ஒரு பாலை வீடு நாடகம் – 1980
எனது நாடக அனுபவப் பகிர்வு – 18
ஆனந்தராணி பாலேந்திரா
ஏப்ரல் இதழில் முற்று முழுதாக பெண்கள் நடித்த ‘ஒரு பாலை வீடு’ நாடகத்தை வேறு இடங்களில் பாலேந்திரா மேடையேற்ற விரும்பியது பற்றியும் முதல் மேடையேற்றத்தில் நடித்த சுண்டுக்குளி பழைய மாணவிகள் சிலர் நடிக்க வர மறுத்து, பின்னர் நானும் வேறு சில பெண்களும் அவர்களின் பாத்திரங்களை ஏற்று நடித்தது பற்றியும் எழுதியிருந்தேன்.
இந்த நாடகத்தின் ஆடை அலங்காரம், ஒப்பனை, மேடையமைப்பு பற்றியும் கட்டாயம் கூறவேண்டும். ஸ்பானிய நாடகமான ‘ஒரு பாலை வீடு’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டே மேடையேற்றப்பட்டது. தழுவல் அல்ல. எப்படி N~க்ஸ்பியரின் நாடகங்கள் தமிழில் அப்படியே மேடையேற்றப்பட்டதோ அதேபோல கதாபாத்திரங்களின் பெயர்கள் ஸ்பானியப் பெயர்களாக இருந்தன. எனவே ஆடை அணிகலன்களையும் கதைக்குப் பொருத்தமாகவே பாலேந்திரா தேர்ந்தெடுத்திருந்தார்.
தந்தையாரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு எல்லோரும் வீடு திரும்பும் காட்சியுடன் இந்த நாடகம் ஆரம்பமாகும். இந்த நாடகத்தில் எல்லா நடிகைகளுமே கறுப்பு நிற நீண்ட ஆடை அல்லது வெள்ளை – சாம்பல் நிற ஆடைகளை அணிந்து நடித்தோம். தலைமுடியையும் மறைத்து கறுப்பு நிறத்தில் முக்காடு அணிந்திருந்தோம். பொதுவாக வர்ண வர்ண ஆடைகளை, சேலைகளை விரும்பி அணியும் பெண்களுக்கு இந்தக் கறுப்பு – வெள்ளை ஆடைகள் கொஞ்சம் அதிருப்தியாகத்தான் இருந்தது. அதுவும் நாடகம் முழுவதும் இதே கறுப்பு-வெள்ளை-சாம்பல்தான்.
பாலேந்திரா ஒப்பனையிலும் அதிக கவனம் செலுத்தும் ஒருவர். இந்த நாடகத்தின் தன்மைக்கேற்ப ஒரு வறண்ட, இருண்ட தோற்றத்தைக் கொடுக்கும் வண்ணம் எங்களுடைய முகப் பூச்சுகள் அமைந்திருந்தன. முதலாவது மேடையேற்றத்தின்போது ஒத்திகைகளுடன் ஒப்பனையிலும் நான் உதவி புரிந்தேன். ஒரு நடிகை தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு தான் அழகில்லாமல் இருப்பதாகக் கருதி முகப்பூச்சை நிறைய அழித்துவிட்டார். தான் கொண்டுவந்த உதட்டுச் சாயத்தையும் பூசிவிட்டார். நாடகம் ஆரம்பமாகுமுன் பாலேந்திரா கவனித்துவிட்டார். மீண்டும் அவருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. ஏனைய மேடையேற்றங்களின்போது பின்னர் நடிக்க வர மறுத்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நடித்த பாத்திரத்தில்தான் நான் மீள் தயாரிப்பில் நடித்தேன்.
