ஞாயிறு அது நன்று வாழ்க
பிரபஞ்ச காதலன்
தாவி தாவி பாயும் மனதை சாட்சியாய் கண்டு நகைக்கும் நிலை வந்தால் ? தான் தான் என்று ஆணவப் படும் எண்ணத்தை துண்டு துண்டாக்கினால் ?உள்ளமதில் விளையும் ஊனினைப் பேணாது உருகுலைத்துவிட்டால் ? வெள்ளமென உள்ள கள்ளத்தை காணாமல் செய்து விட்டால் ?
ஆஹா, இது எல்லாம் சாத்தியமா? எப்படி எங்கே எப்போது வயப்படும்? நம் ஆயிரம் ஆயிரம் அறியாமைக் கேள்விகளுக்கு ஒரே ஒரு சொல்லில் பதில் தருகிறார் என்றால் …..ம்ம்ம் எப்படி த் தான் அவனை சரணடையாது இருக்க முடியும் ?
” காதல் “” காதலினால் மானிடருக்கு கவலை தீரும். காதல் என்ற ஒன்றே நம் கவலையை, அறியாமையை, கள்ளத்தினை, ஊனத்தினை, ஆணவத்தினை, பேராசையை, பொறாமையை ஒட்டுமொத்த அறியாமையை நீக்கிவிடும் ஒரே மந்திரம். “ஆதலினால் காதல் செய்வீர் உலைத்தீரே “ பாரதியின் காதல் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை மட்டும் பாடியதல்ல என்று நாம் அறிவோம். அவனொரு பிரபஞ்ச காதலன். அவனது காதல் விரிவு வியப்பானது. அதில் ஒன்று, எண்ணற்ற ஒளிக்கதிர்களைப் பரவி விசாலமாக காட்சி தரும் ஞாயிறின் மீது கொண்ட காதல். படரும் வானொளி யின்பத்தைக் கண்டு ஞாயிறு வணக்கம் செய்து நிற்கிறார்.
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா,
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
காதல் கொண்டனை போலும்மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்.
இது போல சூரியனை வாழ்த்தி வர்ணித்து எழுதி இருக்கும் வசனகவியில் பாரதியின் கற்பனை, சூரியக் கதிர்கள் போலவே பல கோணங்களுக்கு பரவி நிற்கிறது.
ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது? வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உணி எவன் தருகின்றான்? புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? எனப் பல வியப்பு வினாக்களோடு ஆரம்பமாகிறது வசனகவி.
நீ ஒளி,நீ சுடர்,நீ விளக்கம்,நீ காட்சி உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய், வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்
ஆஹா, நெஞ்சகலா சொல்லாடல் தரும் வித்தையை நன்கு அறிந்த பாரதியே வசனகவி நடையின் முன்னோடி என்றும் நாம் அறிவோம். ஞாயிறே,இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா? நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன், என இருளையும் ஒளியையும் ஒன்றாகப் பார்க்கிறார். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் பரம்பொருளின் வடிவமாகக் கண்டு அத்வைதம் காட்டி நிற்பவை பாரதி வரிகள்.
ஒளியே,நீ யார்? ஞாயிற்றின் மகளா? அன்று, நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம். என ஞாயிறில் உள்ள ஒளியை வாழ்த்துகிறார். அதன் பின் அந்த ஒளியில் உள்ள தீயை வாழ்த்துகிறார்.
அறத் தீ, அறிவுத் தீ, உயிர்த் தீ, விரதத் தீ,வேள்வித் தீ,சினத் தீ,பகைமைத் தீ, கொடுமைத் தீ-இவை யனைத்தையும் தொழுகின்றோம். இவற்றைக் காக்கின்றோம் இவற்றை ஆளுகின்றோம்.தீயே நீ எமது உயிரின் தோழன்.உன்னை வாழ்த்துகின்றோம். வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்கின்றன. அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன. ஞாயிறே,நீதான் ஒளித்தெய்வம்.நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள். உங்கள் கூட்டம் மிக இனிது.நீவிர் வாழ்க. ஒளிக்கும் வெளிக்குமான காதலை உணர்ந்து மொழிந்ததைக் காணும் போது, என் உள்ளத்தில் தீ வளர்கிறது. ஆஹா இத்தனை அருமையான விடயங்களை நம் நாட்டியத்தில் பொழிந்திட வேண்டுமே என்று எண்ண அலை துடிக்கின்றது.
ஞாயிறே ஆதாரமாகிறான், முதன்மையாகிறான் ஆதலினால் நாட்டிய உருப்படியில் முதல் நிகழ்வாக அமையும் புஷ்பாஞ்சலி என்னும் உருப்படியை ஞாயிறு வணக்கமாக வசனக்கவி புஷ்பாஞ்சலியாக அமைக்குமாறு ஐயன் பாரதியின் கொள்ளுப்பேரன் இசை மேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயாவிடம் விண்ணப்பித்தேன். சப்த பரியில் வலம் வரும் பரிதியை கருத்தில் கொண்டு ஏழு அட்சரம் கொண்ட திஸ்ர திருபுடை தளத்தில், சூரியகாந்தம் ராகத்தில் அவ்வுருப்படியை இயல் அழுகு ஜொலிக்க அமைத்தார். புஷ்பாஞ்சலியுடன் அலாரிப்பு என்னும் உருப்படி ஆடப் படுவது வழமை. எனவே இப்புஷ்பஞ்சாலி உடன் அமையும் அலரிப்பினை 7 மாத்திரைகள் கொண்ட மிஸ்ர விலோம சாபு தாளத்தில் அமைத்தேன். புஷ்பாஞ்சலியின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ” ஞாயிறு அது நன்று வாழ்க ” என்ற அடி , அலாரிப்பின் இறுதி கோர்வையில் அமையப்பெற்றது இவ்வுருப்படிக்கு மேலும் அழகு சேர்த்தது.
அரிய மெய்ப்பொருளாகக் கிடைக்கும் பாரதியின் இயலுக்கு, பாரதியின் வழிவந்தோராய் திகழும் ராஜ்குமார் பாரதி ஐயா இசை அமைப்பதும், பாரதி பக்தையாய் அதனை நாட்டியத்தில் கொண்டுவருவதும் பாரதி அருளன்றிப் பிறிதில்லை. முத்தமிழால் பாரதியை ஆராதிக்க பெருவரம் பெற்றேன்.
950 total views, 3 views today