அன்னபூரணி

  • Dr. T.. கோபிசங்கர் இலங்கை

“ போனகிழமை தான் படம் பாத்தனி, திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க, ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம் வருசத்திக்கு எண்டு செல்லம்மாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்தரும் பிறக்கிறதில்லை எண்டதால, சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி சண்முகத்தாரும் லேசில விட மாட்டார். மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார். ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட கள்ளு அடிக்கேக்க, சண்முகத்தார் மனிசீட்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய, இவர் சங்கடப்பட அவன் “ஹம கானிம எக்காய் நம வித்தறாய் வெனஸ்“ ( எல்லா மனிசியும் ஒண்டு தான் அவனவன்டை மனிசிமாருக்கு ஒவ்வொரு பேர்) எண்ட ஒரு உலக உண்மையச் சொன்னான். அதுக்குப் பிறகு இவர் யோகர் சுவாமி சிஸ்யன் மாதிரி சும்மா இருப்பதே சுகம் எண்ட முடிவுக்கு வந்தார்.

“திரைக்கு வருகிறது நிறம் மாறாத பூக்கள்“

சண்டை தொடங்கி செல்லம்மாக்கா சன்னதம் ஆடலு
சண்முகத்தார் ஒண்டும் பறையாம ஓம் எண்டார். போனமுறை போகேக்கை “திரைக்கு வருகிறது நிறம் மாறாத பூக்கள்“ எண்ட போர்டை பார்த்ததுமே மனிசி முடிவெடித் திட்டுது எண்டு நெச்சபடி சண்முகத்தாரும் படம் பாக்க ரெடி ஆனார். இனி என்ன நாலு குடும்பத்தைச் சேத்துப் போனாத்தான் சுகம் எண்டு போட்டு அக்கம் பக்கம் ஆள் சேத்தார் சண்முகத்தார்.

புதுப்படம் எண்ட படியால் 5 ளாழற போடுவாங்கள் வேளைக்கு வெளிக்கிட்டால் தான் வசதியா இருக்கும், போனமுறை மூண்டாவது றோவில இருந்து நான் பட்ட பாடு ஒரே விசிலடியும், சிகரட் மணமும், மூட்டைப்பூச்சி வேற, நிமிந்து இருந்து பாத்து கழுத்து நோ எண்டு செல்லம்மாக்கா புலம்ப சண்முகத்தார் சாரத்தை மாத்தி வேட்டியைக் கட்டினார்.

போட்டு வந்து விடிய செக்குக்கு எள்ளுக் குடுக்க வேணும் எண்ட யோசினையோட தியட்டருக்கு பக்கத்து பாரின்டை சந்தோசத்தில சண்முகத்தாரும் படம் பாக்கப் பத்துப் பேரும் வெளிக்கிட்டிச்சினம்.

நேத்துப் போட்டு வந்தவங்களிட்டை நிலமையை கேட்டுப் போட்டுத்தான் வந்தனான் எண்டு கனகலிங்கம் சொல்ல எல்லாரும் வெளிக்கிட்டினம் சன்னதியானைக் கும்பிட்ட படி.

சண்முகத்தார் இந்த முறை செலவைப் பாக்காம ODC ரிக்கற் எடுத்தார். அபிசேக ஆராதனையோட படம் தொடங்கி முடியும் வரை செல்லம்மாக்கா கதைக்கேல்லை, ஆனபடியால் இது நல்ல படமாத் தான் இருக்கும் என சண்முகத்தார் முடிவுக்கு வந்தார். படத்தின்டை பாதிப்போட கதைக்காம அமைதியா வந்த மனிசியைப் பாத்திட்டு யோசிச்சார்,உந்த ரீலை வாங்கிக் கொண்டு போய் ஒவ்வொரு நாளும் போட்டுக் காட்டினா எப்பிடி இருக்கும் வீடு எண்டு. அழுதும் அழாமலும் வந்த செல்லம்மாக்கா கடையை மறத்திட்டா எண்ட சண்முகத்தார் முடிவெடுக்க, திடீரெண்டு தொடங்கினா “ எப்பிடியும நல்லதா ஒரு பத்துச் சீலை எடுப்பம் “ எண்டு.

என்னெண்டு தான் உந்தப் பெண்டுகள் டக்டக்கெண்டு மாறுறாளவையோ எண்டு யோசிச்சுக் கொண்டு சண்முகத்தார் கடைப்பக்கமாகப் போக, கடைக்காரன் கண்டோன்னயே கதிரையைப்போட்டு வெளீல இருத்தி வைச்சான் போன ஆம்பிளைகளை. நித்திரை வரத் தொடங்க நேரத்தைப் பாத்திட்டு சண்முகத்தார் அந்தரப்பட,தனக்கும் சண்முகத்தாருக்கும் சம்மந்தம் இல்லை எண்ட மாதிரி செல்லம்மாக்கா சீலைய மட்டும் பாத்துக்கொண்டு இருந்தா. சீலை எண்டு தொடங்கி,வேட்டி சாரம் எல்லாம் வாங்கீட்டு லக்கேஜைப் பற்றிக் கவலைப் படாமல் செல்லமாக்கா வயித்தைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினா.வெளீல வந்து இட்டலியும் வடையும் சாப்பிட்டிட்டு கோப்பியும் குடிச்சிட்டு வெளிக்கிட்டிச்சினம் எல்லாரும்.

ஓவர் speed ஆப் போனாத்தான் பிடி படாமல் போகலாம் எண்டு ஆரோ சொல்ல வேகம் கொஞ்சம் கூடிச்சிது ….அணியத்தில நிண்ட படி யாரும் வாறானோ எண்டு சண்முகத்தார் உத்துப்பாத்த படி வந்தார். சண்முகத்தார் தண்டயல் தம்பிப்பிள்ளைக்கு சொந்தக்காரர்,அதால தான் தன்டை 38 அடி கொட்டுக்கு (வள்ளத்துக்கு) அம்மான்டையோ மனிசீன்டையோ பேரை வைக்காமல் அன்னபூரணி எண்டு வைச்சவர். வாங்கின சாமாங்களை தண்ணி படாம படங்கு போட்டு சுத்தி காத்துக்கு பறக்காம பாரத்துக்கு துடுப்பையும் மேல வைச்சா செல்லம்மாக்கா. விட்ட சுருட்டுப் புகையின்டை திசையையும் காத்தில கரைஞ்ச நேரத்தையும் பார்த்து வேகத்தை கூட்டிக்குறைச்சு விடிவெள்ளி பாத்து வீட்டை வந்து சேர விடியச் சாமம் ஆகீட்டிது.

ஆறு மணிக்கு வெளிக்கிட்டு காரைக்காலுக்குப் போய் ஒம்பது மணிக்கு second show பாத்திட்டு கொண்டு போன சவுக்காரம்,தேங்காய் எண்ணை ,கறுவா, கராம்பு, ஏலக்காய் எல்லாம் குடுத்திட்டு சீலை,சாரம்,சம்பா அரிசி, பட்டும் அலுமினியமும் ஏத்திக்கொண்டு வாறது வழமை. திரும்பி ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டை வந்திடலாம். இந்த ஏற்றுமதி இறக்குமதி விளையாட்டில போட்டி பொறமை கூட, போட்டுக் குடுக்கிறதும் கூடிச்சிது. Dummy ஆ ஒரு போட்டை அனுப்பி நிலமையைப் பாத்துத் தான் உண்மையா வெளிக்கிடிறது. பனை மரத்தில ஏறி நிண்டு star toffee கவரால torchஐ மறைச்சு பச்சை, சிவப்பு எண்டு காட்டிற சிக்னலைப் பாத்துத் தான் போய் வாறது. வாற boatஐ விட்டுக்கலைச்சுக் கொண்டு வந்த சேர முதல் சாமாங்களை இறக்கிக் கொண்டு போயிடிவினம், இறங்கின சாமாங்கள் எந்த வீட்டை போனது எண்டு ஆராலேம் பிடிக்கேலாது ஏனெண்டால் எல்லா வீடும் ஒரே மாதிரித் தான் கட்டி இருந்தது. கடல்லை வாற boatக்கு கால்வாய் மாரி வெட்டி நேர வீட்டுக்குள்ளேயே விடீற மாதிரி ஒரு set up முந்தி இருந்தது எண்டு கதை இருந்தது.

ஆழக்கடலில் இப்பிடி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்திட்டு, இப்பவும் நம்பிக்கையோடு ஆளுகின்ற நாளை எண்ணி சண்முகத்தாரும் செல்லம்மாக்காவும் காத்து இருக்கினம்.

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்
பி.கு
அன்னபூரணி அம்மாள் என்ற பாயக்கப்பல் 1938 இல் வல்வெட்டித் துறையிலிருந்து வெற்றிகரமாக அமெரிக்காவில் பொஸ்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் தலைமை மாலுமியாக இருந்தவர் தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிபிள்ளை என்பவர் ஆவார்.

771 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *