நான் ஏன் ஒரு தனி வாழைப்பழம் ஆனேன்!
வருடம் ஒன்றுக்கு யேர்மனியில் 50 மில்லியன் பழங்கள் வீணாகிறது!
தாயகத்தில் நாம் வாழ்ந்த காலத்தில் வாழைப்பழம், கடைகளில் குலை குலையாக தொங்கும்.திருமண வீடுகளில் வாசலில் இருமருங்கிலும் பழுத்த வாழைக்குலைகள் தொங்கும். குலையில் உள்ள ஒவ்வொரு பழமும் தடித்த பெருத்த திரண்ட பழமாக இருக்கும். அவற்றைக் கண்டால் எவர்க்கும்; ஒன்று பிடுங்கவே தோன்றும்.
நாம் சிறு வயதில் எவரும் பார்க்காத வேளை பழத்தை முறுக்கி பிடுங்கிக்கொண்டு ஓடுவோம். பெரும்பாலும் பெண்பிள்ளைகள் இந்த கள்ள விளையாட்டில் ஈடுபடுவது குறைவு. யாரும் ஈடுபட்டு இருந்தாலும் தப்பில்லை.
தப்பில்லை என்பதற்கு காரணம், நம்ம ஊரில்,சில திருட்டுக்களை திருட்டுக்களாக எடுப்பதில்லை, மாங்காய் திருட்டு, நாவல் பழம் திருட்டு, இளநீர் உட்பட பல திருட்டுக்களை, பெரியமனிதர்கள் இதனை இளசுகள் செய்தால் மகிழ்வுடன் கண்டும் காணாமல் போய்விடுவார்கள்.
கடைகளில் வாழைக்குலைகள் தொங்கினால், நாம் எந்த சீப்பு பழம் வேண்டும் என்று காட்டுவோம், அவர்கள் பக்குவமாக அக்கம் பக்கம் பழம் காயப்படாமல் வெட்டித் தருவார்கள். குலையில் ஒரு பழமும் வீணாகாதவாறு பார்த்து பார்த்து வெட்டி தருவார்கள். ஒரு பழம் மட்டும் கேட்டால் அதற்கும் கவனமாக அருகில் உள்ள பழம் சிதையாமல் வெட்டி தருவார்கள்.
அங்கு குலைகளில் ஒரு பழம் பிடுங்குவதற்கும் மேற்கு நாடுகளில் சீப்பு சீப்பாக இருக்கும் வாழைப்பழத்தில் ஒரு பழம் பிடுங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தாயகத்தில், குலையில் நம் கண்ணெதிரில் ஒரு பழம் பிடுங்குவது என்றால் தனிப்பழமாக இருந்தாலும் பிடுங்கி தந்தால் அது நல்லபழம் என்று வாங்குவோம் .
ஆனால் வெளிநாடுகளில் சீப்பு சீப்பாக இருக்கும் வாழைப்பழத்தில் மூன்று பழம் தேவை என்றாலும், தனிச்சீப்பில் இரு பழமும், இன்னும் ஒரு சீப்பில் ஒரு பழமும் பிடுங்குவார்கள்.
முதல் வாங்குவர் ஒரு சீப்பில் 3 பழமிருக்க 2 பழம் பிடுங்கிவிட்டு ஒரு பழத்தை விட்டு விட்டு போவார். இனி அடுத்தவர் ஒரு பழம் தேவை என்றல் அங்கு தனிய இருக்கும் ஒரு பழத்தை எடுக்காது, மீண்டும் 6
பழம் உள்ள சீப்பில் ஒரு பழம் பிடுங்கிச் செல்வார்கள். இங்கு இரண்டு பழமோ, ஒரு பழமோ சீப்பில் இருந்து பிடுங்கினால்த்தான், நல்லது என்று மனம் எடைபோட்டு விடும், இதனால் நூற்றுக் கணக்கான நல்ல தனி வாழைப்பழம் எவரும் வாங்காது அழுகி வீணாகிவிடும்.
தனித்து இருக்கும் நல்ல பழங்களில் 2 தேவையானோர் எடுப்பார்களா இருந்தால், எவ்வளவு உதவியாக இருக்கும், உற்பத்தியாளர்களுக்கு, இந்த உலகிற்கும் என்று எண்ணுங்கள்.
கடந்த வருடம் மட்டும் யேர்மனியில் தனிப்பழம் கூடாது என்று சீப்பில் ஒரு பழம் பிடுங்கியவர்களாலும், தனிப்பழத்தை எடுக்காதவர்களாலும் மட்டும் 50 மில்லியன் நல்ல வாழைப்பழங்கள் வீணாகிவிட்டன. இதனை எண்ணிப்பாருங்கள். பிற நாட்டவர்கள் செய்தால் அவர்க்கு வாழைப்பழம் உரிக்கும் பக்கமே தெரியாதவர்கள், ஒரு குலையை முழுதாக மரத்தில் காணாதவர்கள், ஒரு வாழை ஒரு குலைதான் போடும் என்பதனை அறியாதவர்கள், எப்படி என்றாலும், நடக்கட்டும். ஆனால் எமது அப்பு, ஆச்சி, உருவாக்கிய வாழைப்பழம், அதன், கஷ்டம், பெறுமதி தெரிந்தவர்கள், 50,மில்லியன் பழங்கள் வீண்போகுது என்றால் நெஞ்சு பொறுக்குமா!
தற்போது சில கடைகளில் எம்மால் பிரிக்கப்பட்டு தனிப்பழமாக்கப்பட்ட வாழைப்பழங்களை, குறைந்த விலையில் தனிப்பழங்களாக விற்கிறார்கள். ஒரு பழம், இரண்டு பழம் எடுப்பவர்கள் அதிலிருந்து, எடுத்து உதவலாம். இந்த உதவி உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கே நன்மையாக வரும் என்பதை நம்புங்கள். தனிப்பழமும் வாழைப்பழம்தான் நம்புங்கள், பிறரையும், நம்பவையுங்கள். இதனை நமது தமிழ் கடைகளிலும் பின்பற்றுங்கள். கப்பல்பழம், இதரைப்பழம், கதலிப்பழம், இவை, தனித்திருந்தாலும் அவை அவற்றின் சுவைதான் மாறுமா?
968 total views, 6 views today