ஜெர்மனியில் சுமார் 11% மக்கள் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனத்தளர்ச்சி என்றால் என்ன?

Dr.நிரோஷன்.தில்லைநாதன்.ஜெர்மனி

உலகில் வாழும் மக்களிடையே வேலை செய்ய இயலாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது னுநிசநளளழைn என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனத்தளர்ச்சி ஆகும். ஜெர்மனியில் யுழுமு ஆகிய உடனலக் காப்பீடு எடுத்த புள்ளியியல் படி சுமார் 11மூ மக்கள் மனத்தளர்ச்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வித மன நோயாக விளங்கும் காரணத்தால், இதை கொலஸ்ட்ரால் அதிகமாகி விட்டது அல்லது இரத்த அழுத்தம் குறைந்து விட்டது என்று இலகுவாகச் சொல்லி விட முடியாது. இதிலும் கஷ்டத்தைத் தரும் விஷயம் என்னவென்றால் மனத்தளர்ச்சிக்கும் மனதில் பொதுவாக ஏற்படும் மனக்கவலைகளுக்கும் வித்தியாசம் காண்பது தான். உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் பல தடவைகள் மனக்கவலைகளைக் கொண்டிருப்பீர்கள். சிறு வயதில் பள்ளியில் மார்க் சரியாக வாங்காமல் போனால், ஒரு விளையாட்டுப்பந்தையத்தில் முதலிடத்தை எடுக்காமல் இருந்தால், வேலையை இழந்தால், உங்கள் அன்பான வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோர், சகோதரங்களுடன் சண்டை ஏற்பட்ட வேளைகளில் மனக்கவலை நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். ஏன் அதை விடுங்கள், வெளியே எட்டிப் பார்க்கும் போது ஒரு நாள் முழுவதும் இருண்டு மழை பெய்தாலே நமக்குள் ஒரு விதமான கவலை தோன்றும், சரி தானே? இது எல்லாமே எல்லோருமே அனுபவிக்கும் ஒரு பொதுவான உணர்ச்சி தான். இதில் இருக்கும் விசேஷம் என்னவென்றால், நமது மனக்கவலைக்குக் காரணமாக இருந்த அந்த விஷயம் மாறினாலோ அல்லது நம்மைச் சுற்றி ஏதும் சந்தோஷமான ஒரு நிகழ்வு நடந்தாலோ, நாம் அந்த மனக்கவலையை விட்டு வெளியேறிவிடுவோம். அத்துடன் அந்தக் கவலை நம்மை விட்டுப் போய் விடும்.

ஆனால் மனத்தளர்ச்சி அப்படி இல்லை! இது ஒரு விதமான நோய் ஆகும். அதைப் „போ… போ…“ என்று சொல்வதால் அது போய் விடாது. உங்கள் கை முறிந்துவிட்டால், உங்கள் வாயால் „வலி போய்விடும்“ என்று சொல்வதால் மட்டும் வலி போகுமா என்ன? அதே போல் தான் மனத்தளர்ச்சியும் ஒரு நோய் ஆகும். குறிப்பாகச் சொல்லப்போனால் இது ஒரு மன நோய் ஆகும். மனத்தளர்ச்சி வந்தால் அது தொடர்ந்து குறைந்தது இரண்டு வாரங்கள் வரை நீடித்து நம்மை வேலை செய்யாமல், விளையாட முடியாமல், ஏன் நாம் பாசத்தைக் கொட்ட விரும்பும் நமது குடும்பத்தினருடன் கூட அன்பாக இருக்க விடாது.

மனத்தளர்ச்சி உள்ளவர்களில் பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள் இவை தான்: மனச்சோர்வு, பொதுவாக விரும்பிச் செய்த விஷயங்களில் ஆர்வத்தை இழப்பது, சாப்பாட்டில் விருப்பம் குறைவது, தம்மைத் தாமே பிரயோசனமற்றவர் என்று நினைப்பது, தாம் தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று எண்ணுவது அல்லது மிகவும் குறைவாக அல்லது மிகவும் அதிகமாகத் தூங்குவது, செறிவு இல்லாமை, ஓய்வின்மை, செயலற்ற தன்மை, ஆற்றலின்மை போன்றவை மட்டுமில்லாமல் தற்கொலை செய்யும் எண்ணங்கள் கூட இருக்கும். இதில் குறிக்கப்பட்ட அறிகுறிகளில் குறைந்தது ஐந்து அறிகுறிகளை நீங்கள் ஒரு நபரில் கண்டால், மனநல வழிகாட்டுதலின் படி அந்த நபருக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று எண்ணலாம்.

மனத்தளர்ச்சியின் விளைவுகளை ஒருவரின் நடத்தை முறையில் மட்டும் காணலாம் என்று இல்லை. இதன் விளைவுகளை மூளையிலும் கண்டுகொள்ளலாம். ஒரு சில மாற்றங்களை பாதிக்கப்பட்டவர்களின் மூளைகளை X-Ray ஊடாக பார்க்கும் போதே அறிந்துகொள்ளலாம். அவர்களின் மூளையின் சில பகுதிகள், குறிப்பாக முன் மடல் (frontal lobe) மற்றும் ஹிப்போகாம்பஸ் ஆகியவற்றின் அளவுகள் சற்று சிறிதாகியிருக்கும். இதைத் தவிர்த்து நரம்பியக்கடத்திகள் என்று அழைக்கப்படும் neurotransmitters நமது மூளை சரியாக வேலை செய்வதற்கு முக்கிய செயலை ஆற்றி வருகின்றன. மனத்தளர்ச்சி உள்ளவர்களில் மூளைகளில் இந்த நரம்பியக்கடத்திகள் பரிமாற்றத்தில் (குறிப்பாக serotonin, norepinephrine, dopamine ) இடையூறை அவதானிக்கலாம். தொடர்ந்து தூக்கத்தில் மற்றும் உடலில் காணப்படும் hormones அதாவது இயக்குநீர்களில், உதாரணத்திற்கு கோர்டிசோல் மற்றும் தைரோய்ட் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

இன்று வரை ஆராய்ச்சியாளர்கள் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான மூலகாரணங்களை ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். மனத்தளர்ச்சி உள்ளவர்கள் உள்ளே ஆழ்ந்த கவலைகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் வேளையில் வெளியே ஒரு முகமூடியைப் போட்டு தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காண்பிப்பார்கள். இதன் காரணத்தால் மனத்தளர்ச்சியின் அறிகுறிகளைச் சுற்றி இருக்கும் நபர்கள் இலகுவாகத் தெரிந்துகொள்ளமாட்டார்கள். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளியியல் படி மன நோய் உள்ள ஒருவர் உதவியை நாடிச்செல்வதுக்குக் குறைந்தது 10 வருடம் எடுக்குமாம். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நவீன உலகில் வாழும் நாம் இவ்வாறான மன நோய்களுக்கு ஏற்றவாறு தகுந்த சிகிச்சை முறைகளைப் பெற முடியும் என்பது தான். இந்த சிகிச்சை முறைகளின் உதவியுடன் நமது மூளையை மறுபடியும் சரியான முறையில் வேலை செய்யத் தூண்டலாம். எனவே மனத்தளர்ச்சி இருந்தால் அதைப் போக்க வழியே இல்லை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்.

மனத்தளர்ச்சியைப் பற்றி யாருமே வெளிப்படையாகப் பேச முன்வரமாட்டார்கள். அதனால் தான் அதற்குரிய சிகிச்சையைக் கூட எவருமே சரியான நேரத்தில் பெறத் தவறுகின்றனர். எனவே உங்கள் சுற்றுவட்டாரத்தில் மனத்தளர்ச்சியில் அவதிப்படும் ஒருவரை நீங்கள் அறிந்தால் அவர்களுடன் கவனமாக, மெதுவாகப் பேசி அவர்களை மனத்தளர்ச்சி பற்றி அறிந்துகொள்ள ஊக்குவியுங்கள். ஏன், அவர்களுக்கு உங்கள் உதவியைக் கூட வழங்குங்கள், உதாரணத்திற்கு ஒரு தகுந்த சிகிச்சையாளரை தேடிக்கொடுங்கள் அல்லது அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை எழுதிக்கொடுங்கள். மனத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு இவ்வாறான முதல் படிகளை ஏறுவதே மிகவும் கஷ்டமாக இருக்கும். அந்த படிகளை ஏறுவதுக்கு நீங்கள் உதவினாலே போதும், மீதி இருக்கும் படிகளை அவர்களே ஏறி இந்த நோயைக் கட்டுப்படுத்திவிடுவார்கள். சிகிச்சையாளரிடம் போவதை அவமானம் என்று எண்ணுபவர்களுக்கு நீங்கள் சொல்லவேண்டியது ஒன்றே ஒன்று தான்: மனத்தளர்ச்சி என்பது ஆஸ்துமா அல்லது நீரிழிவு நோய் போல் பலரில் காணப்படும் ஒரு நோய் மட்டுமே. அது ஒரு பலவீனம் கிடையாது! அந்த நோயை „போ… போ…“ என்று சொல்லிப் போக வைக்கலாம் என்று மட்டும் எண்ணக்கூடாது. அது போகாது!

1,082 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *