ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாகக் காய்ப்பதில்லை.ஏன்?
-ஆசி.கந்தராஜா.அவுஸ்ரேலியா
ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாக காய்ப்பதில்லை. இது மரத்தின் குற்றமல்ல. மாமரங்களைப் பராமரிக்காத மனிதர்களின் குற்றமே இது.
இலங்கையில், மாமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பின்வளவிலேயே நிக்கும். இவற்றை யாரும் ‘கவ்வாத்து’ ப் (Prune) பண்ணுவதில்லை. ஊரில் மாமரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து பெரிய இடத்தை பிடித்துக் கொள்ளும். இலங்கையில் மாம்பழத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணத்திலே வணிகரீதியாக, தோட்டத்தில் அல்லது தோப்பில் மாமரங்கள் வளர்க்கப் படுவது மிகமிகக் குறைவு. இந்தப்போக்கை நாம் மாற்றவேண்டும்.
மாமரத்தில் இளம் கிளைகளின் நுனிக்குருத்தே பூக்களாக மாறும்.
பெரிய மரங்களின் கிளைக்கூடலின் உட்பகுதியில் இளம் குருத்துக்கள் இல்லாததால் மரத்தின் கிளைக்கூடலின் (Vegetative Crown) வெளிப்பகுதியில் மாத்திரம், பூக்கள் தோன்றி மாங்காய் காய்க்கும். உட்பகுதிக் கொப்புக்களிலுள்ள கிளைகளில் மிக அரிதாகவே பிஞ்சுகள தோன்றும்.
மாமரத்தை காட்டு மரங்கள்போல தன்னிச்சையாக வளரவிடின், ஒரு பரப்புக் காணியில் ஒரு மாமரம் வளரவே இடம் காணும். ஆனால் மாமரத்தை கவ்வாத்துப் பண்ணி வளர்ப்பதன் மூலம், சின்ன கிளைக்கூடல் கொண்ட பல மாமரங்கள் நடமுடியும். இதனால் ஒரு பெரிய மரத்தின் கிளைக் கூடலின் வெளிப்புறத்தில் காய்க்கும் மாங்காய்களைவிட, சிறிய கிளைக்கூடல்கள் கொண்ட பல மாமரங்களில் அதிக மாங்காய்களை பெறமுடியும்.
மாமரத்தை குட்டையாக வளர்க்க, கவ்வாத்துப் பண்ணுவது ஒரு முறை. இன்னுமொரு முறை, Cultar என்ற மருந்தை தெளிப்பது அல்லது கரைத்து மரத்தின் அடிக்கு ஊற்றுவது. இந்த மருந்தை PB2 அல்லது Paclobutrazol என்று கூறுவதுமுண்டு.PB2 மனித சௌக்கியத்து தீங்கு விளைவிப்பதாக அறியப்படவில்லை.
நன்றி: ஆசி.கந்தராஜாவின் டயறிக் குறிப்பு (Facebook)
1,309 total views, 2 views today