நான் பார்த்த நந்திக்கடல்!
பொன்.புத்திசிகாமணி.யேர்மனி.
நந்திக்கடலைப்பற்றி பெரும்பாலானவை செவி வழிக்கேட்டவைகளே அதிகம். இவைகளில் உண்மை இல்லாமலும் இல்லை.கவிஞர் முல்லையூரான் தனது ஆக்கங்களில் பெரும்பாலான இடங்களில் நந்திக்கடலின் அழகையும், செழுமையையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியிருக்கிறார். அவர் இன்று இல்லையாகிலும் அவர் படைத்த பல இலக்கியங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
பெரும்பாலான காலங்களில் கோடையில் நீர் வற்றி நந்திக்கடல் திடலாகும். நான் அன்று எழுதிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையில் நந்திக்கடல் எவ்வளவோ மாற்றங்களைக் கண்டுள்ளது. உருவத்தாலும், வளத்தாலும், மீனவர்களின் வரவின்மையாலும்,நீர் இருந்தும் வரட்சியானது போல்.காட்சி தருகிறது.
இந்த மாற்றங்கள் காலத்திற்குக் காலம் வரலாறாக வேண்டும். அதற்காகவே இக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன். எனக்குப்பின் இதன் வரலாறு எழுதுபவர்களுக்கு நான் எழுதிய காலத்தில் நந்திக்கடல் எப்படி இருந்தது என்பது தெளிவாகும். நந்திக்கடல் எங்கள் ஊரின் முக்கிய அடையாளம். சிறுவயதில் இருந்தே இதனைப் பார்த்து வளர்ந்தவன் நான். நீந்திப்பழகியதும் இந்தக்கடலில் தான். பாடசாலை நாட்களின் பெரும்பகுதி சின்னவயதில்,நண்பர்களுடன் இங்கேதான் செலவழிந்தது. எங்கள் ஊரில் சிறியவர்கள் நீந்திப் பழகுவதற்கான நீச்சல் குளம் இதுதான்.பாலத்திற்கு அப்பால் வடக்குப்பக்கமாக அமைந்திருக்கும் வடக்காறு ஆழம் அதிகம் என்பதனால் சின்னவயசில் நீந்துவதற்கு எங்களுக்கே பயமாக இருக்கும்.குறிப்பிட்ட வயசுவரை அந்தப்பக்கம் போனதில்லை.அதற்கு அறவே அனுமதியு மில்லை. நந்திக்கடல் எங்களின் விருப்பத்திற்குரியது எங்களின் சொத்து,என்கிற இறுமாப்பும் உள்ளூர இருந்திருக்கிறது.
மாங்குளம் வீதியில் ஐஞ்சாங்கட்டை சங்கிலிப் பாலத்திலிருந்து தொடங்கும் நந்திக்கடல்.மேற்பக்கமாக வற்றாப்பளை, கேப்பாபிலவு,புதுக்குடியிருப்பு கிழக்கு வரை தொடர்ந்து பரந்தன் வீதியில் இரட்டை வாய்க்கால் மதகுகளுக்கு கீழால் ஓடி,வலையன்மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன்,பேப்பாரைப்பிட்டி,நல்ல தண்ணித்தொடுவாய்,சாலைவரை தொடர்ந் திருந்து வளம் கொடுக்கும்.
கீழ்பக்கமாக மாங்குளம் வீதியின் வயல் வெளி, கரையோரமாக இரண்டு கிலோமீற்றர் வரை சம புல்வெளி(இந்த வெளியில் தான் மாட்டு வண்டிச்சவாரி பல வருடங்களாக நடைபெற்றது.) வட்டுவாகல் வயல்வெளிக்கு மேலாக ,கரைச்சி வெளிதாண்டி நாங்கள் நீச்சலடிக்கும் கூர்வரை தொடரும் இங்குதான் நந்திக்கடல் முடிவடையும். இதுதான் நாங்கள் நீச்சலடிக்கும் கூர். நந்திக்கடல் முடியும் இடத்தை கூர் என்று அழைப்பதுண்டு. இதன் அந்தக்கரையும் இந்தக்கரையும் ஏறக்குறைய இருபது மீற்றர் அகலம் தான் இருக்கும்.நீந்திவிளையாடுவதற்கு ஏற்றவாறு அதிக ஆழமும் இல்லை.பள்ளிக்கூடத்தில் போடும் திட்டம் நிறைவேறும் இடம் இந்தக்கூர்தான்.
பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அவசரமாக ஓடிவந்து கால்சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு,ஆரும் கழற்றி எறிந்த கோவணத்துண்டுகளை எடுத்துக் கட்டிக்கொண்டு குதூகலத்துடன் நீச்சலடித்த காட்சி மனதில் விரிகிறது. அந்தக்கரைக்கும் இந்தக் கரைக்குமாக போறதும் வாறதுமாக நீச்சல் அடிப்போம். நீருக்கு அடியால் சுழியோடி அந்தக் கரைவரை போவதும் குதூகலம் தான்.
இரவு நேரத்தில் இந்த இடத்தில் அதிகம் றால் வீசுவதால், சேறின்றி மணலாக இருக்கும்.அது எங்களுக்கு வசதியாக இருந்தது. இதன் அருகில்தான் எங்கள் சப்தகன்னிமார் ஆலயம். ஆலயம் இருந்த இடம் மேடாக இருக்கும். வீட்டில் தேடுவார்கள் என்ற நினைப்பே இல்லாமல் சந்தோசத்தில் பொழுது கழியும்.பள்ளிக்கூடம் முடிந்தும் இவ்வளவு நேரம் பிள்ளைகளைக் காணவில்லையென்று வீட்டில் தேடத்தொடங்கி விடுவார்கள்.
நிமிர்ந்து பார்த்தால் நீளத்தடியுடன் கோயில் புட்டியில் அம்மா தடியோடை நிற்பா காளிமாதிரி. கூப்பிடுற தொனியில் தண்ணீருக்குள் மூத்திரம் போய் விடும்.அவ்வளவு பயம்.கரைக்கு வரவே பயமாக இருக்கும். என்ன செய்வது வந்தே ஆகவேணும். அம்மாவின் கைத்தடி அந்தமாதிரி விளையாடும்.மூன்று குற்றச்சாட்டுகள் பள்ளிக்கூடம் விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்கு, நீச்சலடித்து,கடலில் மூழ்கிச் சாகப்போறியோ என்று, அடுத்து ஆற்றையும் கோவணத்துண்டை எடுத்துக் கட்டியதற்கு.
இரண்டொரு நாளில் இதையெல்லாம் மறந்து விடுவோம் மீண்டும் இதே பல்லவிதான்.இரண்டு ஒல்லித்தேங்காய்களைக் கட்டி பழகிய நீச்சல் பயிற்சி பின்னாளில் கிலோமீற்றர் வரை நீந்தக் கற்றுத்தந்தது.எங்களுக்கு நந்திக்கடலில் நீந்திவிளையாட என்றைக்குமே பயம் இருந்ததில்லை.இது எங்கள் கடல்,எங்களின் கடல் அன்னை என்று நினைத்ததுண்டு. எங்கள் மீது இதற்குப் பாசம் இருக்குமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
நந்திக்கடல் பரந்த பிரதேசம்.மாரிகாலங்களில் பல கிலோமீற்றர் வரை தொடர்ந்திருக்கும்.இரைவிழுங்கிய மலைப்பாம்பு போல் உப்பி நீர் நிறைந்திருக்கும்.அப்போது பரந்து விரிந்த அந்தக் கடலைப் பார்க்கவே பயமாக இருக்கும். சோளகக் காற்று சுழன்று வீசும் காலத்தில் அலையெழுந்து வீழும்.காவி நிறத்தில் தண்ணீர் கலங்கி இருக்கும்.இது அந்த நேரத்தில் மாத்திரமே.மற்றும் வேளைகளில் குளம் போல் காட்சி தரும். கீழ்பக்கமாக மாங்குளம் வீதியின் வயல் வெளி, கரையோரமாக இரண்டு கிலோமீற்றர் வரை சம புல்வெளி(இந்த வெளியில் தான் மாட்டு வண்டிச்சவாரி பல வருடங்களாக நடைபெற்றது.) அங்கங்கு உடல் வேலை மரங்களும்,விடத்தல் மரங்களும் காணப்படும் கரைச்சிக்குடியிருப்புக்கு மேல் வயல் வெளி வட்டுவாகல் வயல்வெளிக்கு மேலாக ,கரைச்சி வெளிதாண்டி நாங்கள் நீச்சலடிக்கும் கூர்வரை தொடரும் இங்குதான் நந்திக்கடல் முடிவடையும். இதுதான் நாங்கள் நீச்சலடிக்கும் கூர்.
ஒருபக்கம் கிளைவிட்டு மேற்குப் பக்கமாக அளம்வரை நீர் நிறையும்.மாரிகாலத்தில் நீர்நிறைந்து சமுத்திரம் போலக் காட்சி தரும். கோடையில் நீர் வற்றி வெண்மணல் பரப்பியது போல் இருக்கும்.மணல் அதிக ஆழம் என்றில்லை. அடியில் கடாராக இருக்கும்.அந்த நேரங்களில் எங்களின் விளையாட்டு மைதானம் இதுதான்.உதைபந்தாட்டம்,ஊரின் புதுவருட விளையாட்டுப் போட்டிகள்,புதிதாகச் சைக்கிள் பழகுவோர்,கார் பழகுவோர் என்று பல வழிகளிலும் இது பயன்படும். அளம் என்ற உப்புச்சேர்ந்த நிலப்பரப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் உண்டு. நந்திக்கடலோரம் தில்லை,நொச்சி,மருத,முள்ளி,வாகை என்ற மரங்கள் பச்சைப் பசேலென இந்ந்திக்கடலை எப்போதும் அழகு படுத்தும்.
1,081 total views, 2 views today