“ஒரு பாலை வீடு” நாடகம் – 1980
எனது நாடக அனுபவப் பகிர்வு – 17
ஆனந்தராணி பாலேந்திரா
கடந்த இதழில் 1979இல் யாழ்ப்பாணத்தில், எழுபது வயதில் இருந்து இருபது வயது வரையிலான சுண்டுக்குளி பழைய மாணவிகள் 20 பேர் நடித்த ‘ஒரு பாலை வீடு’ நாடகம் பற்றியும், இதனைத் தயாரித்து நெறியாள்கை செய்த க. பாலேந்திரா, இந்த நாடகத்தைக் கொழும்பு, பேராதனை போன்ற இடங்களில் மேடையேற்ற விரும்பியது பற்றியும், இந்த நாடக ஒத்திகைகளுக்கு பாலேந்திராவிற்;கு உதவியாக நான் போய் வந்தது பற்றியும் எழுதியிருந்தேன்.
‘ஒரு பாலை வீடு’ நாடகத்தின் கதைக்கு வருவோம். 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்பெயினின் கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகம் இது. குடும்ப மானம், குலத்தின் கௌரவம் என்பவற்றைப் பெரிதாக மதித்து கொடூரமான முறையில் வீட்டில் அதிகாரத்தைச் செலுத்தும் ஒரு தாய். அவருக்கு 40 வயதில் இருந்து 20 வயது வரையான திருமணமாகாத ஐந்து மகள்மார். கணவர் இறந்துவிட்டார். கணவரின் இறுதிச் சடங்குகள் முடிந்த கையோடு வெளியாரின் வருகை நிறுத்தப்பட்டு வீட்டின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. மூடுண்ட வீட்டினுள் அடைபட்டு ஆசாபாசங்கள் மறுக்கப்பட்டு வெறுப்பும் விரக்தியுமாக வாழுகிறார்கள் இந்தப் பெண்கள். ஆண் வாசனையே அறியாதவர்கள். அந்த வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்களும்கூட வீட்டுத் தலைவியின் அதிகார முறையினால் வெறுப்புற்று இருக்கிறார்கள். தனது அதிகாரத்தை வயது முதிர்ந்த தன் தாயாரிடம் கூடக் காட்டுகிறார் அந்த வீட்டுத் தலைவி.
தகிக்கும் வறண்ட பாலைவனமாகக் காணப்படுகிறது அந்த வீடு. தனது மகள்மாருக்குத் தகுதியான மாப்பிள்ளைகள் அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே இல்லை என்று கர்வமும் பெருமையுமாக, வந்த சம்பந்தங்களை ஒதுக்கித் தள்ளியபடி தாய். தமது உணர்ச்சிகளுக்குத் தடைபோட முடியாமல் தவிக்கும் மகள்மார். இவர்கள் வாழ்க்கையில் உள்ளிடும் ஒரு இளைஞன் இந்தப் பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாடுகிறான். அந்த இளைஞனுக்காக சகோதரிகள் தங்களுக்கிடையிலேயே மோதுப்படுகிறார்கள். இறுதியில் அங்கு ஒரு தற்கொலைகூட நடக்கிறது. மகள் இறந்தபோதும்கூட தன் கடும்போக்கை விடாமல் அதே அதிகாரத்தோடு நடந்துகொள்கிறார் தாய். மிகவும் உக்கிரமான நாடகம் இது.
அந்த நேரங்களில் பாலேந்திராவும் எமது நாடக அமைப்பான அவைக்காற்று கலைக் கழகமும் மொழிபெயர்ப்பு நாடகங்களையே போடுகிறார்கள் என்று சிலரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ‘ஒரு பாலை வீடு’ நாடகத்தின் முதலாவது மேடையேற்றத்தினைப் பார்த்த பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான அ. யேசுராசா அவர்கள் தமிழகத்தில் இருந்து வெளியாகிய ‘கணையாழி’ ஆனி 1979 இதழில் மிகக் காத்திரமான விமர்சனம் ஒன்றினை எழுதியிருந்தார். அதில்,
“ மொழிபெயர்ப்பு நாடகமாய் இருந்தபோதிலும் ஒன்றிப்பை ஏற்படுத்தி, எமது உணர்வுலகை இது அகலிக்கிறது. ஸ்பானியப் பாலைவீட்டின் பல அம்சங்கள் எமது யாழ்ப்பாணச் சமூக வாழ்வின் வறட்சிநிலைகளை, இயல்பாகவே எமக்கு நினைப்பூட்டுகின்றன. சாதியாசாரம், உயர்குடிப்பெருமை, சீதனப் பிரச்சினை போன்றவற்றால் திருமணம் நிறைவேறாமல், உணர்ச்சிகள் மரத்து ;காய்ஞ்சு விறகுதடிகளாகும்’ ‘முதுகுமரிகளை’ – அமுக்கப்பட்ட உணர்ச்சிகளின் பீறிடலால் ஒழுக்கவரம்புகளைக் களவில் உடைத்துக்கொண்டே வெளியில், ‘தூய்மை’யைப் பூசிமெழுகிச் செல்லும் பெண்களைக்கொண்ட ‘பல பாலைவீடுகளை’ எம்மைச் சுற்றிய சமூகத்திலும் காண முடிவதால், நாடகம் அந்நியமானதாகவே இருக்கவில்லை.” என்று எழுதியிருந்தார்.
பாலேந்திரா ‘ஒரு பாலை வீடு’ நாடகத்தை வேறு இடங்களில் மேடையேற்ற விரும்புவதாகத் தெரிவித்தபோது இதில் நடித்த பெண்கள் சிலர் நடிக்க வர மறுத்துவிட்டார்கள். தாங்கள் தங்களுடைய பாடசாலைக்காக தங்களுடைய பாடசாலை மண்டபத்தில் மட்டுமே நடிக்க எண்ணம் கொண்டு நடித்ததாகவும் வேறு இடங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கூட நடிக்க முடியாது என்றார்கள். தமிழ்ப் பெண்கள் பொதுமேடைகளில் நடிப்பதை எமது சமூகம் இளக்காரமாகப் பார்த்த அந்தக் காலகட்டத்தில் இவர்கள் சமூகத்திற்கு அஞ்சினார்களோ அல்லது கௌரவக்குறைச்சல் என்று நினைத்தார்களோ தெரியாது. பாலேந்திராவிற்கு எடுக்கும் முயற்சியில் பின்வாங்கும் பழக்கமில்லை. உடனே என்னை ஒரு பாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சில மாணவிகளையும் வேறு சில பெண்களையும் சில பாத்திரங்களில் நடிக்க வைத்தார். இதில் கலா தேவராஜா, மேர்சி ஞானப்பிரகாசம், காயத்ரி போன்றோரின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
நாங்கள் புதிய நடிகைகள் என்றபடியால் பாலேந்திரா ஒத்திகைகளை மீண்டும் ஆரம்பித்தார். ஒரு புதிய தயாரிப்பாகவே இது இருந்தது. நான் ஏற்கனவே முதல் தயாரிப்பின்போது பாலேந்திராவிற்கு உதவியாக ஒத்திகைகளுக்குச் சென்றபடியால் எனக்கு முழு நாடகமும் நன்கு தெரிந்திருந்தது. நான் ஐந்து மகள்மாரில் ஒருவராக நடித்தேன். நான் நடித்த மகள் பாத்திரம் பார்ப்பதற்கு அமைதியான ஒருவராய்த் தெரிந்தாலும்; உள்ளுக்குள் குமைந்துகொண்டிருக்கின்ற ஒரு பெண் பாத்திரம். தாயின் கட்டுக்குள் இறுக்கப்பட்டு, அமுங்கிப்போன நிலையில் தனது தங்கை காதலிக்கும் இஞைனையே தானும் விரும்பி, அதனால் தங்கையுடனேயே காரசாரமாக மோதும் ஒரு பெண்.
மிகுதி அடுத்த இதழில்….
1,079 total views, 6 views today