அன்னப்பட்சிகள் காதல்
அவற்றின் தனிப்பட்ட
வாழ்வை எட்டிப்பார்த்ததுக்கு
மன்னிப்புக் கோரிவிட்டு…
அன்னப்பட்சிகளின் மென்காதல்
சொல்கிறேன் கேளுங்கள்…
முதலில் தலையுடன் தலை சேர்த்து
ஈரிதயம் இணைந்த ஓரிதயம் என
செயலில் ஓவியம் வரைந்தன…
அதுவொரு நளினமான இனிய
காணற் கவிதையாய் இருந்தது…
தூய வெண்மை உடல்களில்
நீர்த்திவலைகள் முத்துக்களாய்
ஒட்டாமல் உருண்டன…
சொர்க்கங்கள் இறப்பின் பின்தான்
காணவேண்டுமென்பதில்லை…
முத்தம் இட்டுப் பின் நீரினுள்ளே தன்
காதல்தேவதையை அமிழ்த்தி
முதுகிலமர்ந்து முத்தமிட்டபடியே
காதற்கலவியில் கலந்த பின்
தேவை தீர்ந்தது என ஓடவில்லை
அந்தக் கம்பீர ஆண்தேவதை…
சிறிது வெட்கம் சிறிது நளினம்
சூடிய தன் இணையை
மீண்டும் குனிந்து முத்தமிடல்
நெஞ்சோடு அணைத்தல்
அன்பொழுகப் பார்த்தல் என
சில நிமிடங்கள் தொடர்ந்த பின்
சற்று விலகிச் சென்றது…
பெண் தேவதை
பல நிமிடங்களாக நீரில் முங்கிக்
குளித்து தன்னுடலை சுத்தப்படுத்தி
தன் வெண்ணிறக்கைகளை அசைத்தும்
கோதியும் உலர்த்தியது…
இரண்டும் இணைந்து நீரில்
மிதந்து மிதந்து தூரத்துப் புள்ளிகளாகின…
கவிதையாய் காதல் செய்கவென
இயற்கை சொல்லும் பாடங்கள்…
ஒளிப்படைப்பாளினியாகவும்
இயற்கை நேசிப்பாளினியாகவும்
கவித்துவ மனமுடையாளாகவும்
ஊர்பவை , நடப்பவை, பறப்பவை
வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும்
அத்துமீறல்கள் தொடரும்…
அவை யாவும் எனை மன்னிக்குக…
கீர்த்தனா ( கீதா ரவி )
07.04.2022. ஒளிப்படம் : கீதா ரவி
984 total views, 2 views today