வியர்வையின் நறுமணம்

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி

நாட்டு நிலைமையின் சூழ்நிலை காரணமாக ஜேர்மனிக்கு புலம்பெயர்வது என்று முடிவெடுத்த நாங்கள், போவதற்கான நாள் நெருங்க நெருங்க எதையெல்லாம் கொண்டு போவது என்று எண்ணத் தொடங்கினோம். சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனைகளைச் சொன்னார்கள்.

„பிள்ளைகளோடு போகிறியள்,பிள்ளைகளின் உடுப்பைக் கூடுதலாகக் கொண்டு போங்கள் உங்கள் இரண்டு பேருக்கும் இரண்டிரண்டு உடுப்புக்கள் கொண்டு போனால் போதும், நாங்கள் சொல்லியும் கேக்கிறியள் இல்லை, போய்ச் சேர்ந்ததற்குப்பிறகு மறுமொழி வரும் வரையும் நாங்கள பைத்தியம் பிடிச்ச மாதிரித்தான் இருப்பம்“ என்று மனைவியின் தாய் சொன்னார். உடுபு;புகளை சூட்கேசுக்குள் மனைவி அடுக்கும் போது „ இஞ்சரப்பா இதையும் சேர்த்து வையுங்கள் „ என்று ஒரு பருத்திநூல் பச்சைக்கரை போட்ட சால்வையைக் குடுக்க, சால்வையை வாங்கியவள் என்னை நிமிர்ந்து பார்த்து, “இது எதுக்கு, ஜேர்மனி குளிரென்று சொல்லுகினம், இதைக் கொண்டு போய் அங்கை என்ன செய்யிறது, அதோடை இது கிழிஞ்சு தைச்சிருக்கு“என்று சொல்ல,“பரவாயில்லை சூட்கேசுக்குள்ளை வையப்பா தேவைப்படும் „ என்று நான் சொல்ல“ என்னமோ சொல்றியள் „ என்றவாறு சால்வையை வைச்சு சூட்கேசை மூடினாள். விமான நிலையத்திற்கு போகும் போது பிளளைகளுக்கு குளிரைத் தாங்கக்கூடிய உடைகளை போட்டு விட்டிருந்தோம். நானும் மனைவியும் குளிரைத் தாங்கக்கூடிய உடைகளை போடவில்லை.சாதாரண உடையிலிருந்தோம்.

நாங்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த மாதம் ஒரு குளிர்மாதம்.ஆஸ்திரிய தலைநகரில் வந்திறங்கி வெளியே பார்த்த போது வெண்பனி தூவிக் கொண்டிருந்தது.விமான நிலையத்துக்குள் குளிரின் தாக்கமிருந்ததால், சூட்கேசைத் திறந்து ஏதாவது ஒன்றால் போர்த்துவோம் என்று தேடிய போது சூட்கேசுக்குள்ளிருந்த துவாயை எடுத்து மனைவிக்கு கொடுக்க அவர் போர்த்திக் கொண்டார். நான் சால்வையை எடுத்து கிழிந்து தைத்த பகுதி தெரியாமல் மடித்துப் போர்த்திக் கொண்டன். அது அப்புவின் சால்வை. அப்புவிடம் நாலைந்து சால்வைகள் இருந்தன.ஆனால் அதிகமாக விரும்பிப் பாவிப்பது இந்தச் சால்வையைத்தான். சால்வையைப் போர்த்தியதும் அது குளிரிலிருந்து என்னைக் காத்தது போலத் தோன்றியது. வியன்னாவிலிருந்து ஏரோபிளட் விமானத்தில் கிழக்கு ஜேர்மனி விமானத்திலும் அந்தச் சால்வையையே போர்த்தியிருந்தன்,பேர்லினில் ஒரு இடத்தில் தங்கிய போதும் அந்தச் சால்வையை போர்த்தி,அதற்கு மேல் போர்வையால் போர்த்திக் கொண்டு படுத்தன்;

ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் குளிக்கும் பழக்கமுள்ளவர் அப்பு. இரவில் குளிக்கும் போது அந்தச் சால்வைக்கு சவர்க்;காரம் போட்டு அடிச்சுத் துவைச்சு அலம்பிக் காயவிட அது அடுத்தநாள் காலை உலர்ந்து சருகாய் காய்ஞ்சிடும்.

ஒரு நாள் அப்புவும் நானும் மண்வெட்டியால் கொத்திக் கொண்டிருந்த போது,மண்வெட்டி தவறுதலாக எனது காலில் பட்டு காயம் ஏற்படுத்தி இரத்தம் பாயத் தொடங்க பதறிய அப்பு மண்ணை அள்ளி காயத்தின் மேல் வைச்சு தனது இடுப்பில் கட்டியிருந்த சால்வையை அவிழ்த்து காயத்தைச் சுற்றிக் கட்டிவிட்டதுடன், தோட்டத்துக்கு கொண்டு வந்த சைக்கிளில் என்னை இருத்திக் கொண்டு, காங்கேசன்துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காயத்துக்கு இழை போட்டு மருந்து கட்டுவித்தார். இரத்தமும் மண்ணும் கலந்திருந்த சால்வைக்கு சுண்ணாம்பு எலுமிச்சம் புளியெல்லாம் போட்டு அப்பு தோய்க்க சால்வை பழைய நிலைக்கு வெள்ளை வெளேரென்று வந்தது.

அப்பு மூளாய் ஆஸ்பத்திரியில் சுகமில்லாமல் ஒரு கிழமை இருந்த போது அம்மா அவரோடு ஆஸ்பத்திரியிலேயே நின்றார். எனக்கோ இரவுகளில் நித்திரையில்லை, அப்புவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போன போது எனக்குஎ நித்திரை வரவில்லை என்று சொல்ல, அம்மா கட்டிலின் ஒரு ஓரத்திலிருந்த அந்தச் சால்வையை எடுத்து தந்தார்.அன்றும் தொடர்ந்தும் அப்புவின் சால்வையை தலைகணியில் வைச்சுப் படுத்த போது நல்ல நித்திரை வந்தது.

ஜேர்மனிக்கு வந்ததற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இலண்டனிலிருக்கின்ற எனது மனைவியின் ஒன்றுவிட்ட தங்கை மகனின் திருமணத்திற்கு போன போது மனைவியின் தங்கை,“அத்தான் நீங்கள் பட்டுவேட்டி கட்டி பட்டுச் சால்வை கழுத்தில் போட வேண்டும் „ என்றார். நான் பட்டுவேட்டி சால்வை அதற்கு தகுந்தாற்போல சட்டையுடன் அப்புவின் சால்வையையும் திருமணத்திற்கு போகும் போது கொண்டு போயிருந்தன்.

இலண்டனுக்குப் போனதும் முதல் வேலையாக அப்புவின் சால்வையை எடுத்து கிழிந்து தைச்சதை மறைத்து மாப்பிளைச் சால்வை மடிப்பை மடிச்சு அயன்பண்ணி வைச்சிருந்தன். திருமண மண்டபத்திற்கு வெளிக்கிடும் போது அப்புவின் சால்வையை எடுத்து கழுத்தைச் சுற்றித் தொங்கவிட்டதைக் கண்ட மனைவி“ என்னது பட்டு வேட்டிக்கு பருத்திச் சால்வையைப் போட்டுக் கொண்டு வாறியள், யாராவது பார்த்தால் என்ன நினைப்பினம்„ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எனது மைத்துனி“ இல்லையக்கா இதுவும் ஒரு விதத்தில் அத்தானுக்கு நல்லாய்த்தானிருக்கு, விடுங்கள் அவர் அதையே போட்டுக் கொண்டு வரட்டும் „ என்றாள்.

எனது அப்புவின் கண்ணும் கருத்துமான பாசம் மட்டுமல்ல,வியர்வை சிந்தி உழைச்ச உழைப்பாளியின் வியர்வை மணம் அப்புவோடு ஒட்டி உறவாடிய இந்தச் சால்வை மூலமாகவும் இன்றும் எனக்கு நறுமணமாக இதயத்தை நிரப்புகின்றது.

874 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *