வசந்த மாறன்
மாறன் அம்புகள் என்மீது வாரி வாரி வீசவே
கண் பாராயோ ? வந்து சேராயோ ?
காதல் என்னும் பெரும் வியப்பிற்கு மிக மிக நெருங்கியவராய் மன்மதனை உருவகிப்பது காதல் மரபு.
மாறன், மதனன், அனங்கன், அந்தகன், கந்தர்வன், மன்ராயன், ராகவிருந்தன், மதனசேகரன், சுந்தரன், ரதிமணவாளன், வில்லாளன், புஷ்பவனம், வசந்த புஷ்பத்தானுவன், மதனன், பிரத்யும்னன், பஞ்சசரன், ரதிபதி, மகரத்வஜன் எனப் பல பெயர்கள் சூட்டப்பட்டு, தேனீக்களால் உருவாக்கப்பட்ட நாண் கொண்ட கரும்பு வில்லும், மலர்க்கணைகளும் ஏந்திய காமத்தின் அதிபதியாக காமதேவன் சித்தரிக்கப்படுகிறார்.
அஞ்சுகத்தின் மீதமர்ந்து கெஞ்சும் காதலரைக் காத்திட வலம் வரும் காமனின் துணை ரதிதேவி. ரூப சௌந்தரியத்தின் சிகரம் என மன்மதனும் ரதியும் காட்சி தர, காதல் உலகின் ரசானுபவ கதைகளை உருவாக்கும் நாயகன் ஆகிறான்.
வசந்த காலப் பருவத்திற்கு உரித்தான காமன், மகரக் கொடியுடன் இருப்பதை கி.மு. முதலாம் நூற்றாண்டு கவிஞர் காளிதாசன் பாடுகிறார் .அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் பலதும் குறிப்பிடும் காமனைப் பற்றிய குறிப்புக்கள் உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலும் இருக்கிறது. இதிலிருந்து காதலின் பழமை கூட புலப்படுகிறது. காமாமே பிரபஞ்சத்தின் வித்து.
நெடியோன் மகன் என இயம்பும் கலித்தொகைப் பாடலில் இருந்து திருமாலின் மகன் காமன் என்று அறியப்பட்டாலும், பிரம்மாவின் மானசீக மகன் எனவும் புராணங்கள் கூறுகிறது. கண்ணனுக்கும், ருக்மிணிக்கும் பிறந்த பிரித்தியும்னன் காமனின் அவதாரம் என்றும் கூறப்படுகிறது.
விரைமலர் அம்பினோன் என்றும், அரி படு ஐவரை என்றும் பரிபாடலில் குறிப்பிடும் மாறனின் ஐந்து மலர்கணைகளும் தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, நீலோத்பலம் என விரிகிறது.
நாராயணனுக்கே தன் உடல் உயிர் யாவற்றையும் சங்கல்பித்து காத்திருக்கும் ஆண்டாள், காமனின் தம்பி சாமானையும் வேண்டி நோன்பிருக்கிறாள்.
காதலர் மனத்தைக் கடைபவனாக இருக்கும் காமனைப் பணியாத காதல் இலக்கியங்கள் இல்லை.
” பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான் ” – திருக்குறள்
பாரதியின் சந்திரிகையின் கதையிலும் , ஞானரதத்திலும், , குயில்பாட்டிலும் சொட்டும் காதல் ரசம் பருகப் பருக சுவைதரவல்லது.
பாரதியின் ஞானரதத்தில் மன்மதன் பூஜை, மன்மதன் தகன கதை, வசந்த காலம், காமன் திருவிழா , எனப் பலதும் குறிப்பிடப்பட்டுள்ளது. காமன் பண்டிகையும் தமிழர் மரபேயாகும்.
மன்மதனின் மலர்க்கணைகள் வீசப்பட்டால், இயற்கையோடு இணங்கி நிற்பதும், மன்மதனை தியானிப்பதும் ஒன்றென ஆகும் காலமாகிவிடும். பாடுகின்ற குயில்களும், கூடுகின்ற முகில்களும், சந்தம் சிந்தும் அலைகளும், கடலும் வானும் தழுவிய காட்சியும், மனம் மயக்கும் மாருதமும், மலர் தீண்டும் வண்டும், சந்திர கிரண ஜோதியும், இத்தகை எழில் கொஞ்சும் காட்சிகளில் நுழையும் இசையும், உள்ளுயிரிலே புகுந்து இனிய சலனங்கள் தருவதும், மனோகர சுகந்தம் வீசும் நினைவுகளை மீட்டி மீட்டி பார்ப்பதுவும் மதனன் மனிதனுக்கு தரும் வரன்கள்.
ஆ!! இத்தனை இன்ப மிகுதியை மனிதன் உள்வாங்கும் போது தேவனாகிறான். துன்ப நினைவுகள் தூர விலகிச் சென்று காதல் சுடரினில் காணாமல் போய் விடுகின்றன. மதன மேடையில் சினமும் அச்சமும் முகவரி தொலைக்கின்றன. உயிர்கள் ஒன்றை ஒன்றை உறிஞ்சிக்கொள்ளும் வேகத்தில் ஆணவம் மொத்தமாக மாய்க்கப்படுகின்றது.
அந்தப் பெருங்களியில் கண்ணயர்ந்து விழித்திடும் போதெல்லாம் மீண்டும் பிறந்தது போல புத்துணர்வு பெருக்கெடுக்கும். மாய அறிவினை மாறன் கணைகள் மாய்கின்றன.ஆலிங்கன பொழுதுகள் பொற்காலம் ஆகின்றன , போர் அழிகின்றது. மனத்திடை அன்பின் தீ ஒளிர்கின்றதால் தீய எண்ணங்கள் ஒழிகின்றது. காதலின் முயக்கத்தில் சொற்கள் பயனற்றதாகிறது. மோனத்தின் வெளியில் மௌனத்தின் மேன்மை புலப்படுகிறது. அத்வைதம் நிலவுகிறது. உண்மை தெரிகிறது. இதுவே பிறவிப் பயணம்.
இவ்வாறு கோடி கோடி இன்பத்தில் திளைத்து முக்தி பெரும் யுக்தியை காட்டுகிறார் பாரதி. மானிட பிறவியின் மகத்துவத்தை அன்பின் பாதையில் காட்டித்தருகிறார். காதல் அப்பாதையின் செங்கம்பளமாகிறது. அவ்வழியெல்லாம் மாறனின் கணைகள் வாரி வாரி வீசி சுகந்தம் நிரப்புகிறது. மதனன் இவ்வழியின் ஒளி விளக்காகிறான். இயக்கமாகிறான். ஆக, மன்மதன் முதன்மைப் படுகிறான்.
ஒன்று உறுதி ! காதலாகிக் கிடப்பதே கடத்தலின் ஏக வழி !!
1,301 total views, 2 views today