‘திரையும் உரையும்’
யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சிக்கு கட்டியம்கூறும்
யேர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 26.02.2022 அன்று ‘திரையும் உரையும்’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு 2020இல் ‘திரையும் உரையும்’ நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. 2021இல் கொரோனா காரணமாக நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இம்முறை நிகழ்விற்கு நோர்வேயில் இருந்து கவிதா லட்சுமி, பிரான்ஸில் இருந்து அஜந்தன், யேர்மனியில் இருந்து நெடுந்தீவு முகிலன், தியன் பா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிந்தியா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்வில் இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பலர் கலந்து கொண்டிருந்தார்கள். பார்வையாளர்கள் மிகச் சிறந்த சினிமா ரசிகர்களாக இருந்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸில் அமலின் இயக்கத்தில் உருவான ‘வேடம்’ குறும்படம், யேர்மனியில் கீர்த்தனா இயக்கிய ‘பல்லவி’, ஈழத்தில் நெடுந்தீவு முகிலன் இயக்கய ‘பாற்காரன்’ குறும்படங்களோடு யேர்மனியில் புதிய குறும்படங்களாக வெளிவந்துள்ள மதுசனின் ‘நீ என் தோழி’ மற்றும் எனது ‘வானம்’ குறும்படமும் நிகழ்வில் திரையிடப்பட்டன. யேர்மனியை சேர்ந்த துருக்கிய நண்பர்களின் உருவாக்கத்தில் வெளியான ‘கனிமா’ என்கின்ற யேர்மன் மொழிக் குறும்படமும் திரையிடப்பட்டது.
பார்வையாளர்கள் வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன. உரையாடல் சினிமாவுக்குள்ளேய நின்றது ஆரோக்கியமாக இருந்தது. நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நிகழ்வு 12 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணி வரை நடைபெற்ற போதும் பார்வையாளர்கள் நிகழ்வு முடியும் வரை இருந்தார்கள். நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த பன்முகக் கலைஞர் திரு வி.சபேசனின் முயற்சி போற்றுதலுக்குரியது.
1,012 total views, 2 views today