கப்பிங் தெரபி
கப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?
இது ஒரு புராதன மருத்துவ முறையாகும்! கி.மு 1550
- னுச. எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்-இலங்கை
கப்பிங் தெரபி என்பது கப்பை (கோப்பையை) (Cup) வைத்து செய்யப்படும் ஒரு மருத்துவமாகும். நோய்க்குக் காரணமான நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுவதே இதன் நோக்கமாகக் கருதுகிறார்கள்.
கப்பை நோயின் தேவைக்கு ஏற்ப தலை, கை, கால், முதுகு,தோள்பட்டை போன்ற ஏதாவது ஒரு பகுதியில் வைப்பார்கள். பின்னர் உபகரணங்கள் மூலம் கப்பிற்குள் இருக்கும் காற்றை வெளியேற்றுவதன் மூலம் அதற்குள் உள்ள அழுத்தத்தைக் குறைப்பார்கள். காற்று அழுத்தம் குறைவதால் கப் மூடியிருக்கும் பகுதியில் உள்ள சருமம் சற்று இழுபடும். இதனால் கப் அழுத்திய இடத்தில் அது அண்டிய அடையாளம் தென்படும்.
இப்பொழுது அடையாளம் ஏற்பட்ட பகுதியில் சிறிய ஊசிகள் அல்லது கத்திகள் மூலம் நுண்ணிய வெட்டுகளை போடுவார்கள். பின்னர் மீண்டும் அந்த இடத்தில் கப்பைப் பொருத்தி எதிர் அழுத்தம் பிரயோகித்து அதில் கசியும் இரதத்தை உறிஞ்சி எடுப்பார்கள். நோயை ஏற்படுத்தும் பதார்தங்கள் அந்த இரத்தம் ஊடாக வெளி யேற்றப் படுவதாக நம்புகிறார்கள். அவ்வாறு இரத்தத்தை வெளியேற்றாது வெறுமனே மறை அழுத்தத்தை பிரயோகித்து சிகிச்சை செய்வதும் உண்டு.
முதலில் கூறியதை வெட் (Wet) கப்பிங் என்பார்கள். இரண்டாவதாக சொன்ன இரத்தம் வராத முறையை டிரை (Dry) கப்பிங் என்பார்கள். இவற்றைத் தவிர ஓயில் கப்பிங், மக்னட் கப்பிங், ஐஸ் கப்பிங், பம்பு கப்பிங் என்று பல உப வகைகள் உண்டு. பொதுவாக 3 முதல் 5 கப்களைப் பயன்படுத்துவார்கள்.7 கப்களை பயன் படுத்துவதும் உண்டு. மாறாக ஒரு ஒரு கப்பை மட்டும்வைத்து சிகிச்சை செய்வதும் உண்டு.
கப்பானது ரப்பர், சிலிக்கோன், கிளாஸ் போன்றவற்றால் ஆனது. ஆனால் இந்த மருத்துவமுறை பயன்படுத்தப்பட் ஆரம்பகாலங்களில் களிமண்ணால் ஆன கப்புகளே பயன்படுததப்பட்டன. ஸ்பிரிட், மூலிகை அல்லது பேப்பரை அதில் போட்டு எரிப்பார்கள். நெருப்பு அணைந்ததும் சூடான அந்த கப்பை உடலின் தேவையான பகுதியில் கவிழ்த்து வைப்பார்கள். காற்று வெக்கை தணிந்து குளிரடையும் போது மறை அழுத்தம் (Negative Pressure) ஏற்பட்டு சருமம் உள்வாங்கப்படும்.
இது ஒரு புராதன மருத்துவ முறையாகும். எகிப்து, சீனா போன்ற நாடுகளில் முதலில் செய்யப்பட்டது. இந்த மருத்துவம் பற்றிய குறிப்பு கி.மு 1550 ஆண்டளவில் எழுதப்பட்ட Ebers Papyrus நூலில் இருப்பதாகத் தெரிகிறது. ஆரம்ப காலத்தில் மண்ணாலான கப் மற்றும் மூங்கில் தண்டுகளால் செய்யப்பட்ட கப் களும் பயன்படுதப்பட்டததாகத் தெரிகிறது.
பல்வேறு விதமான நோய்களை இந்த மருத்துவம் குணப்படுத்தும் என கப்பிங் தெரபி செய்பவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக இரத்த சோகை, மூட்டு வாதங்கள், மலட்டுத்தன்மை, கபாலக் குத்து, எக்ஸிமா போன்ற சரும நோய்கள், நாளப்புடைப்பு நோய், ஆஸ்த்மா, மனப் பதற்ற நோய், மனச்சோர்வு நோய் என்றவாறு பலவற்றைக் கூறுகிறார்கள். நோய்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அவை ஏற்படாமல் தடுக்கவும் கப்பிங் தெரபி செய்யலாம் என்கிறார்கள். இருந்த போதும் ஆய்வு ரீதியாக அவை நிருபிக்கப்பட்வில்லை.
வலி நிவாரணம், ஹெர்பீஸ் சொஸ்டர், முகப்பருக்கள், முகத்தின் ஒரு பக்கம் மட்டும் செயலிழத்தல், முள்ளம் தண்டு நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு கப்பிங் தெரபி உதவக் கூடும் என 2012ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறியது. ஆயினும் ஏனைய மருந்துகள் அல்லது அக்யூபங்சர் போன்ற ஏனைய மருந்துவங்களுடன் கப்பிங் தெரபியை இணைத்து செய்யப்படும்போதே பலன் கிடைக்கலாம் எனக் கூறுகிறது. எனவே கப்பிங் தெரபியின் பயன்பாடு இதன் மூலம் தெளிவாகவில்லை.
எந்த மருத்துவத்தைப் போலவும் கப்பிங் தெரபியால் சில அசௌகர்யங்கள் ஏற்படலாம். வேதனை, புண்ணாதல். கிருமித்தொற்று போன்றை ஏற்பட வாய்ப்புண்டு.
இருந்தபோதும் சிலர் இதை நம்பிக்கையோடு செய்து பயன்பெற்றதாக கூறுகிறார்கள். பிக்பாஸ் புகழ் ஓவியா ஒரு உதாரணம். கப்பிங் தெரபி என்பது ஒரு மாற்று மருத்துவமுறை (Alternative medicine). மேலைத்தேய மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுள்வேத மருத்துவம் போன்ற முழுமையான மருத்துவ முறை அன்று. நான் இதை மருத்துவக் கல்வியாகப் பயின்றதும் இல்லை சிகிச்சை முறையாக பயன்படுத்தியதும் இல்லை. மேற் கூறிய விடைகள் அனைத்தும் எனது தேடுதலில் பெறப்பட்டவை. உறுதிப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளது.
951 total views, 3 views today