கொரோனா தான் காரணம்! – கதை
- சுருதி
வைத்தியசாலை ஒரே கலவரமாக இருந்தது. கொரோனா நோயாளிகள் முட்டி வழிந்து கொண்டிருந்தார்கள்.
வழமையாக, அங்கே பிடிக்குது… இங்கே பிடிக்குது’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களும், சில்லறை வியாதிகளுக்கெல்லாம் சத்திரசிகிச்சை செய்யுங்கள் என்றும் வரும் நோயாளிகள் இப்போது வருவதில்லை. இருகோடுகள் தத்துவத்தில் கொரோனா பெரிய கோடாகிவிட்டது.
“டொக்ரர் நரேன்… ஒரு சின்னப்பெண் கடுமையான வயிற்றுவலியில் துடித்தபடி தனது தாயாருடன் வந்திருக்கின்றார்.”
டாக்டர் நரேன் வெளிநோயாளர் பிரிவுக்கு விரைந்து சென்றார்.
பதின்ம வயது வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி, ஒரு கையில் ஆங்கில நாவலும் மறுகையால் வயிற்றைப் பொத்தியபடியும் கூனிக்கொண்டு வேதனையில் துடித்து நின்றாள். உள்ளே அவர்கள் இருவரையும் கூட்டிச் சென்றார் டாக்டர் நரேன்.
“சரி ஸ்ரெல்லா… உடம்புக்கு என்ன செய்யுது?”
“கடுமையான வயிற்றுவலி என்று நான்கைந்து நாட்களாகச் சொல்கின்றாள். தூக்கமில்லை. ஒன்றும் சாப்பிடுகின்றாள் இல்லை” தாயார் பதில் சொன்னார்.
அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது. கிராமப்புறமொன்றின் பண்ணை நிலமொன்றில் குடியிருப்பதாகச் சொன்னார்கள்.
“கொரோனா என்று இளம்பிள்ளைகளை வீட்டுக்குள்ளை அடைஞ்சு இருக்கச் சொன்னா அதுகள் என்ன செய்யுறது?”
”உங்களுக்குத் தெரியுமா? உலகத்திலை கொரோனாவுக்காக அதிகமான நாட்கள் முடக்கநிலையில் இருந்த இடங்களிலை மெல்பேர்ண் நம்பர் வண்.”
சம்பந்தமில்லாமல் எதை எதையோ உளறினார் தாயார்.
டாக்டர் நரேன், அந்தப் பெண்ணை சரிந்து படுக்கும்படி சொல்லிவிட்டு மறைப்புத்துணியை இழுத்து மூடினார். தாயார் கதிரையில் இருந்து நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்தார்.
அவளைப் பரீட்சித்துக் கொண்டு, அதே நேரம் நோய் பற்றிய கேள்விகளை ஒவ்வொன்றாக அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தார் டாக்டர். சட்டென ஒரு மின்னல் கணத்தில் வெட்டியதைப் போன்று, டாக்டரின் மூளைக்குள் தெறித்தது. அந்தப் பெண்ணை கூர்ந்து உற்று நோக்கினார். பால் வடியும் முகம்.
“உங்களுக்கு இப்ப என்ன வயசாகின்றது?”
“பதினாறு…”
அவளின் தோற்றம் அவள் சொன்னதைவிட சற்று உயர்வாகக் காட்டியது. பெற்றோருக்குத் தெரியாமல் இவள் ஏதோ கிறுக்குத்தனம் செய்திருக்கின்றாள்.
அவளைப் பரீட்சிப்பதை விடுத்து, படுக்கையில் இருந்து எழுந்திருக்கச் சொன்னார். மறைப்புத்துணியைச் சுருக்கிவிட்டார். வெளியே வரும்படி சொன்னார்.
“உங்கள் மகளுடன் தனியாகக் கதைக்க வேண்டும். நீங்கள் கொஞ்ச நேரம் வெளியே போய் இருக்க முடியுமா?” ஸ்ரெல்லாவின் தாயாரைப் பார்த்துக் கேட்டார் டாக்டர் நரேன்.
“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்” என்றாள் ஸ்ரெல்லா.
டாக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தாயாரை வெளியே போய் உட்காரமுடியுமா என்று கேட்ட டாக்டர், இப்பொழுது மகளை வெளியே போய் சிறிது நேரம் அமரும்படி சொன்னார். ஸ்ரெல்லா வெளியே போனதும், “ஒரு பிள்ளையின் இளமைக்காலம் எப்படியிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் ஒரு சிறுபெண்ணை நீங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் தள்ளிவிட நினைக்கின்றீர்கள்” கொஞ்சம் காரமாக சத்தமிட்டார் டாக்டர்.
“எல்லாத்துக்கும் கொரோனா தான் காரணம்” என்றார் ஸ்ரெல்லாவின் தாயார்.
டாக்டர் புரியாமல் தலையைப் பிறாண்டினார். ஒரு தந்தையின் ஸ்தானத்தில் அந்தப் பெண் பற்றிக் கவலை கொண்டார்.
“சிட்னியிலிருந்து வழக்கமாக பண்ணைக்குப் பொருட்கள் எற்றி இறக்க வாற பெடியன். ஒருநாள் இரவு தங்கிப் போறதெண்டா அவன் தன்ரை வாகனத்துக்குள்ளேயே இருந்து கொள்ளுவான். மூண்டு நாலு மாதம் நாட்டை முடக்கினா அவன் எப்பிடித் தன்ரை வீட்டை போறது. எங்கட வீட்டிலை ஒரு அறையை ஒதுக்கி அவனுக்குக் குடுத்தோம்…” ஸ்ரெல்லாவின் தாயார் சொல்லிக்கொண்டே போனார்.
ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையைக் கேட்கும் மன நிலையில் டாக்டர் நரேன் இல்லை. திரும்பவும் ஸ்ரெல்லாவைக் கூப்பிட்டு முதலில் இருந்து தனது பரிசோதனையைத் தொடங்கினார். மனநிலை மனக்குழப்பம் பயம் பதட்டம் இவற்றினால் ஸ்ரெல்லா பாதிப்படைந்திருக்கலாம். அதுவே வயிற்றுவலிக்கும் காரணமாக இருக்கலாம். டாக்டரால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதின்ம வயதுப் பிள்ளைகள் கர்ப்பமாகும் போது ஆலோசனை வழங்கும் நிலையத்திற்கும், மகப்பேறு மருத்துவருக்கும் தனித்தனியாகக் கடிதங்கள் எழுதி தாயாரிடம் குடுத்துவிட்டு, “தாமதியாமல் உடனே சந்தியுங்கள்” என்றார் டாக்டர். அதற்கு அவர் “எல்லாத்துக்கும் கொரோனா தன் காரணம்” என்றார்.
654 total views, 3 views today