ஒரு கவனிப்பு கிடைக்கும் என்பதால் முரணை முன்வைக்கும் சில ஊடகங்கள்!
சேவியர்-தமிழ்நாடு;
சில திரைப்படங்களை இயக்குபவர்கள் கிளைமேக்ஸ் காட்சியை இரண்டு விதமாகப் படமாக்குவார்கள். ஒருவேளை ஒரு முடிவு மக்களை வசீகரிக்கவில்லையேல் அதை மாற்றிவிடலாம் என்பது ஒரு எண்ணம். ஒருவேளை வினியோகஸ்தர்களுக்கு ஒரு முடிவு பிடிக்கவில்லையேல் இன்னொரு முடிவை வைத்து படத்தை விற்பனை செய்யலாம் என்பது இன்னொரு எண்ணம்.(உதாரணம் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்,வாணிஸ்ரீ,நடித்து பெரு வெற்றிபெற் படம் வசந்தமாளிகை. இப்படத்தில் முடிவு 2 ஆக இருக்கும்,தமிழ்நாட்டில் நாயகன் சிவாஜி இறக்காத வசந்தமாளிகையும்,தெலுங்கில் சிவாஜி இறந்தமாதிரியாகவும் படம் முடியும்)
அதே போல பத்திரிகைத் துறையிலும் சில விஷயங்களில் இப்படி இரட்டைச் செய்திகளை தயாராக்கி வைப்பதுண்டு. கடைசி நேரத்தில் எதை வெளியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். குறிப்பாக ஏதாவது ஒரு முக்கியமான நபர் கவலைக்கிடமாய் மருத்துவமனையில் படுத்திருந்தால் கடைசி வினாடி வரை காத்திருப்பார்கள். அச்சுக்குப் போகும் கடைசி கணத்தில் தான் எதை வெளியிடுவது என்பதை முடிவு செய்வார்கள்.காரணம்,
முதலில் செய்தியைக் கொடுக்க வேண்டும் எனும் ஆர்வம் ! நமக்கு தெரிஞ்சப்புறம் தான் ஊருக்கே தெரியும் என காட்டிக் கொள்ளும் அவசரம் ! அவர்களுடைய பத்திரிகைக்கு அதிகம் பிரபலம் கிடைக்க வேண்டும், அதிக விற்பனை நடக்க வேண்டும், அதிக ரேட்டிங் கிடைக்க வேண்டும் போன்ற தொடர் எண்ணங்கள் !!
ஒரு விஷயத்தை முதலில் சொல்லி விடுவதாலேயே ஒரு பத்திரிகை சிறந்த பத்திரிகை ஆகிவிடுவதில்லை. ஒரு முதல் பரபரப்பு கிடைக்கும் அவ்வளவு தான். அதன் பின் மக்கள் அதன் உண்மைத் தன்மையையும், அதன் பின்னணியையும், அதன் தேவையையும், அடுத்தடுத்த ஆழமான விளக்கங்களையும் நோக்கி பயணித்து விடுவார்கள்.
இன்றைக்கு அச்சு ஊடகங்களை விட அதிகமாக சமூக வலைத்தளங்களும், டிஜிடல் ஊடகங்களும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன.இவர்கள் எப்போதும் போனும் கையுமாகவோ, கேமராவும் கையுமாகவோ அலைகிறார்கள். கிடைக்கின்ற பதிவுகளோடு தங்களுடைய கற்பனைகளையும் கலந்து ஒரு பரபரப்பான காட்சியாக பதிவு செய்து விடுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை ஒரு வீடியோ வைரல் ஆகிறதா என்பதே கேள்வி. ஒரு தகவல் அவர்களுடைய சானலை அதிகம் கவனிக்க வைக்கிறதா ? அதிகம் பயனர்களை இணைக்கிறதா ? அதிகம் பார்வையாளர்களை கொண்டு வருகிறதா என்பதே அவர்களுடைய ஒரே நோக்கம்.
கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் எனும் கோட்பாடு சமூக வலைத்தள செய்தியாளர்களிடையே இருக்க வேண்டியது அவசியம். முதலில் சொல்வது முக்கியமல்ல, முதன்மையான விஷயங்களைச் சொல்வதே முக்கியம் எனும் புரிதல் அவசியம்.
சிலர் சில விஷயங்கள் பொய் என்பதைத் தெரிந்து கொண்டே சொல்வதுண்டு. கேட்டால், அப்படிப் போட்டால் தான் ஒரு கவனிப்பை ஈர்க்க முடியும், அடுத்த முறை அதன் விளக்கத்தைக் கொடுத்துவிடலாம் என்பார்கள்.
சிலர், வேண்டுமென்றே முரணான பார்வையை முன்வைத்துக் கொண்டே இருப்பார்கள். எது சரி என்பது தெளிவாய்த் தெரிந்தால் கூட முரணை முன்வைக்கும் போது ஒரு கவனிப்பு கிடைக்கும் என்பதால் அதைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
ஊரே ஒரு படம் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னால், அதில் பல குறியீடுகள் மறைந்துள்ளன! அது ஒரு சாராரை இழிவு படுத்துகிறது, அல்லது ஒரு சித்தாந்தத்தை முன்னிறுத்துகிறது என்று ஏதேனும் கொளுத்திப் போடுவார்கள். அது மெல்ல மெல்ல ஒரு விவாதமாய் மாறி கொழுந்துவிட்டு எரிய வைப்பார்கள். அது ஒரு பேசு பொருளாகும்போது, “அதை நாம தான் முதல்ல கண்டுபிடிச்சு சொன்னோம்” என பெருமை பேசுவார்கள்.
ஒரு செய்தியைப் பதிவிடுகையில் அதைப் பற்றி அறிந்து, ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பின்பே போடவேண்டும். வீசிய சொற்களை திரும்பப் பெற முடியாது. ஒரு தவறான செய்தியைப் படிப்பவர்கள் எல்லோருமே அதன் விளக்க உரையையும் படிப்பார்கள் என சொல்லி விட முடியாது !
ஒரு வாசகனுடைய மனநிலையில் ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும். அந்த செய்தி வாசகனுக்கு ஒரு தகவலை அதன் யதார்த்ததுடன் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.
ஒரு செய்தி சமூகத்தின் கட்டமைப்பையோ, அமைதியையோ சீர்குலைக்காத வகையில் இருக்க வேண்டும். எல்லா செய்திகளையும் வெளியிட வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் வெளியிடும் செய்திகள் சமூகத்தின் ஒற்றுமையை சிதைக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவசியம்.
சாதி, மத, இன வெறுப்புகளை தூண்டுகின்ற செய்திகள் பரபரப்புகளை உருவாக்கலாம் ஆனால் சமூக நல்லிணக்கத்துக்கு அவை வேட்டு வைப்பவை. எனவே அத்தகைய செய்திகளைத் தவிர்க்க வேண்டும்.
நான் எழுதத் துவங்கிய காலத்தில் அப்பா ஒரே ஒரு அறிவுரையைச் சொன்னார். ‘எதிர்மறை சிந்தனைகள் எதுவும் உன்னுடைய எழுத்தில் எழாமல் பார்த்துக் கொள்” என்பதே அது. அவர் மனித நேயத்தை மிக உயர்வாய் வைத்திருந்தவர். அதனால் அவர் சொல்ல வந்த செய்தி எனக்குத் தெளிவாகப் புரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை அதை முடிந்தவரை கடைபிடித்தே வருகிறேன். காரணம் ஒரு செய்தி சொல்லப்படுவதை விட முக்கியம், அந்த செய்தி சொல்லப்பட வேண்டுமா என்பதைப் புரிந்து கொள்வது.
சில செய்திகளை சொல்வதை விட, கொல்வது முக்கியம். !
சில செய்திகள் யாராலும் சீண்டப்படாமலேயே கிடக்கும். காரணம் அது எந்த விதமான ஒரு பரபரப்பையும் கிளப்பாது. அத்தகைய செய்திகளை சீர்செய்து சமூகத்திற்கு அளிக்க வேண்டும். துரித உணவுகளை விட ஆரோக்கியமான உணவுகளே நமக்கு முக்கியம். நல்ல மரம் வளர காலம் தேவைப்படும். இவற்றைப் புரிந்து செயல்பட வேண்டும்.
ஒரு செய்தியாளருக்கோ, ஒரு கட்டுரையாளருக்கோ, ஒரு இலக்கியவாதிக்கோ சமூகப் பொறுப்பு இரு மடங்கு அதிகம் இருக்க வேண்டும். நாம் விதைக்கின்ற விதைகள் நச்சு விதைகளாக இல்லாமல், பிறர் மெச்சும் விதைகளாக இருக்க வேண்டும். நாம் விதைக்கும் விதைகள் கனிகொடுக்க வேண்டுமே தவிர, நிலம் கெடுப்பவையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை.
அச்சங்களுக்கு ஆட்பட்டு செதுக்கப்படும் செய்தியானது, சிதைக்கப்பட்ட சிலை போல சின்னாபின்னமாகி விடும். செய்திகளுக்குள் வசீகரம் இருப்பதை விட, வாய்மை இருக்க வேண்டும். அழகு இருப்பதை விட அறிவு இருக்க வேண்டும் பல வேளைகளில் செய்திகள் புனை கதைகளாகவும், புனை கதைகள் செய்திகளாகவும் மாறிப் போய் பல்லிளிக்கும். செய்திகள் தற்குறிப்பேற்ற அணிகளை ஏற்றி விஸ்வரூபமெடுப்பது அவசியமற்றது. உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் உள்ளதை உள்ளபடி சொல்வது சமூகத்துக்கு தீங்கு விளைவிக்குமெனில் பொய்மையும் வாய்மையிடத்து என்பதையே பின்பற்ற வேண்டும்.
சொல்கின்ற விஷயத்தில் நடுநிலை வகிப்பது மிக மிக அவசியமான ஒன்று. அதே நேரம், அது தான் மிகவும் கடினமான ஒன்று. நமது மதம், மொழி, இனம், சாதி போன்ற அடையாளங்கள் நம்மை அறியாமலேயே தலைகாட்ட முயலும். நம்மை அறியாமலேயே நாம் ஒரு சார்பு நிலை எடுக்க அந்த அடையாளங்கள் நம்மை இழுக்கும். அத்தகைய புரிதலோடு ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும்.
இதை நான் தான் முதலில் சொன்னேன் என்பதை விட, இதை நான் தான் சரியாய் சொன்னேன் என்பதே முக்கியம்! இது என் வளர்ச்சிக்கு பயன்படும் பயன்படும் என்பதை விட, இது சமூக மலர்ச்சிக்கு பயன்படும் என்பதே முக்கியம். இது பரபரப்பை உருவாக்கும் என்பதை விட, இது பயனுள்ளதை உருவாக்கும் என்பதே முக்கியம் !
முதன்மைகளை அறிவோம், வெற்றிகளை அடைவோம்
950 total views, 2 views today