இனிப்பில் இருந்து இனி எப்போ விடுதலை!


டாக்டர். ஏம்.கே.முருகானந்தன் M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)
குடும்ப மருத்துவர்-இலங்கை

சொக்லேட்,ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக எமக்கு இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு பலர் அடிமையாகிவிட்டோம் என்று கூடச் சொல்லலாம்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல்ல அல்ல. அது ஒரு நோய் போல பலரைiயும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என ஊயளளநை டீதழசம என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்;கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.
இதிலிருந்து விடுபடுவது எப்படி?

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களை வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எனவே மாப் பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.
பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக் பிஸ்கற், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான் எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும் போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம். தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகி;ழ்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கலகளில் மூழ்க வேண்டாம். மகிழ்சிசான பொழுதுபோக்குளில் ஈடுபடுங்கள். மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள். உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதே போல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிறீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.

879 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *