் கூடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் மாறுபடுவதால் இரத்த அழுத்த நோய் உண்டாகிறது. உதாரணமாக, கணையம் வேலை செய்யாதபோது நீரிழிவுநோய் உண்டாகிறது. அந்த நீரிழிவு நோயினால் இரத்த அழுத்த நோய் உண்டாகும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.
இரத்த அழுத்த நோய் வந்தவர்களுக்கு சிறுநீரக் கோளாறுகள் உண்டாவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதாவது, சிறுநீரகம், இரத்தத்தில் அதிகளவில் உள்ள உப்புச்சத்தை சிறுநீர் மூலம் வெளிப்படுத்துகின்றது. சிறுநீரம் பழுதடையும்போது இரத்தத்தில் உப்புச்சத்து கூடுகிறது. உப்புச்சத்து கூடும்போது இரத்த ஓட்டத்தில் பலத்த மாறுபாடுகளை உருவாக்குகிறது. சரியான ஊட்டச்சத்து உட்கொள்ளாமை உழைப்புக் குறைவான சோம்பேறி வாழ்க்கை, தொழிற்சாலைகள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், குவாரி போன்ற இடங்களில் கேட்டும் பேறிரைச்சல் காரணமாக அமைதியான நிதானமான வாழ்க்கையை கழிக்க முடியாமல் அன்றாடம் எந்த நேரமும் பரபரப்புடன் இயங்க வேண்டிய நிர்ப்பந்த நிலை, பல்வேறு காரணங்களால் வாழ்க்கையில் போராடியாக வேண்டிய சங்கடம், தவிர்க்க முடியாத நிலையில் ஏற்படும் கோபத்தால் உண்டாகும் ஆபேச உணர்வுகள், கவலை, ஏமாற்றம் காரணமாக மனதில் ஏற்படும் அதிர்ச்சிகள் போன்ற காரணிகளும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு காரணமாக அமைகின்றன.
இந்நோயின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
நாடி நரம்பும்புகளில் இரத்தக் குழாய்கள் முறுக்கேறி இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கும் இரத்த வேகம் குன்றி சிறு குழாய்களில் இரத்தம் கசிந்துவிடும். அதனால் மயக்கம், தலைச்சுற்று, கை மற்றும் கால் சோர்வு, ஞாபக மறதி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தி முளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்திவிடும். அதனால் திடீரென பேச்சும் ஞாபக மறதியும் ஏற்பட்டு படுக்கையில் வீழ்த்திவிடும் ஒரு நோயாக இருக்கிறது.
மூளையின் பகுதிகளில் கை, கால், வாய், முகம் போன்ற பாகங்கள் தொடர்பு பட்டுள்ளதால் அது செயலிழந்துபோய் விடுகின்றன. இதை தமிழில் பாரிசவாதம் என்றும் ஆங்கிலத்தில் Paralysis என்றும் கூறுகின்றனர்.
இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்ள நீங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
இரத்த அழுத்தநிலை சீராக இருக்கும்வரை உடல்நலம் சீராக இருக்கின்றது. இரத்தவேகம் குறைந்தாலோ அல்லது கூடினாலோ இரத்த அழுத்த நோய் உருவாகிவிட்டது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கூடியவரை இரத்த அழுத்த நோய் வராமல் தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும். வந்தால் மருத்துவ சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை என்று ’கூறினாலும் மனவியல், உடலியல் தொடர்பான சில நடைமுறைகளை கையாள்வதினாலும் இயற்கையுடன் ஒத்து நடப்பதன் மூலமும் இரத்த அழுத்த நோயினை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
குறிப்பாக, உடலியல் மற்றும் மனவியல் ரீதியாக கவலையற்று மன மகிழ்வுடன் வாழும் வாழ்க்கையை நடாத்திச் செல்லுதல்,எந்தக் காரியத்தையும் அவசரமின்றி நிதானமாக செய்வதற்கு கற்றுக்கொள்ளல், நேரம் கிடைக்கும்போ தேல்லாம் ஓய்வு எடுத்தல், உடற்பயிற்சியை தினமும் செய்தல், அளவான உணவை உட்கொள்ளல் போன்ற விடயங்களை கடைப்பிடிப்பதன் மூலமே நாம் இந்நோயிலிருந்து பாதுகாப்புப்பெற முடியும்.
1,142 total views, 2 views today