உலகில் முதலாவது அதிசயம்,உடலுக்குள் நீண்ட நெடுஞ்சாலை!

நமது உடலுக்குள் மாபெரும் நெடுஞ்சாலை இருக்கிறது தெரியுமா?

ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் எல்லா நகரங்களையும், அத்தோடு அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்ட சாலைகளை நாம் „Highway“ அல்லது தமிழில் நெடுஞ்சாலை என்று அழைக்கின்றோம். இந்த நெடுஞ்சாலைகள் மனிதன் படைத்த மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று என்று கூட சொல்வார்கள், சரி தானே? ஆனால், உங்களால் கற்பனையே பண்ண முடியாத பிரம்மாண்டமான, மாபெரும் நெடுஞ்சாலை ஒன்று இருக்கிறது. அது வேறு எங்கும் இல்லை, உங்கள் உடலுக்குள்ளே இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

அடடா, இது என்ன மாபெரும் நெடுஞ்சாலை நமது உடலுக்குள் இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? உங்கள் ஒவ்வொருவரிலும் அடங்கி இருக்கும் அந்தச்ப் பிரம்மாண்டமான நெடுஞ்சாலை வேறொன்றும் இல்லை, உங்கள் உடல் பூராகவும் படர்ந்து பரவியிருக்கும் இரத்த நாளங்களின் வலையமைப்புத் தான் அந்த நெடுஞ்சாலை ஆகும். இந்த வலையமைப்பின் ஊடாக நமது இதயம் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிந்து நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும், ஏன் ஒவ்வொரு உயிரணுவிற்கும் (Cell) இரத்தத்தை அனுப்புகின்றது. அட இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கின்றீர்களா…?

ஒரு மனிதனின் உடம்பில் இருக்கும் அனைத்து இரத்த நாளங்களையும் எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்தால், அந்த நாளத்தின் நீளம் சுமார் 100000 km கும் அதிகமாக இருக்கும். சரி, இந்த நீளத்தை உங்களால் கற்பனை பண்ண முடியவில்லை என்றால், இதற்கு வேறு விளக்கம் தருகிறேன். பூமியின் சுற்றளவு சுமார் 40,074 km ஆகும். அப்படியென்றால் இந்த இரத்த நாளங்களுடன் நமது பூமியை 2.5 முறை சுற்றலாம் என்பது தான் இதில் உள்ள ஆச்சரியம் ஆகும். நம்பவே முடியவில்லை அல்லவா?

பொதுவாக ஒரு சராசரி மனிதனின் உடலில் சுமார் 4-6 லிட்டர் இரத்தம் இருக்கும். இதில் உள்ள அதிசயம் என்ன தெரியுமா? நமது இதயம் இரத்தத்தை மிகவும் வேகமாக, குறிப்பாக 1.1 m/s அல்லது 4 km வேகத்தில் நமது உடலூடாக அனுப்புகிறது. இப்படி அனுப்பப்படும் இரத்தம் ஒரு முறை நமது உடலூடாகச் சுற்றி வர வெறும் ஒரு நிமிடம் தான் எடுக்கும். இதுவே உடலுக்கு வேலை கொடுக்கும் போது, இன்னும் வேகமாகச் சுற்றி வரும்.

எனவே இப்படி ஒரு மாபெரும் அதிசயத்தை உங்கள் உடலுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அதிசயங்களைத் தேடவேண்டாம்!

802 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *