கடன் சுழ் உலகம்!
.
பிரியா.இராமநாதன்.இலங்கை
நல்ல கடன்காரன் என்றால்! நீங்கள் அச்சம் தவிருங்கள்!
இது நிச்சயமாக இலங்கை உலகத்திடம் வாங்கிய கடனால் படும் அவஸ்த்தை பற்றது அல்ல. இது தனி மனிதனின் நிலைபற்றிது. சிலர் அவன் நல்ல கடன் காரன் என்பார்கள்.அதன் அரத்தம் நேரடியாக பொல்லாத கடன்காரன் போல் தோன்றியாலும்,இறுதியில் நல்லகடன் எது? கெட்ட கடன் எது என்பதை ஓர் அளவு புரிய வைக்க முயல்கிறேன்.
“கடன் அன்பை முறிக்கும்” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல, அது நம் முன்னோர்களின் அனுபவப்பாடம்.
கடனில்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என தேவைகள் அதிகமில்லாத நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கலாம். ஆனால்,இன்றைய நவீன யுகத்தில் கடனில்லாத வாழ்க்கையென்பது சாத்தியம்தானா? “கடவுளாகவே இருந்தாலும், வாழ்க்கையில் என்றாவது ஒரு நாளேனும் கடன் வாங்கியேயாகவேண்டும், கடன் என்ற பிடியில் சிக்காத மனிதனே இல்லை “,என்கிற அளவுக்கு நமது வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. இதற்கேற்ப முன்பு எப்போதையும் காட்டிலும் இப்போதெல்லாம் கடன் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் பல மடங்குகளாக அதிகரித்துள்ளன என்றால் மிகையில்லை. கடன் கொடுப்பதற்க்கென்றே வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்து இழுக்கின்றன வங்கிகள். தொலைக்காட்சிகளில் சரிபாதி விளம்பரங்கள் வீட்டுக்கடன், வாகனக்கடன் வழங்குவது பற்றியே. இதுதவிர தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவ செலவு என அனைத்து வகைகளிலும் கடன் வாங்குவதென்பது இன்று அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்களுக்கான இன்ஸ்டால்மெண்ட்,கிரெடிட் கார்ட் போன்றனவும் கடனுடன் சேர்ந்தவையே.
முன்பெல்லாம் ஒரு இக்கட்டின்போது மற்றவர்கள்முன் பணத்துக்காக தலைகுனிந்து நிற்பது அவமானமான ஒரு செயலாக கருதப்பட்டது. ஆனால் இன்றோ, கடனுக்கு மிக அழகிய முலாம் பூசப்பட்டுவிட்டது! கடன் வாங்குவதே மிகப்பெரிய கௌரவம் எனும் நிலை வந்திருக்கின்றது. "எனக்கு கடன் கொடுக்க எதனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?" என சொல்லிக்கொள்வதே பெருமைக்குரியவொன்றானது. நாகரீக வாழ்க்கையில் கௌரவத்தின் ஓர் அங்கமாக வங்கிகளின் "கடன் அட்டைகள்" முக்கிய இடம்பிடித்துள்ளன. கடனட்டைகளை வைத்திருப்பது அந்தஸ்தில் உயர்நிலையில் இருப்பதாக வெளி உலகுக்கு காட்டிக்கொள்ளும் அடையாளமாக மாறிப்போனது. கடன் வாங்குவது தவறில்லை என்ற எண்ணம் பரவலாக பரப்பப்பட்டுள்ளது. நாம் ஒருவரிடம் எந்தப்பொருளை கைமாற்றாக கேட்டு வாங்கிக்கொண்டாலும் அது கடன்தான். ஆனாலும் "கடன்" எனும் சொல் நடைமுறையில் வாங்கிய பணத்திற்கு மட்டுமே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. "நான் எவருக்குமே கடன் பட்டதில்லை" என்று பெருமைபட்டுக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை."கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என,கடன் ஏற்படுத்தும் மனசுமைகளை குறித்துக்காட்டினாலும் அதை வாங்குவது தவிர்க்கவியலாததோ? வரலாற்றுக் கதையொன்றில், மரணப்படுக்கையில் இருந்த சாக்ரடீஸ் அருகிலிருந்த தன் நண்பரிடம் தன்சார்பில் அண்டை வீட்டிற்கு ஒரு கோழியை திருப்பிக்கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இந்த நிகழ்வு உணர்த்தவருவது எதனை? நாணயமான மனிதர்கள் எவருமே கடனோடு இறக்க விரும்புவதில்லை என்பதையோ?
பொதுவாக பார்க்கையில் தக்க சமையத்தில் கிடைக்கின்ற உதவிதான் "காலத்தினால் செய்த நன்றியாக"பரிணமிக்கிறதுபோலும். பணத்தை மையமாககொண்ட,முற்றிலும் வணிகமயமாகிவிட்ட வாழ்க்கை முறையில் "உடுக்கை இழந்தவன் கைபோல" அவசரத்துக்கு பணம் தந்து உதவுவதுதான் ஆழமான நட்பின் வெளிப்பாடு என்பது இன்றைய புதுமொழியோ? அதனால்தானோ என்னவோ வங்கிகளும் "உற்ற நண்பனாக " தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கின்றன. வேலைக்கு சேர்ந்தவுடனே சம்பளத்துக்காக வங்கிக்கணக்கு ஆரம்பிக்கும்போதே கிரெடிட் கார்டும் கிடைத்துவிடுகிறது.
“கடன் ” என்பது ஓர் சமூகத் தீமையா ?
கடன் பற்றிய நம் சமூகத்தின் பார்வையே வேறு, கடன் என வருகிறபோது இன்னுமே பலர் கட்டுப்பெட்டியாகவே இருக்கிறார்கள். தப்பு,தீமை,குற்றம், அவமானம் என்று கடன் வாங்குதலையே செய்யக்கூடாத செயலாக வகைப்படுத்திவைத்திருக்கிறோம் நாம்!”கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டுவதெல்லாம் ஒரு பிழைப்பா? என சொல்பவர்களின் கூற்றில் நியாயமில்லாமல் இல்லை. கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து நடுத்தெருவுக்கு வந்தவர்களும் எண்ணிக்கையில் அதிகம்தான். இதனால்தானோ என்னவோ கடன் தவறு என நினைப்பவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இதுபோன்ற ஊதாரிகளே. கடமைகளை நிறைவேற்ற கடன்வாங்கி பின் சிரமப்படுபவர்களும் கடன் என்றாலே தொல்லைதான் எனக்கருதி புலம்பிதள்ளுவதுண்டு. ஆனால், கடன் என்பதே ஒரு சமூகத் தீமைதான் என்பதுபோல் பார்க்கப்படுவது எந்தளவு சரியானது ?
கடனின் இன்றியமையாமை தற்கால சூழலில்!
மிகவும் உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் முதற்கொண்டு, அடித்தட்டு மக்கள்வரை,எத்தனைபேர் “கடன்” என்ற விடயத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், இனியும் பயன்படுத்தப்போகிறார்கள்! இன்று சமூகத்தில் நிமிர்ந்து நிற்கும் எத்தனை மிகப்பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் கடனின் பங்களிப்பு இருந்துகொண்டிருக்கும்? எல்லோருமேயென்ன கையில் முழு மூலதனத்துடனா தொழில் ஆரம்பித்திருப்பார்கள்? எத்தனை தொழில் முனைவோர்க்கு, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த கடன் என்ற விடயம் கைகொடுத்திருக்கும்? உரிய நேரத்தில் அந்த உரிய தொகை கிடைத்திராவிட்டால் ? கடன் என்ற ஓன்று இல்லையென்றால் இலட்சக்கணக்கான மத்யதரக் குடும்பங்கள் வீடு கட்டியிருக்க முடியாது. தானும் ஒரு வாகனத்துக்கு உரிமையாளனாக வேண்டும் என்ற ஆசைகள் ஈடேறியிராது. வாழ்க்கையில் தேவை ஏற்படும்போது கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது. இன்றெல்லாம் படிப்பதற்கே கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை. படித்து முடித்தபின் முதல் சம்பளத்திலிருந்தே கடனை திருப்பிச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகவே நன்றாக படிக்கக்கூடிய ஒரு மாணவன் தன்னுடைய கல்வியினை பாதியில் கைவிட வேண்டியதில்லையே? கல்விக் கடன் என்ற பெயரில் வங்கிகள் கைகொடுப்பதனைகூட நிராகரித்து,இல்லை இல்லை நாங்கள் கடன் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என மறுப்பின் அது மிகப்பெரிய முட்டாத்தனமன்றோ ?
கடன் ஏன் வாங்குகிறோம் ? என்ற கேள்விக்கு “பற்றாக்குறைதான் ” என்று சொன்னால், அதுமட்டுமே சரியான பதிலாக இராது. ஏழைகள் மட்டும்தானா கடன் வாங்குகிறார்கள் ? மிகப்பெரிய செல்வந்தர்களும்கூட தொழில் முன்னேற்றதிற்காக கடன் என்கிற பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லவா ? ஆக, ஒவ்வொருவருக்குமே கடன் வாங்குதலை நியாயப்படுத்துவதற்கான ஏதேனும் ஓர் காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால்,இங்கே “நியாயமான காரணம்” என்ற ஒன்றை நாம் மனத்தில்கொள்ளவேண்டும்! அப்படியா யின் நியாயமான காரணங்களுக்காக கடன் வாங்கலாமென்றால், எவையெல்லாம் நியாயமான காரணங்கள் ? காரணங்கள் என்று சொல்வதைவிட சூழ்நிலைகள் அல்லது தருணங்கள் என்று சொல்வதே இன்ன மும் பொருத்தமானதாக இருக்கும். இக்கட்டான நிலையொன்றில் ஏதாவது செய்து நிலைமையை சமாளிக் காவிட்டால் ஒருவரின் வாழ்க்கை அல்லது தொழில் அல்லது எதிர்காலம் மொத்தமுமே அழிந்துவிடக்கூடிய ஆபத்தான கட்டத்தில் ஒருவருக்கு கடன்தான் கடவுள்! கடன் தருகிறவர்கள்தான் உண்மையில் வரம்கொடுக்கும் கடவுள். “கடவுளாட்டம் வந்து காப்பாத்தினீங்க, உயிர் இருக்கறவரைக்கும் இந்த உதவிய மறக்கமாட்டம்” என, அடி மனதிலிருந்து வெளிப்படுகின்ற இந்த வாக்கியத்தை எத்தனைமுறை கேட்டிருப்போம் , சொல்லியிருப்போம்? இன்றைய கடன் நாளை ஏட்படவிருக்கும் பெரிய இழப்பினை சரிசெய்யும் என்றால் நிச்சயம் இந்த இடத்தில கடன் தவறில்லையே ? உதாரணதிற்கு திடீர் விபத்தொன்று ஒப்பரேஷனுக்கு உடனே பணம் கட்டியாகவேண்டும் இல்லை உயிர்பிழைப்பது கஷ்டம் என்ற நிலையிலோ, ஸ்கூல் பீஸ் கட்டாவிட்டால் நாளை பரீட்சை எழுதமுடியாது நிலை குழந்தையின் ஒருவருடப் படிப்பு வீணாகும் நிலை இந்த இடத்தில என்ன முடிவெடுக்க முடியும் நம்மால்? எப்படியாவது கடனை வாங்கியேனும் அப்போதைய நிலைமையினை சமாளிக்கத் தோன்றும் இல்லையா? பிரச்சினை என்பது கடன்படுத்தலில் அல்ல, மாறாக வாங்கிய கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தவேண்டும் என்கிற எண்ணமும் உத்வேகமும் தேவை முடிந்தபின் இல்லாமல்போவதுதான் இங்கு பலரிடத்தில் காணப்படும் பிரச்சினையே !
நான் வாசித்த ஓர்விடயமதனையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன், அதாவது "செலவு மேலாண்மை யின்படி வெற்றிகரமான நிதி "ஆலோசகர்" யார்..? என்ற கேள்விக்கு, எவர் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு, அதிக அளவில் பல முனைகளில் இருந்தும் கடன் பெற்றுத் தருகிறாரோ, அவர்தானாம் வெற்றிகரமான நிதி ‘ஆலோசகர்’.நம்மிடம் இருக்கிற நிதியை வைத்துக்கொண்டு, அதற்குள் ‘வியாபாரத்தை’ நடத்திக் கொண்டு, சிறிது சிறிதாக வளர்ந்தால்போதும் என்கிற எண்ணம், நவீன மேலாண்மைச் சிந்தனையாளர்களைப் பொறுத்தமட்டில், பிற்போக்குத் தனமானதாம். "பிசினஸ{ன்னாலே, ரிஸ்க்குதானே..? அப்புறம்..?கடன் வாங்கறதுக்குப் பயந்தா, பொட்டிக் கடையிலயே, வாழ்நாள் முழுக்க முடங்கிக் கிடக்க வேண்டிய துதான்" என்று யாரேனும் சொன்னால், "வீராப்பு" பேசுகிறான் என்று ஒதுக்கிவிட முடியாது. தனது வியாபாரத்தில், அடுத்தநிலைக்குத் தாவத் தயாராக இருக்கிறான் என்று பொருள் என பொருளாதாரநிபுணர் கள் கருதுகிறார்கள்.
கடன் வாங்குவதும் அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்துவதும், அது தீர்ந்ததும் அல்லது அதற்கும் முன்னதாகவே மேலும் வாங்குவதும்… ஒரு சங்கிலித் தொடர் நடவடிக்கை போன்றது, வியாபாரமாக இருந்தாலும், குடும்பம் சார்ந்ததாக இருந்தாலும், முன்னேற்றத்துக்கான அடுத்தப் படிக்கு நம்மை அழைத்துச் செல்வதில், “கடன்” போன்ற சிறந்த சாதனம் இல்லை. “மொத்தமாக கையில் வச்சிக்கிட்டு,ரொக்கமா குடுத்து வாங்கவேண்டும” என்று யார் சொன்னாலும் அந்த மனிதரை, இன்றைய பொருளாதாரச் சிந்தனையாளர்கள், ஒரு பித்துக் குளியாகத்தான் பார்ப்பார்கள். “கண்ணை மூடிக்கொண்டு” கடன் வாங்கச் சொல்லவில்லை. முயற்சித்தால் கிடைக்கும்; அதன் மூலம், நல்ல எதிர்காலம் அமையும் என்றால், அந்த வாய்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும்? நீண்ட கால நன்மைக்கு, மதிப்பு கூடிக்கொண்டே போகிற ஒரு சொத்துக்கு, இன்று நாம் கடன் பெறுகிறோம் என்றால், என்ன தவறு இருக்க முடியும்…?
நல்லதா, கெட்டதா?
கடன் குறித்த இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லிவிட முடியாது. அது தேவையை பொறுத்தது. அத்தியாவசிய தேவை, ஆடம்பர தேவை இதைப் பொறுத்துதான் கடன் வாங்குவது நல்லதா கெட்டதா என்பதை முடிவு செய்ய முடியும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்து.மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் ஒருவருக்கு பைக் அவசியமானதாக இருக்கும். அவரது தொழிலில் நீடிக்க முடியும். வருமானம் அதிகரிக்க முடியும் என்கிற நிலையில் வாகனக் கடன் அவசியமாகிறது. அதே நேரத்தில் வருமானத்தில் பல கடன்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு நடுத்தர குடும்பம் வாகனக் கடன் வாங்க ஆசைப்படுவது வருமானத்துக்கு மீறியது. சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனிநபர் கடன் வாங்கினால் அது சுமையாக மாறிவிடும்.கடன் குறித்த பயமும், பயன்பாடும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதாவது நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
-இருபுறமும் கூர்மையான கத்தி –
கடன் வாங்கவேண்டும் என்று முடிவெடுப்போமாயின், மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் முடி வெடுக்க வேண்டும். காரணம், கடன் இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது. பார்த்து கவனத்துடன் கையாள வேண்டும். கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடாது எனும் கருத்தை வலியுறுத்தும் பொருட்டு “கடனே கூடாது “என்று கூறப்படுமாயின், “கத்தியால் காயம்படும், கொலைக்குரிய கருவி என்பதால் கத்தியை பயன்படுத்த மாட்டேன் ” என்பதற்கு ஒப்பானதே.அப்படியானால், கடன் வாங்கும்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்னென்ன.? கடன் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் செய்யும். அதேநேரத்தில் வரம்பு மீறிச் சென்றால் நமது வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கவும் செய்துவிடும். சரியாகப் பயன்படுத்த தெரிந் தால் கடன் வாங்குவதும் நல்ல வாய்ப்புதான். ஆனால் வாங்குவதற்கு முன் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து செயற்படுதல் அவசியம். ஏனெனில்,இன்றைக்கு வரும் ‘குடும்பத்துடன் தற்கொலை’ என்ற செய்திகள் நூறு சதவிகிதம் கடன் சுமையின் பரிசேயாகும். இந்த மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகள், நம்மைச் சுற்றிலும் ஏராளமாய் இருக்கின்றன. “கடன் ” அது தான் அடிப்படை காரணம். மிக மோசமான, அருவருக்கத்தக்க செயல்கள் கடன் வசூலிப்பவர்களால் கடனை வசூல் செய்ய பயன்படுத்தப் படுகின்றன. கணவர் கடன் வாங்கியிருந்தால், நா கூசாமல் “மனைவியை அனுப்பிவை” என்கிற அளவுக்கு அநாகரிகமும், அராஜகமும் சர்வ சாதாரணமாகக் கையாளப்படக்கூடும். கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருக்கும் அவஸ்தைகளும், அவமானங்களும், அலைக்கழிப்புகளையும் கொண்டு ஒரு நீண்ட தொடர்கதையே எழுதலாம்.
கடன் சுமை அழுத்தும்போது சேர்த்துவைத்த நகை தொடங்கி வீடுவாசல் இருக்கின்ற சொத்தெல்லாம் கையைவிட்டுப்போகும் நிலை உருவாகக்கூடும். எனவே எல்லாவற்றைலுமே ஒரு கையாளும் திறன் வேண்டும். எதிர்காலத் தேவை அறிந்து கடன் வாங்குவது மிகவும் அவசியமானவொன்று. ஏனெனில், இன்றைய வருமானத்தையும் செலவையும் மட்டும் மனதில் வைத்து கடன் வாங்கக் கூடாது. எதிர்காலத்தில் வருமானம் அதிகரித்தாலும் தேவைகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் எதிர்காலத்தில் குழந்தைகளின் கல்வி, பெற்றோர்களின் பராமரிப்புச் செலவு, மருத்துவச் செலவு ஆகிய தேவைகளை மனதில் வைத்து கடன் வாங்குவது நல்லது. எந்தக் கடன் வாங்குவதாக இருந்தாலும் அதை நம் 50 வயதுக்கு முன்பே திரும்பச் செலுத்தும் வகையில் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில்,50 வயதுக்குப் பிறகு கடன் இருந்தால், பணி ஓய்வுக்குப் பிறகும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணி ஓய்வின்போது நம்முடைய உடல்நலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. மேலும்,50 வயதில்தான் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகள் வரும். அந்தச் சமயத்தில் கடன் அதிகம் இருந்தால், வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது அல்லவா ?
எல்லாவற்றுக்குமே கடன் கொடுக்கிறார்களே என்பதர்க்காக எந்த வரம்புமின்றி தேவை யற்றவற்றையெல்லாம் வாங்கிக்குவித்து நம் வருமானத்தை கடனுக்கும் வட்டிக்கும் தாரைவார்ப்போமாயின் அதில் எந்தவொரு புத்திசாலித்தனமும் இராது. மேலும், சந்தர்ப்ப சூழ்நிலை ,வாழ்க்கையையே புரட்டிப்போடும் சங்கடங்கள் போன்றவற்றால் நாம் வாங்கிய கடனை குறித்த தவணைக்குள் செலுத்த தவறி கடன் கொடுநரால் தொடர்ச்சியாக நெருக்கப்படுவோமானால்? இந்த”breaking point” இல்தான் நண்பர்கள் விலகுவார்கள், அலுவலகத்தில் எள்ளி நகையாடுவார்கள் “சிட்டைக்கு”வாங்குவதுதான் (வட்டிக்கு வட்டி) ஒரே வழி என நினைப்போமாயின் நம்மைக் காப்பற்ற கடவுளாலும் இயலாதுபோய்விடும். இந்த நிலையில்தான் மன ரீதியான உள ரீதியான சித்திரவதைகள் ஆரம்பிக்கின்றன. மனோதிடம் இல்லாதவர்களாயின் உயிரை மாய்துகொள்வர். பலருக்கு depression ஏற்படுகிறது. ஏனெனில், நம்முடைய ஏட்டுக்கல்வியானது பணமில்லாத நிலையினை எப்படி எதிர்கொள்வது என்பதை சொல்லித்தருவதில்லையே ?
அதுமட்டுமா? குறித்த தவணைக்குள் கடனை திருப்பிக்கொடுக்க இயலாதுபோனால் கடன்கொடுத்தவரை சந்திக் கவே நம்மில் பலர் பயப்படக்கூடும். ஆனால், அது முற்றிலும் தவறு முடிந்தவரை அவர்களிடம் குறித்த தவணைக்கு முன்பாகவே சென்று நிலைமையினை விளக்கி அவகாசம் வாங்கிக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை நீங்கள் கடன் கொடுத்த ஒருவராயின்”கறக்காத பாலும் கேட்காத கடனும் திரும்ப வராது”என்பதற்கமையகொடுத்தது திரும்பிவரவேண்டுமாயின் அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டு மாம்.
எது எப்படியோ கடன் என்ற ஓர் விடயத்தில் எந்த அளவுக்கு நன்மையுண்டோ அந்த அளவுக்கு நம்முடைய அணுகுமுறையைப்பொறுத்து தீமையும் உண்டு. எனவே தீர்க்கவியலாத பிரச்சினையென்று எதுவுமில்லை, பணத்தை சம்பாதித்து கடனை கட்டியே தீருவேன் என செயல்படுங்கள். நம்மால் முடியும். நம் குடும்பத்துக்கு பெரும் கடனையும், அவமானத்தையும் விட்டுவிட்டு உயிரைபோக்கிக்கொள்வதில் எவ்வித பயனுமில்லை. கடன் பிரச்சினைகளை ஒருசவாலாக மாற்றுங்கள், எழுந்து நில்லுங்கள். நிச்சயம் மீண்டுவிட முடியும்.
848 total views, 3 views today