கருப்பை எனும் கர்ப்பக்கிரகம் ஒரு உயிர் வரவுக்கான ஆய்வுகூடம்
கௌசி.யேர்மனி
கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே. இந்தக் கேள்வி தமிழர்கள் மத்தியில் கலாசாரமாகவே இருக்கின்றது. திருமணம் மூலம் அங்கீகாரம் வழங்கி அவர்களை இனத்தின் விருத்திக்குத் தயாராகச் செய்யும் கடமை தம்மிடம் இருப்பதாக பெரியவர்கள் கருதுகின்றார்கள். அந்தக் கருக்கட்டல் சரியான முறையில் ஏற்படுவதற்கும் அக்கருவைச் சரியான முறையில் வளர்த்தெடுப்பதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்குவதும் அவர்களின் கடமையாக இருக்கின்றது. முதல் இராத்திரிக்கு நாள் குறித்துக் கொடுப்பதும் இல்லையென்றால் தேனிலவுக்கு தம்பதியினரை அனுப்பி வைப்பதும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை உலகத்துக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கமாக அமைகின்றது. இச்செயற்பாடு எந்த அளவிற்கு இளந் தலைமுறையினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது என்பது தற்காலத்தில் கேள்விக்குறியாக இருந்தாலும் முறையற்ற உறவுகளால் கருத்தரித்தல் ஏற்படுவது இக்காலத்தில் சர்வசாதாரணமாக இருக்கின்றது. இதனால் கருச்சிதைவுகள் நடைபெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உருவான குழந்தையை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலமோ வீட்டில் மருத்துவச்சியை அழைத்தோ குழந்தைப் பேறை கவனமாகச் செய்கின்ற முறை ஐரோப்பிய நாட்டிலும் இருக்கின்றது.
குழந்தை வயிற்றில் உருவாவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், எப்படி வளர்கின்றது, எவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்றது. ஏன் பிள்ளைக்குக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பிள்ளையை எப்படி வெளியே இலகுவாக எடுப்பது. கருசசிதைவு செய்வது என்பன பற்றி நற்றிணை, புறநானூறு, திருமந்திரம், குறுந்தொகை, பட்டினத்தார் பாடல்கள், போன்ற பல பாடல்களிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
அக்குழந்தை கருவாகின்ற காலத்திலே புல்லுக்கு மேலே விழுந்த பனித்துளியின் அளவிற்கு அந்த கரு இருக்கும் என்று அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலே பாடியிருக்கின்றார்.
அறுகுநுனி பனியணைய சிறிய துளி
பெரியதொரு ஆகமாகி என்கிறார்.
இதனைப் பட்டினத்தார் பாடுகின்ற போது
~~ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகம்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடமி தென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று
உருவமும் ஆகி உயர வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து
ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து||
என்று பாடிச் செல்கின்றாh
இதனையே திருவாசகத்திலே அற்புதமாக கரு உருவாகி குழந்தையாக பிறப்பது பற்றி மாணிக்கவாசகர் பாடுகின்றார்.
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
மனிதப் பிறப்பிலே தாயின் வயிற்றிலே கருவுறுகின்ற போது அதனை அழிப்பதற்குச் செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிரிவு படாமல் தப்பியும், இரண்டாம் மாதத்தில் நடக்கின்ற காரியங்களாலே உருக்கெடுவதிலிருந்து தப்பியும், மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காவது மாதத்தில் அம்மத நீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாவது மாதத்தில் உயிர் பெறாது இறப்பதிலிருந்து தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் சொறி மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும்(குறைப்பிரசவம்), எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும்(இட நெருக்கடி), ஒன்பதாவது மாதத்தில் வெளியே வர முயல்வதால் வருந்துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தாய் படுகின்ற கடல் போன்ற துன்பத்தோடு துயரத்தினின்று தப்பியும், பூமியிற்பிறக்கின்றது.
இவ்வாறு பிறக்காது காந்தபுரத்து மன்னன் மகள் பிரசவ வேதனையால் துடித்தபோது நறையூர் மருத்துவச்சி அவளுடைய வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்ததாகக் கொங்கு மண்டல சதகம் 92 ஆவது பாடலிலே பாடப்பட்டுள்ளது. இந்நூல் 11 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது.
குறைவறு தெண்ணீர் நதியணை காந்தபுரத் தொரு நல்
லிறை மகளார் மக வீனப் பொறாதுட லேங்க வகிர்
துறை வழி பேற்று மகிழ்வூட்டு மங்கல தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர்நாடு சூழ் கொங்கு மண்டலமே
என அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த செய்தி கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றெடுக்கும் பிள்ளைகளைக் கருச்சிதைப்பது பற்றிக் கூறும் போது இது ஒரு பாவச் செயல் எனவும் மருத்துவர்களோ மற்றவர்களோ அதற்கு ஊக்கமளிக்கக் கூடாது என புறநானூற்றுப் பாடல் எடுத்;துரைப்பதில் இருந்து அக்காலத்தில் கருச்சிதைவும்; நடைபெற்றிருக்கின்றது என்பதை அறியக்;கூடியதாக இருக்கின்றது.
கருப்பை என்பது கர்ப்பக்கிரகம் போன்றது. அங்கு பரிசுத்தமான ஒரு உயிர் உற்பத்தி நடைபெறுகின்றது. ஆணும் பெண்ணும் தம்முடைய எதிர்கால வாரிசை உருவாக்க எடுக்கும் முயற்சியின் ஆய்வுகூடம். இதனாலேயே இக்கரு வளர்ச்சி சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பழைய தமிழ் இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் அற்புதமாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.
1,273 total views, 2 views today