மலையக இலக்கியம் எழுச்சி பெற்றுள்ளது !

லண்டன் மலையக இலக்கிய மாநாட்டில் உரை!
‘இலங்கை என்றதும் தேயிலை என்றும், தேயிலை என்றதும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் என்றும் அறியப்பட்ட காலம் இருந்தது. 1970 களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலை பற்றி மனித உரிமை இயக்கங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் உலக அரங்கில் எடுத்துப்பேசின. எண்பதுகளின் பின்னர் வட புலத்தில் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக க்கிளர்ந்தபோது, மலையக மக்களின் பிரச்னைகள் பின்தள்ளப்பட்டன. இன்று மலையக மக்களின் பிரச்னைகளை உலகின்முன் வைக்கும் தேவை எழுந்துள்ளது’ என்று மலையக ஆய்வாளர் மு.நித்தியானந்தன் சென்ற சனிக்கிழமை(13.6.2022) லண்டனில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
“அறுபதுகளுக்குப்பின் மலையகத்தில் எழுந்த இலக்கிய அலைக்குப் பின்னர் மலையக இலக்கியம் வேகம் பெறத்தொடங்கியது.சிறுகதை,கவிதை,நாவல்,வரலாறு,அரசியல்,பொருளாதாரம்,மானிடவியல் ஆய்வு, மலையகத் தலைவர்களின் வரலாறு என்று பன்னூற்றுக் க்கணக்கான நூல்கள் மலையகத்திலிருந்து எழுந்துள்ளன’ என்று அவர் மேலும் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
ஏழு அமர்வுகளாக இடம்பெற்ற இம்மாநாட்டில் காத்தாயி என்ற மலையகத் தியாகப்பெண்மணியின் நினைவரங்கில் ‘மலைகளைப் பேசவிடுங்கள்’ என்ற நூல் குறித்து ந.சரவணன் (நோர்வே) என்ற ஆய்வாளரும், ‘வெந்து தணியாத காடு’ என்ற நூல் பற்றி எம்.பௌசரும் ‘வண்ணச்சிறகுகள்’ கவிதைத்தொகுதி பற்றி சுகன் (பாரிஸ்) என்ற கவிஞரும் உரையாற்றினர்.
வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறிக்கந்தராசா தலைமையில் ஆரம்பமான இர.சிவலிங்கம் நினைவரங்கில் ‘கூலித்தமிழ்’ பற்றி தோழர் ச.வேலு அவர்களும், ’21 ஆம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்’ பற்றி கரவைதாசன் (டென்மார்க்) ஆகியோர் ஆய்வு செய்தனர். மைத்ரி ஜெகதீசனின் வுநய யனெ ளுழடனையசவைல என்ற ஆய்வு நூலை ராகவன் அறிமுகம் செய்து வைத்தார்.
மீனாள் நித்தியானந்தனின் தலைமையில் இடம்பெற்ற கோகிலம் சுப்பையா நினைவரங்கில், எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்’ கவிதைத் தொகுதியினை நவஜோதி ஜோகரட்னமும், பதுளை சேனாதிராஜாவின் ‘குதிரைகளும் பறக்கும்’ நூலினை பூங்கோதையும், பிரமீளா பிரதீபனின் ‘விரும்பித் தொலையும் காடு’ நூலினை மாதவி சிவலீலனும் அறிமுகம் செய்து வைத்துப்பேசினார்கள்.
க.ஆதவன் (டென்மார்க்) தலைமையில் நடைபெற்ற சோ.சந்திரசேகரம் நினைவரங்கில் யோகேஸ்வரி விஜயபாலன் எழுதிய நுனெடநளள ஐநெஙரயடவைல என்ற சட்ட ஆய்வுநூலை டாக்டர் எஸ்.தம்பிராஜாவும் எம்.வாமதேவன் எழுதிய ‘நீங்காத நினைவுகளில் …’ என்ற நூலினை இர.ராமலிங்கமும் தமிழகன் தொகுத்த ‘மலையகமும் மறுவாழ்வும்’ என்ற நூலினை பெரி.சிவஞானமும் அறிமுகம் செய்தனர்.
வி.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற சி.வி.வேலுப்பிள்ளை அரங்கில் இரா.சடகோபன் மொழிபெயர்த்த ‘தேத்தண்ணி’ நாவலை ப.சந்தோஷ் ஆய்வு செய்தார்.
சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ என்ற அரசியல் நூலை மு.நித்தியானந்தன் வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்தினார்.
மாதவி சிவலீலன் தலைமையில் நடந்த தமிழோவியன் அரங்கில் மு.சிவலிங்கம் எழுதிய ‘மழைக்காலத்து வெயில்’ என்ற சிறுகதைத்தொகுப்பை மீனாள் நித்தியானந்தனும், மாத்தளை சோமுவின் ‘கண்டிச் சீமையில்’ என்ற நாவலை பாரதி சிவராஜாவும்,மலரன்பனின் ‘பால்வனங்களில்’ என்ற நாவலை அஞ்சனாவும் அறிமுகம் செய்துவைத்தனர்.
நா.சபேசன் தலைமையில் நடந்த சாரல்நாடன் அரங்கில் அல் அஸ்மத் எழுதிய ‘அறுவடைக்கனவுகள்’ நாவலை எம்.என்.எம்.அனஸ் அவர்களும் புதுக்கோட்டை தங்கவேல் எழுதிய ‘கறிவேப்பிலைகள்’ நூலை மாதவி சிவலீலனும் அறிமுகம் செய்துவைத்துப்பேசினர்.
மெய்வெளி நாடக அரங்கின் சார்பில் சாம் பிரதீபனின் ‘காத்தாயி காதை’ என்ற நாடகமும் அரங்கேறியது.
அரங்கத் தலைமைகளை நவரட்னராணி அறிமுகம் செய்து வைக்க, விம்பத்தின் சார்பில் ஓவியர் கே.கே.ராஜா மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினார்.
1,028 total views, 4 views today