‘ஒரு பாலை வீடு’ நாடகத்திற்காக மிகப் பிரமாண்டமான மேடையமைப்பு (செற்) செய்யப்பட்டிருந்தது. இதனை வடிவமைப்புச் செய்த குணசிங்கம் அப்போது மொரட்டுவ – கட்டுபெத்தை பல்கலைக்கழகத்தில் கட்டடவடிமைப்புத் துறையில் படித்துக்கொண்டிருந்தார். அவர் பாலேந்திரா தயாரித்து நெறிப்படுத்திய பல நாடகங்களுக்கு மேடை வடிவமைப்பை செய்ததுடன் சில நாடகங்களில் நடித்துமுள்ளார். ‘ஒரு பாலை வீடு’ நாடகத்திற்கு அவர் செய்திருந்த மாதிரி வடிவமைப்பை வைத்து பிரமாண்டமான மேடையமைப்பை அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய மேடை நிர்மாண, ஒப்பனைக் கலைஞரும் நடிகருமான பெஞ்சமின் அவர்கள் செய்திருந்தார். திரை விலகியவுடன் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்த இந்த மேடையமைப்பு பற்றி கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை அவர்கள் எழுதிய பத்திரிகை விமர்சனத்தில் …
“ திரை விலகியதும் எம்மைக் கவருவது மேடை முழுவதையும் அடக்கி உயர்ந்து அகன்று பழைய முறையில் அமைந்த பணக்கார வீட்டுத் தோற்றம். குறைகூற முடியாத அளவிற்கு அக்கறை எடுத்து ஏராளம் செலவிட்டு நிர்மாணித்திருக்கிறார்கள். நாடகம் நிகழும் அக்களத்தை நாடகத்தைத் தூக்கிக் காட்டுமளவுக்கு அமைந்த இந்த அரங்க அமைப்பு, சுவைஞர்களையும் புதிய சூழலுக்கு இட்டுச் செல்கிறது.” என எழுதியிருந்தார்.
கொழும்பில் இந்த நாடகத்தை பாலேந்திரா மேடையேற்றியபோது யாழ்ப்பாணத்தில் செய்திருந்த செற்றைக் கொண்டுபோக முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கொழும்பில் மேடையமைப்பில் புகழ்பெற்று விளங்கிய கதிர்காமத்தம்பி அவர்களைக் கொண்டு மீண்டும் செற் உருவாக்கப்பட்டது. கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் 03-03-1980 அன்று பகல் காட்சி மாலைக் காட்சி என இரு தடவைகள் மேடையேறியது. அடுத்த நாள் 04-03-80 அன்று ‘ஒரு பாலை வீடு’ நாடகம் பேராதனை பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டபோது இதே செற் லொறியில் கொண்டு செல்லப்பட்டது. எல்லா மேடையேற்றங்களின்போதும் பிரம்மாண்டமான செற்றில் இருந்து நெறியாள்கை, ஒலி. ஒளியமைப்பு உடையலங்காரம், ஒப்பனை என அத்தனை அம்சங்களிலும் பாலேந்திராவின் தயாரிப்பு நேர்த்தியைப் பாராட்டி பேராசிரியர் இந்திரபாலா, அ.யேசுராசா, கே.எஸ்.சிவகுமாரன், செ.யோகநாதன், ஏ.ரி. பொன்னுத்துரை, ஜே.எஸ்.மரியநாயகம், ஐ.சண்முகலிங்கன் போன்ற பல பிரபல விமர்சகர்கள் பத்திரிகைகளில் எழுதியிருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நாமெல்லோரும் பெரிய கூட்டமாக ரயிலில் கொழும்பு பயணித்து, அங்கு நாடக மேடையேற்றம் முடிந்த கையுடன் மறுநாள் பேராதனைக்குப் பயணம் செய்ததெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். நாங்கள் நிறைய இளம்பெண்கள். அத்தோடு மேடை உதவிக்காக இளைஞர்களும் வந்தார்கள். உற்சாகத்திற்குக் குறைவிருக்கவில்லை. இதேவேளை முதல் முதலாக வீட்டில் பெற்றோரை விட்டுத் தனியே நீண்ட பயணம் வந்திருந்த ஓரிரு நடிகைகள் வீட்டு நினைவில் கொஞ்சம் சஞ்சலப்பட்டதும், அவர்களுக்கு நான் ஆறுதல் கூறியதும் நினைப்பு வருகிறது. ‘ஒரு பாலை வீடு’ நாடகம் இலங்கையில் 6 தடவைகள் மேடையேற்றப்பட்டு ஒரு வெற்றி நாடகமாக அமைந்தது.
மிகுதி அடுத்த இதழில்…..
881 total views, 3 views today