தீக்குள் விரலை வைத்தால்!
தெறிவினை!
-மாதவி
ஒரு பந்தை முகத்திற்கு நேரே எறிந்தால்! நீங்கள் உடன் தடுப்பீர்காளா? அல்லது குனிவீர்களா?
தீ தவறுதலாக விரலைச் சுட்டால், உடன் எந்தப்பக்கம் எடுக்க வேண்டும் என்று மூளையுடன் கலந்துரையாடி முடிவு எடுத்து கையை தூக்குவீர்களா?
ஏன் சில பெண்களுக்கு கைகொடுத்தால் கும்பிட்டு வணக்கம் சொல்வார்கள். (அந்தக்காலத்தில்) ஆனால் அதே பெண்களுக்கு சட்டென கைகொடுத்து பாருங்கள், உடன் கைதந்து விடுவார்கள், அந்த இடத்தில் அவர்கள் மூளைக்கு அனுப்பி கருத்து கேட்பதற்கு முன், செயல் பாடு ஒன்றினை இந்த உடல் எடுத்துவிடும்.
நுளம்பு கடித்தால் சட்டென அடிப்பவர் செயல் பாடும் அத்தகையதே. அடித்தவர் ஜீவகாருண்யச் சித்ராவும், இருக்கலாம். இந்த உடல் எடுக்கும், சில செயற்பாடுகள் நன்மை தீமை இரண்டையுமே தரலாம். இந்த விடையம் பற்றி சிந்திக்கத்தூண்டியது எனது நாற்பது வருட நண்பன் ஒருவரது விபத்து மரணம்.
யேர்மனியில் கடந்த மாதம் (02.06.2022) எனது நண்பரது கார் திடீர் என பின்னோக்கி நகர்ந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பின்னோக்கி உருள்வதைக்கண்ட நண்பர், சட்டென பின்னுக்கு ஓடி காரை தடுக்க முயன்றுள்ளார். கார் இறக்கம் நோக்கி நகர்ந்தமையால் வேகம் அதிகரித்து, நண்பரையும், பின்புறமாக தள்ளிவீழ்த்தி, அவருக்கு மேலால் ஏறிச் சென்றது. மிகவும் பாரமான அவுடி கார். வைத்திய சாலைக்கு கெலிகொப்ரல் மூலம் உடன் எடுத்துச் சென்றும் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை.
இச்சம்பவம் நடைபெற்றபின்,கருத்துச் சொல்வார்கள், காரைக் காப்பாற்றச் சென்று உயிரைவிட்டு விட்டார், கார் உருண்டால் என்ன அருகில் நின்று பார்க்க வேண்டியது தானே, கொஞ்சம் யோசித்து இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம், என்று பல கருத்துக்கள் உலா வந்தன. விபத்து என்றாலே யோசிப்பதற்கு முதல் வருவதே. யோசித்து இருந்தால் விபத்து என்று ஒன்று இல்லையே.
இங்கு நடந்த விபத்து, மூளையோசித்து செயற்படுவது போலன்றி, முண்ணான் தெறிவினை போன்று, இது தன் இச்சைனயான செயற்பாடு ஒன்று நடைபெற்று இருக்க வாய்ப்புண்டு.
அதனால் சட்டென உருளும் காரை உடன் தடுக்முயன்று உள்ளார். காரின் வேகம் இறக்கத்தில் அதிகரிக்க, புலிவாலைப்பிடித்த மாதிரி மீளமுடியாத நிலை ஏற்பட்டு போராடவேண்டி இருந்திருக்கும்.
எனது நண்பர் சாதாரண மனிதர்களை விட, மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக நடக்கும் ஒரு விவேகி.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் அவர் சாதரண மனிதர்களை விட சிறப்பாக செயற்பட்டு இருக்க முடியும், ஆனால் இந்த விபத்தில் எவருக்கும் உள்ள பொதுவான தெறிவினையே அவரை இயக்கியுள்ளது என நம்பமுடிகிறது.
விபத்து முடிந்தபின் நான் என்றால், இப்படி செய்து இருப்பேன், அப்படி செய்து இருப்பேன் என எண்ணுவதும், கூறுவதும் தவறு. அந்த சந்தர்ப்பத்தில் எவராக இருந்தாலும் முதல் (முண்ணான்) தெறிவினையே தெறித்து இயக்கியிருக்கும்.
இருந்தாலும் இந்த விபத்தை அறிந்தவர்கள் எதிர்காலத்தில் இப்படியான சந்தர்ப்பங்களில் ‘நானாக இருந்திருந்தால் எதனை செய்வேன் என்று சொல்கிறீர்களோ’ அதனைச் செய்தால் யாவருக்கும் மகிழ்ச்சியே, இதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி வருவதே விபத்து. நாளை எதுவும் எவருக்கும் நடக்கலாம்! முடிந்தவரை பாதுகாப்பாகச் செயற்படுவோம்.
671 total views, 3 views today