இங்கிலாந்து அரச சட்டப்பேரவையில் ஆணாதிக்கமா?

-விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து.

     

பெண்குழந்தைகள் சுமார் 12வயதில் பருவமடைவதுபோல, சிறுவர்களுக்கும் அதே வயது எல்லையில் பருவ விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. பெண்களின் அரைநிர்வாண புகைப்படம் ஏதும் கிடைத்தால், அதை பாடசாலைக்கு மறைத்துக் கொண்டுபோய் தன் சக மாணவர்களிடம் காட்டி பெருமைப்படுவது அந்தக்கால வழக்கம். அந்த சகாக்களில் பலர் சிரிப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். சிலர் ‘சாமிப்போக்கானவர்கள்’. காயமே இது பொய்யடா என்று நிராகரிப்பார்கள். எஞ்சியவர்கள் நாக்கைத் தொங்கப்போட்டபடி பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஓரிருவர் “இது விரசம், அது இது” என்று கருதி பள்ளி வாத்தியாரிடம் போட்டுக் கொடுப்பார்கள்.

   இது ஒரு சாதாரண பள்ளிக்கூடத்தில் நடக்கக்கூடிய காட்சி. ஆனால், ‘உலக ஜனநாயகத்தின் தாய்’ என்றும், உலக நாடாளுமன்றங்களின் ‘தாய் நாடாளுமன்றம்’ என்றும் உயர்வாக மதிக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், இந்த ஆங்கில நாட்டின் அரச சட்டப்பேரவையில் இப்படி ஒரு சம்பவம் மே மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இங்கிலாந்தின் Devon மாவட்டத்தில் Tiverton & Honiton என்று ஒரு தேர்தல் தொகுதி! கடந்த 12ஆண்டுகளாக 2010 முதல் M.Pயாக இருந்து வருகிறார் 66 வயதான நீல் பரிஷ். பிரதமர் Boris Johnson இன் ஆளும் கன்சவேடிவ் கட்சியை சேர்ந்தவர். திருமணமானவர். இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

    “எனது விவசாயத் தொழிலுக்கு தேவையான உழவு இயந்திரங்களை வாங்குவதற்காக என் கைத்தொலைபேசியில் அதன் முகவரியை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அதேபோல பெயர்கொண்ட ஒரு Website குறுக்கிட்டது. பாலியல் உறவுகளை மிக விரிவாகக் காட்டும் படங்கள் காணப்பட்டன. அக்கணமே நான் அதனை தவிர்த்துவிட்டு வெளியேறினேன். நான் செய்த மிகமிகப் பெரிய குற்றம் இன்னோர் தடவை அந்த தவறான கணனி முகவரிக்கு நானாக சென்று படங்களை பார்வையிட்டேன். இரண்டாவதாக நான் பார்வையிடும்போது நாடாளுமன்ற சபையின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. நான் செய்தது மிகப்பெரும் தவறு! என் வாழ்வில் எஞ்சிய காலம் முழுதுமே இந்த தவறுடன்தான் நான் சீவிக்கவேண்டியிருக்கும். பன்னிரண்டு வருடங்களாக M.Pஆக நான் கட்டிக்காத்த கண்ணியம் காற்றோடு கரைந்து மறைந்துவிட்டது. அந்த ஒரு வினாடி ஒரு சிறிய கணம் என் மனம் தன் சுயகட்டுப்பாடுகளை இழந்தது என்றுதான் சொல்வேன்!.

   இந்தச் சம்பவத்தால் என் மனைவி, குழந்தைகள்,  என் தொகுதி மக்கள், என் தேர்தல் தொகுதி சங்கத்தினர் அனைவருக்கும் நான் மாறாத களங்கத்தை ஏற்படுத்திவிட்டேன்” என்று கண்ணீர் மல்க திரு. நீல் பரிஷ் தமது பதவியை துறந்து நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். ஆளும் கன்சவேடிவ் கட்சிக்காக தமது தேர்தல் தொகுதியில் 60சத விகிதமான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று 24,239பெரும்பான்மை வாக்குபலத்துடன் தொழிற்கட்சி வேட்பாளரை தோற்கடித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் செல்வாக்குமிக்க உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்ந்த நீல் பரிஷ் அவர்களுக்கு (எங்கள் ஊர் ஆச்சிக்கிழவியின் பாஷையில்) “ஏன்தான் புத்தி குறுக்கால போச்சுதோ தெரியேல்லை!” – சனி தோஷமாக இருக்கலாம்!.

   இனி அவரது தொகுதியில் உப தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு ஆளும் கன்சவேடிவ் கட்சியின் புதிய உறுப்பினர் ஒருவர் M.Pஆக பதவிப்பிரமாணம் செய்வார். சுமுகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் குறுக்கே நாயோ, வேறு விலங்கோ வந்தால் ரயில் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு நிற்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். 

   இம்மாதம் நீல் பரிஷ் அவர்களின் தொலைபேசி விவகாரத்தால் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அதிர்ச்சிக் குலுக்கல் குலுங்கி நிற்க முன்னரே மற்றோர் பாலியல் விவகாரம் அம்பலமாகியது. பிரிட்டனில் புதன்கிழமை தோறும் 3.00 மணிக்கு பிரதமரின் கேள்விநேரம் (P.M’s Question Time) நடக்கும். நாடாளுமன்றத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் ஜோன்சன் எழுந்து நின்று பதிலளிப்பார். பிரிட்டிஷ் நாடாளுமன்றில் கூட்டம் நடக்கும் படத்தைப் பாருங்கள். இலங்கை நாடாளுமன்றம், சென்னை சட்டமன்றம் ஆகியவற்றில் காணப்படுவதுபோல, பிரிட்டிஷ் நாடாளுமன்றில் எந்தவொரு M.P க்கும் மேஜை கிடையாது. குறிப்பாக முன்வரிசையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள், குறிப்பாக பெண் M.Pக்கள் தமது கால்களை எங்கே, எப்படி வைக்கிறார்கள் என்பது கடந்தவாரம் சர்ச்சையாக மாறியது. 

  பிரதமர் ஜோன்சன் அரசாங்க தரப்பில் எழுந்து நின்று Despatch boxஇல் நின்று கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்க்கட்சியின் மூத்த தலைவி Angela Rayner ஆளும் கட்சிக்கு எதிர்தரப்பில் உள்ள ஆசனங்களில், பிரதமர் ஜோன்சனுக்கு நேர் எதிராக குட்டைப் பாவாடை அணிந்து அமர்ந்தபடி தனது இடதுகாலின் மேல் வலதுகாலை போடுவதும், பின்னர் கால்களை மாற்றி, வலது கால்மீது இடதுகாலை போடுவதுமாக இருந்தாராம். நடிகை சிலுக்கு சிமித்தா போன்ற தோற்றம்கொண்ட Angelaவின் ‘கால் மாறி ஆடும்’ திருவிளையாடலை பிரதமர் கவனித்தாரோ இல்லையோ, ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கவனித்தார்கள். தங்கள் தலைவர் பிரதமர் ஜோன்சனின் கவனத்தை சிதறடிக்கவே எதிர்க்கட்சி அம்மணி முன்வரிசையில் அமர்ந்து இந்த திருகுதாளத்தை அரங்கேற்றினார் என்று ஆளும் கட்சியினரும், அவர்களது ஊதுகுழல் பத்திரிகையான Sunday mail உம் காரசாரமான கோபத்துடன் எழுதியிருந்தன. தன்னைப் பற்றிய இந்த விரசமான கருத்துக்களுக்கு Angela பதிலளித்து கருத்து வெளியிடும்போது “பிரதமர் ஜோன்சனின் கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்கும் ஆற்றல் எனக்கு இருக்கவே இருக்கிறது. அதற்காக ‘அதை இதைக்காட்டி’ அவரது கருத்தை திசை திருப்பவேண்டிய அவசியமே எனக்கு இல்லை!” என்று குறிப்பிட்டார். 
   ஒட்டு மொத்தத்தில் தொழிற்கட்சி Angelaவுக்கும் Oxfordல் படித்த பிரதமர் ஜோன்சனுக்கும் இடையில் கன்சவேடிவ் கட்சியினரும் ஊடகங்களும் மூட்டிவிட முற்படும் தீ, வெறும் Working Class Angela வுக்கும் மாடி வீட்டு வர்க்கத்தினருக்கும் இடையிலான  ஒரு வர்க்கப் போராட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
   வெளி உலகத்திற்கு என்னவோ தாங்கள் பெண்களை உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மதிப்பதாகத்தான் பிரிட்டிஷாரைப்பற்றி ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் இந்திய மத்திய கிழக்கு நாடுகளைப்போல, ‘ஷேக்’ மன்னராட்சி நாடுகள் போலத்தான் இங்கும் ஆணாதிக்க அடக்குமுறை காணப்படுகிறது. மற்ற நாடுகளில் ஆணாதிக்கவாதிகள் பெரும்பான்மையினராக இருக்கலாம். இங்கு பிரிட்டனில் பெண்களை அடிமையாக துன்புறுத்தும் ஆணாதிக்கவாதிகள் சிறுபான்மையினரோ என்னவோ இருக்கவே இருக்கிறார்கள்.
    ஆங்கில மக்களின் விவாகரத்து வழக்குகளில் கணவன் நடந்துகொள்ளும் முறை வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிக்கும் ஒரேமுடிவை எடுக்கும்படிதான் இருக்கும். அதாவது காதலித்து (ஆங்கில மக்கள் பேசித் திருமணம் செய்வதில்லை) செய்யும்  திருமணங்களே எல்லாம்! முதற்பிள்ளை பிறக்கும்வரை சுமுகமாக இருந்துவிட்டு, இரண்டாம் குழந்தை கர்ப்பத்தில் உருவானதும் “உன்னுடைய தோழர்கள் ரகு, ராஜ், சிவா, குமார் எனக்குப் பிடிக்கவில்லை. அதேபோல உன் தோழியர் சுமித்திரா, சுகுனா, ஜெனி எனக்குப் பிடிக்காதவர்கள். இந்த ஏழு பேரையும் நீ நிரந்தரமாக துண்டிக்க வேண்டும்” என்று கட்டாயத் தடை விதிக்கும் கணவரை Psychoஎன்று கூறாமல், வேறு எப்படி சொல்வது?
    இந்த Psycho கணவர்களின் உடன் பிறப்புகள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று அங்கு போனால், அங்குள்ள பெண் M.P க்கள்;, இளம் பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் பாடு எப்படியிருக்கும்? Harriet Harman என்ற புகழ்பெற்ற ஒரு பெண் வழக்கறிஞர் தொழிற்கட்சியின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு, அவர் நாடாளுமன்றம் வந்தபோது “உன் கட்டிலை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள்?” என்று ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி எதுவித நாகரீகமும் இல்லாமல் கொச்சையாகக் கேட்டாராம்.
    பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பெண் M.Pக்களைப் பற்றி பேசும் பிரிட்டிஷ் ஊடகங்களின் ஆண் நிருபர்கள் அந்தப் பெண் M.P யின் வெளித்தோற்றம், அவர் அணிந்துள்ள ஆடை, Hair Style ஆகியன பற்றி பேசிப்பேசியே நேரத்தை கடத்துகிறார்கள். அந்தப் பெண் M.P பேசிய விஷயங்கள் பற்றி அறிவிப்பது மிகமிகக்குறைவு. பெண் இனத்திற்கு பாரபட்சம் காட்டும் விதத்தில் பிரிட்டிஷ் ஆண்களும், சில மத்திய கிழக்கு ஷேக் நாடுகளின் ஆண்களும் ஒரேவிதமானவர்களே!
                          -----------------------------

1,035 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *