தொடரும் ‘சிங்கள மயமாக்கல்’ திட்டம்!

பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும்… தொடரும் ‘சிங்கள மயமாக்கல்’ திட்டம்!

பொருளாதார நெருக்கடியால் இலங்கை ஸ்தம்பிதமடைந்திருக்கும் ஒரு பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் பகுதியில் தமது சிங்கள மயமாக்கல் செயற்பாட்டடை அரசாங்கம் மீண்டும் முன்னெடுத்திருக்கின்றது. தென்பகுதியிலிருந்து இராணுவப் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட நூற்றுக்கணக்கான பிக்குகள், சிங்கள மக்களின் முன்னிலையில் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்ய அவர்கள் எடுத்த முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-06-2022) தமிழ்த் தரப்பினரது போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த முயற்சியை சிங்களவர்கள் மீண்டும் முன்னெடுக்கமாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலை பிரச்சினையில் நீதிமன்றத்தீர்ப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் நடைமுறைகள் என்பன உள்ளபோதிலும் அவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் இந்த செயற்பாட்டடை சிங்கள தரப்பினர் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதற்கு முற்றுமுழுதாக அரச அனுசரணை இருந்துள்ளது. இந்த மலையில் உள்ள ‘குருந்தாவசோக’ ராஜமகா விகாரையில் புத்தர் சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஸ்டை செய்வதற்காக பாரியளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நீதிமன்ற உத்தரவையும் மீறி இங்கு விகாரை ஒன்று அரசாங்கத்தின் ஆதரவுடன், இராணுவப் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாகத்தான் இங்கு புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

நாடு பாரிய பொருளாதார – அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் – பௌத்த மகாசங்கத்தின் ஆதரவுடன் – இராணுவப் பாதுகாப்புடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ராஜமகா விகாரையின் விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

புதிய கட்டுமானப்பணிகள் எதுவும் இப்பகுதியில் இடம்பெறக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அதனையிட்டு எந்தவிதத்திலும் அக்கறை செலுத்தாமல் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நிலையில் விகாராதிபதி இருந்துள்ளார். ஆனால், சட்டத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய பொலிஸாரோ அவர்களுடைய இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்குத்தான் பாதுகாப்பு கொடுத்தார்கள். தமிழர்கள் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தார்கள். இந்தத் தடையையும் மீறிச்சென்றுதான் தமிழ் மக்கள் அப்பகுதிக்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்து இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்கள்.

குருந்தூர் மலையின் உச்சியில் ஆதிசிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த பொங்கல் உள்ளிட்ட பூசை வழிபாடுகள் சிங்களவர்களின் அடாவடித்தனத்தால் நிறுத்தப் பட்டுள்ளன. இங்கிருந்த சூலம் பிடுங்கி எறியப்பட்டுள்ளது. சூலம் இருந்த பகுதியில்தான் பௌத்த விகாரைக்கான கட்டுமானப்பணிகள் இடம்பெற்றன. அதன் அடுத்த கட்டமாகத்தான் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கான முயற்சிகள் இப்போது முன்னெடுக்கப்பட்டன.

2018 இல் இங்கு உருவான சர்ச்சையையடுத்து குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் ஆய்வுப் பகுதியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. தொல்பொருள் ஆய்வுப் பகுதியாகப் பிரகடனம் செய்யப்படும் ஒரு பகுதியில் புதிய கட்டுமானங்கள் எதுவும் செய்யப்படக்கூடாது என்பது தொல்பொருள் திணைக்களத்தின் பொதுவான விதி. அது எவ்வாறு உள்ளதோ அவ்வாறே பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மேலாக நிதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் இதனைத்தான் வலியுறுத்தியிருந்தது. தொல்பொருள் ஆய்வுப் பகுதி என்ற பெயரில் இந்தப் பகுதி வெளியாட்கள் யாரும் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டது. இதற்காக இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கு மத்தியில்தான் அங்கு விகாரை அமைக்கும் பணி இடம்பெற்றிருந்தது.

இங்கு இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின் போது பௌத்த சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அரைகுறையாக சிதைவடந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்றும் அங்கு காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தகவல் வெளியிட்டார்கள். அதன் அடிப்படையில்தான் பின்னர் புதிதாக பௌத்த விகாரையை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. படையினரின் பங்கேற்புடன்தான் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு பௌத்த ஆலயம் கட்டப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரத்தினத்திடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்:

‘அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள்இ திராவிட கலை மரபில் கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிரஇ அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது.

எனவே குருந்தலூரில் பௌத்த எச்சங்கள் காணப்படுமானால் அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்து பாதுகாத்து ஒரு மரபுரிமைச் சின்னமாகக்கொள்ள வேண்டுமே தவிரஇ முன்னொருகாலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான ஒரு சின்னமாகக் கருத்திற்கொண்டு அதனை மீளக்கட்டி ஒரு ஆலயமாக மாற்றுவது தொல்லியல் நடைமுறையின் சட்டங்களுக்கு முரணானதாகவே பார்க்கப்பட வேண்டும்.’

ஆக தொல்லியல் திணைக்களத்தின் நடைமுறைகளையும் மீறியே இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது வெளிப்படை. எதற்காக அரசாங்கமும், பௌத்த அமைப்புக்களும் இந்த வேளையில் இதனைச் செய்து ஏன்?

‘அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது. எரிபொருட்களுக்காக மக்கள் தினமும் வீதிகளில் போராடுகின்றார்கள். உணவுப் பொருட்களின் விலைகள் எட்டமுடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டதால் நாட்டில் 80 வீதமான மக்கள் ஒரு நேர உணவைத் தவிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ‘கோட்டா கோ கம’விலும் ஏனைய இடங்களிலும் தீவிரமடைந்திருக்கின்றன. இதில் தமிழர்களும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதன் மூலமாக ஏற்படக்கூடிய இன ஒற்றுமையை குலைப்பதும், நாட்டில் என்னதான் நெருக்கடி இருந்தாலும் சிங்கள – பௌத்த மயமாக்கலில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்பதை சிங்கள – பௌத்த கடும் போக்காளர்களுக்குக் காட்டிக்கொள்வதும்தான் அரசின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்’ எனக் கூறுகின்றார் பேராசிரியர் புஸ்பரெட்ணம்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கதான் இந்தப்பகுதிக்குச் சென்று இந்த பௌத்த விகாரை அமைக்கும் பணிகளுக்குப் பின்புலமாக இருந்தவர். ‘தொல்பொருள் ஆய்வுப் பணிகளே இங்கு முன்னெடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அல்ல’ என தமிழத் தரப்புக்கு சமாதானம் கூறியிருந்தார். ஆனால், இவ்வருட ஆரம்பத்திலிருந்து இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் விகாரைக்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆய்வுப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த தொல்பொருள் திணைக்களம் அனுராதபுர காலத்துக்குரிய சின்னங்கள் சில இங்கு கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த்திருந்தது. இந்த ஆய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் தொடர்பாகவோ அவற்றின் வரலாற்று விளக்கங்கள் தொடர்பாகவோ வெளிப்படைத்தன்மையாக எதுவும் நடைபெறவில்லை. தமக்கேற்றவகையிலான பெறுபேறுகளைத்தான் தொல்பொருள் திணைக்களம் வெளியிட்டது. இது தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தமிழ் ஆய்வறிஞர்கள் சிலர் முன்வைத்த போதிலும் அவை கவனத்திற்கொள்ளப்படவில்லை.

இருந்தபோதிலும் வரலாற்றுத் தகவல்களின்படி 12 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் தமிழர்களும் பௌத்த மதத்தைப் பின்பற்றியிருக்கின்றார்கள். இதனை சிங்கள அறிஞர்கள் பலரும் முன்னர் ஏற்றிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் அதனை மறைக்க nமுற்படுகின்றார்கள். பௌத்த சின்னங்கள் பலவற்றில் தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டுள்ளன. இது தமிழ் மக்கள் பௌத்தமதத்தை பின்பற்றினார்கள் என்பதற்கு ஆதாரம். ஆனால், வடக்கில் இருக்கக்கூடிய பௌத்த சின்னங்களை பயன்படுத்தி அந்தப் பகுதியை சிங்கள மயமாக்குவதை அரசும், தொல்பொருள் திணைக்களமும் தமது நிகழ்சித் திட்டமாக மாற்றியமைத்திருப்பதால் தமிழ் பௌத்தர்கள் இருந்தாhர்கள் என்பதை அவர்கள் மறைக்கின்றார்கள்.

சிங்கள – பாளி இலக்கியங்கள் சில இந்த குருந்தூர் மலை தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டிருப்பதாக தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் புஸ்பரெட்ணம் தெரிவிக்கின்றார். ’13 ஆம் நூற்றாண்டில் தமிழருக்கு சார்பான அரசு ஒன்று இருந்தது – இதன் படைகள் இராணுவ மையம் இருந்த இடங்களில் ஒன்றாக இந்த குருந்தலூர் பகுதியை சிங்கள பாளி இலக்கியங்கள் தெரிவிக்கின்றன’ என பேராசிரியர் குறிப்பிடுகின்றார். ’11 ஆம் நூற்றாண்டில் பராக்கிரமபாகுவின் பர்மியப் படையெடுப்புக்கு தலைமை தாங்கியதும் ஒரு தமிழன்தான். அவனுடைய தலைமையிலான படை குருந்தூர் பகுதியிலிருந்தே புறப்பட்டது என பேராசிரியர் பரணவிதாரண வரலாற்று நூல் ஒன்றில் தெரிவிக்கின்றார்’ என பேராசிரியர் புஸ்பரெட்ணம் சுட்டிக்காட்டுகின்றார். இதனைவிட தமிழ் மொழியிலான கல்வெட்டுக்கள் பலவும் இங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஆக, ஆய்வுகள் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களம் வெளிப்படைத்தன்மையில்லாமல் தமக்குத் தேவையான பெறுபேறுகளை உருவாக்குகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனை எந்தளவுக்குத்தான் தமிழ்த் தரப்பினர் வெளிப்படுத்தினாலும் சிங்களத் தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ‘கோட்டா கோ கம’வில் நடைபெறும் போராட்டத்தில் தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகின்றது. ஆனால், தமிழர்களின் மீது நிகழ்த்தப்படும் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் அவர்களின் கண்களில் படாத வரையில் தமிழ் மக்கள் அந்தப் போராட்டங்களில் எவ்வாறு இணைந்துகொள்ள முடியும்?

761 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *