வீடு

கவிதா லட்சுமி – நோர்வே

சித்திரம்:கண்ணா.

விலையுயர்ந்த பொருட்கள் ஒன்றோ இரண்டோ மிக நேர்த்தியாக வைக்கப்படுவதும், விளக்குகளும் அது போலவே இருப்பதும், உயர் நட்சத்திர விடுதிகளின் அறைகளைப் போலவே வீடுகளும் இருக்க வேண்டுமென்ற விளம்பரங்களின் பரிமாணங்கள்தாம்.

இப்போதெல்லாம் வீடுகள் மிகவும் வெறுமையுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

இங்கு,புதிது புதிதாய் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெள்ளை நிறச் சுவர்களையே அதிகமாக் கொண்டிருக்கின்றன. பொருட்களைக் குறைத்து வெள்ளை நிறச் சுவர்களை வெறுமனே விட்டு வைப்பதே நாகரிகம் என்று ஆகிவிட்டது.

இருக்கையும் முன் மேசையும் அதில் ஒரு மெழுகு திரிக் குவளையும் முகட்டின் உள்ளே பொருத்தப்பட்ட விளக்கும் போதுமானதாக இருக்கிறது.

இருக்கையின் பின்புறமோ, தூரமாகவோ ஒரு கலைத்துவமிக்க படம் வெகு கவனத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது. அது கலைத்துவம் மிக்கது என்பதைவிட சந்தைகளில் விளம்பரப்படுத்தபடுவது என்றே சொல்ல வேண்டும். அனேகமாக சட்டமிடப்பட்டிருக்கும் படத்திற்கும் அந்த வீட்டு மனிதருக்கும் பெருத்த இடைவெளி இருப்பதாகவே நான் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்துதிருக்கிறேன்.

விலையுயர்ந்த பொருட்கள் ஒன்றோ இரண்டோ மிக நேர்த்தியாக வைக்கப்படுவதும், விளக்குகளும் அது போலவே இருப்பதும், உயர் நட்சத்திர விடுதிகளின் அறைகளைப் போலவே வீடுகளும் இருக்க வேண்டுமென்ற விளம்பரங்களின் பரிமாணங்கள்தாம்.

ஒன்று போலவே எல்லா வீடுகளும் வெள்ளையாய், வெறுமையாய், சுத்தமாய், பெறுமதியானதாய்க் காட்சியளிக்கிறது. இந்த வீடுகளில் எல்லாம் முழுமையாக உட்காரமுடியாமல் ஒரு இருக்கையின் ஓரத்தில் அமர்ந்துவிட்டு கிளம்பி விடுவதே என் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

வீடு என்பது நிறைந்திருப்பது என்றே சொல்வேன்.பொருட்களால் என்றல்ல. வாழ்தலால்,கதைகளால், அனுபவங்களால்.

சிலருக்கு பொருள் என்பது இடைஞ்சலாகவும், சிலருக்கு பெரும் பொருட்குவியலே பெரும் வெளியாகவும் இருக்கக்கூடும். வண்ணங்களும் தூரிகைகளும் ஓவியங்களும் குவிந்துகிடக்கும் இடம்தானே ஒரு ஓவியனின் பெரு வெளியாக இருக்கக்கூடும். அப்படித்தான் இதுவும்.

இதில் நான் ஒன்றை தெளிவாக உணர்ந்திருக்கிறேன். வீட்டின் வெறுமை வேறு வெளி வேறு.

உயர் நாகரிக வீடுகள் என்னைத் தூரத்தில் நிறுத்தி விடுகின்றன. சமயங்களில் இந்த அந்நியத் தன்மை வீட்டு மனிதர்களோடும் ஒட்டிவிடுகிறது.

கொஞ்சமாக வேணும் கலைந்திருக்க வேண்டும். நமக்குப் பிடித்த பொருட்கள் ஆங்காங்கே போட்டது போட்டபடி கிடக்க வேண்டும். நாம் வாழ்ந்த அத்தனை நாள் வாழ்தலையும் அங்காங்கே அசைபோடும் இடமாகவும் இருத்தல் வேண்டும். அது சுகம்.

மிக நேர்த்தியாக இருக்கும் வீடுகள் அசௌகரியத்தையே ஏற்படுத்துகின்றன. நாம் எதையும் கலைத்துவிடுவோமோ, நம்மால் எங்காவது அழுக்குப் படிந்து விடுமோ என்ற எண்ணம் மனசெங்கும் துருத்திக் கொண்டே இருக்கிறது.

இன்று ஏவாவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நூலகத்தின் முதன்மை நிர்வாகியாக இருந்து ஓய்வு பெற்றவர். நோர்வேஜிய இலக்கியங்கள், அரங்க நிகழ்வுகள் என்று தொடர்ந்து செயற்பட்டு வருபவர்.

அவருடைய வீடே மிக அழகானதொரு குட்டி உலகம். எப்போது போனாலும் நான் கண்களைச் சுழல விட்டுக்கொண்டே இருப்பேன். அத்தனை பொருட்கள் நிறைந்த வீடு.

தொன்மையான பொருட்களைச் சேகரித்து வீடு முழுவதும் நிறைத்து வைத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கும். பயணங்கள், அனுபவங்கள் என கேட்கக் கேட்க தெவிட்டாத கதைகள் அவை.

ஒரு கதையைக் கூடச் சொல்ல முடியாத வீடு எப்படி ஒரு வீடாக இருக்க முடியும்?

எனது கதையையும் எனது தேசத்தின் கதைகளையும் நான் அவர் மூலம் பேசக் கேட்பது எத்தனை இனிமையாக இருந்தது என்பது அனுபவத்திற்தான் தெரிந்துகொள்ள முடியும்.

ஆமைகள் மேல் மிகுந்த பிரியங்கொண்டவர். வீட்டின் பல இடங்கிளிலும் வேலைபாடுகள் நிறைந்த ஆமைப் பொம்மைகள் கலைப் பொருட்களாய் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு தேசத்திலிருந்தும் கொண்டு வந்த கலைப் பொருட்கள் சுவர்களை நிரப்பி வைத்திருக்கின்றன. கலைந்துகிடப்பதைத் தாண்டி இத்தனை பொருட்களிலும் ஒரு ஒழுங்கும் அழகும் மனஅமைதியும் இருக்கிறது.

வீடுகள் வீட்டு மனிதர்களின் தன்மையோடு இருக்கும் போது அந்த வீட்டிற்கென்றும் ஒரு சுயம் வந்து விடுகிறது. வீட்டு வடிவமைப்பாளர்களின் விளம்பரங்களைப் பின்பற்றும் வீடுகள் தனது ஆத்மாவை இழந்து ஒருவித மாயையைச் சுமந்து பரிதாபமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகின்றது.

சுயத்தைத் தேடத் தொடங்கும் இடமாகவும் சரி, தேடியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் சரி வீடுகள்தான் இருக்கின்றன.

வீட்டோடான நேசத்தையும், இன்பத்தையும் உணரும் மனது, உலகில் வீடற்ற மனிதர்களை நினைத்துவிடும் பொழுதுகளிலெல்லாம் இனி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்று தன் இயக்கத்தை சில நொடி நிறுத்திவிடுகிறது.

940 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *