காப்பி அடித்து கோப்பி போடவேண்டாம்.
மாதவி-யேர்மனி
ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்து கதைப்பது, தமிழர்களின் சுபாவம். அது சிறுவயதில் நாம் படிக்கும் காலத்திலே ஆரம்பித்துவிடும். அவனைப்பார் கணிதத்திற்கு 90 புள்ளி எடுத்திருக்கிறான், நீ கணித வாத்தியார் மகன் 68 புள்ளி, ஒரு வாரம் வீட்டில் அறப்போர், கதையே ஏதும், இருக்காது.
இன்று தமிழ் கடைகளுக்கு போனால் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் உள்ளுக்குள் குசு குசுப்பார்கள், அந்தக்கடையில் பருப்பு 20 சதம் குறைவு, இந்தக்கடையில் ஏன் இங்கு இப்படி என்று ஒருவருக்குள் ஒருவர் கதைப்பார்கள். எந்தக்கடை என்பதை இன்னும் அடித்தொனியில் தனக்கும் கேட்காமல் சொல்வார்கள். இது எமது இயல்பு. சிலவற்றை நாம் வெளியாகப் பேசமாட்டோம். அது அநாகரீகம் என எண்ணுவோம்.
ஆனால் இன்று இங்கிலாந்து தேசத்தில் சில பெரும் கடைகளில் (Sainsbury,Tesco) சிலபொருட்களுக்கு அருகில் இது அல்டி (Aldi) விலையை ஒத்தது, இது லிடில் (lidl) விலையை ஒத்தது, எனவே அங்கு செல்லத் தேவையில்லை, இங்கேயும் அதே விலைதான் என்ற பொருள் பட சிறு பதாதைகள் கடைகளுக்குள் போட்டு இருக்கும். இப்படி போடுவது முன்பு அநாகரீகமான செயல். அல்லது வேறுகடையின் பெயரை ஒப்பீட்டுக்கு என்றாலும் பாவிப்பது குற்றம் என்று கூட இருந்து இருக்கலாம்.
இன்று உண்மை என்றால் உரைப்பது தவறு இல்லை, அது வாடிக்கையாளர் அங்கு மலிவு, இங்கு மலிவு, என்று அலையாமல் ஒரு இடத்தில் இலகுவாக வாங்கிச்செல்ல உதவும் செயலாக இங்கிலாந்து மக்கள் பார்க்கிறார்கள்.
நிச்சயமாக இப்படி தமிழர்கள் மத்தியில் அதாவது தமிழ்க்கடைகள், ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்து பகிரங்கமாகப் பதாதை வைப்பது இல்லை. அது அநாகரீகமான செயலாகவே இன்றுவரை உள்ளது. அதேநேரம், இன்னும் ஒரு காரணம், எமது வியாபார ஸ்தாபனங்கள் பெரும் நிறுவனமயமாக்கப்படவில்லை .
இது மட்டுமல்ல அன்று ஒரு உணவகத்திற்கு பக்கத்தில் இன்னும் ஒரு உணவகம் போடுவது நாகரீகம் அல்ல. போடவும் மாட்டார்கள். அப்படிப் போடவும், நகரசபை அனுமதிக்காது, ஆனால் இப்போது ஸ்பெயின் நாட்டில் இருகதவுகள் பக்கம் பக்கம் உடைய ஒரு கடையில்,ஒரு கதவைத் திறந்தால் அது (McDonald’s) மைக்டோனால்ஸ், பக்கத்து கதவைத் திறந்தால், அது (Burger King) பேகர்கிங். ஆனால் இரண்டு கடையிலும் சனம் வழிகிறது, இன்று இச்செயல் அநாகரீக மானது அல்ல!
தன் நிறுவனத்தின் தனித்துவம் மீது ஒவ்வொருவரும் கொண்டுள்ள நம்பிக்கைதான் இன்று அவர்களது வியாபார சக்தியாகவும், யுக்தியாகவும் உள்ளது.
ஒப்பீடுகள் தேவைதான் அது நாம் எங்கு எந்த நிலையில் நிற்கிறோம் என்பதனை அறிவதற்கு மட்டுமே அன்றி, அவர்கள் போல் நாமும் செய்ய வேண்டும் என்பதற்கு அல்ல.
காப்பி அடித்துக் கோப்பி போடவேண்டாம். போடும் கோப்பி,அது உங்களதாக இருக்கட்டும். இது எந்த துறை யாக இருந்தாலும் பொருந்தும்.
739 total views, 3 views today