சேவலும் கட்டெறும்பும்
-மாதவி ஜெர்மனி
எரிபொருள் தட்டுப்பாடு, யாழ்ப்பாணம் சென்று இறைச்சிகள் வாங்க, வசதி குறைவு, அப்படி மினிவான்களில் சென்று வாங்கி வீடுவந்துசேர இறைச்சி கருவாடாகிவிடும்.
முன்னர் 1980 களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் தாம் வளர்த்த கோழியை, அடிக்க மனம்வராது, அதனால் பக்கத்து வீட்டு கோழியை அவர்களிடம் வேண்டி அடிப்பார்கள், பின் பக்கத்து வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களுக்கு நம்ம வீட்டுக்கோழி விருந்தாகும்.
இப்போ அதே நிலைதான் யாழ்ப்பாணத்திலும், காலை பக்கத்து வீட்டில், சேவல் பிடித்து வந்தாச்சு. கோழி வெட்ட, வீடு கூட்ட, கடைக்கு போக, இப்படி பல வேலைக்கு உதவிக்கு கைக்குள் ஒருவர் வீட்டில் நிற்பார். ( வெளிநாடுகளில் கணவன், மனைவி செய்யும் வேலை.)
கோழி வெட்ட கத்தி தீட்டுகிறார், இலகுவாக வெட்ட கத்தி கூராக வேண்டும் என்பதால்.
நான் மாமிசம் உண்பதில்லை, ஆனால் எவரையும் உண்ணவேண்டாம் என்று தடுப்பதோ , போதனைகள் செய்வதோ இல்லை.
நான் கோழி வெட்டுவது பார்க்காமல் கிணற்றடிக்கு குளிக்கப்போட்டேன்.
குளித்துக்கொண்டும் ஒரு காது கோழி கத்துவது கேட்கிறதா என ஏங்குகிறது.
குளித்து முடிந்து தோளை துவாய்யால் துடைக்க, கோழி சத்தம் போட்டது. அந்த நேரம் பார்த்து
துவாயில் இருந்த ஒரு கட்டெறும்பு, முதுகில் நல்ல கடி.
துவாய்யால் முதுகை மத்தால் கடைவதுபோல் கடைகையில், கட்டெறும், கரைசலாகிப்போச்சு.
கோழியின் உயிரும் கட்டெறும்பின், உயிரும் ஒரே நேரம்தான் கைலாசம் சென்று இருக்கவேண்டும்.
கோழியைக் கொன்றவர்கள் கோழி சாப்பிடுகிறார்கள், எப்படி என்றாலும் ஊர்க்கோழி கோழிதான் என்று சொல்வதும் கேட்கிறது. கட்டெறும்பைக் கொன்றவன், நான், எதனை சாப்பிடுவது.
யானையின், உயிரும் ஒன்றுதான், கட்டெறும்பின் உயிரும் ஒன்றுதான்.
இந்த இடத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்தால் நானும் ஞானியாகிவிடுவேனோ?
1,114 total views, 3 views today