ஒரு பேரூந்தில் பேசிய அரசியலும் அலசலும்!


மாதவி –

வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் காலை 10.30 மணிக்கு கண்ட இடத்தில் கையை நீட்டி பேரூந்தை மறித்து பேரூந்தில் ஏறினேன்.
இனி பேரூந்தை பஸ் என்றே சொல்லுறேன் வாசிப்பவர்களுக்கு, கொஞ்சம் அருகில் நிற்பதுபோல் இருக்கும் என்பதால்.

10.30 மணிக்கு பஸ் வந்தது என்றதும், யாழ்பாணத்தில் நேரத்திற்கு சரியாக பஸ் வருகிறது என்று தாறுமாறாக கற்பனை பண்ணவேண்டாம். ஏதோ நான் ஏறின நேரம் அதுதான்.

ஏறும் பொழுது, நான்கு இருக்கை (சீட்) மட்டுமே காலியாக இருந்தது.
அடுத்து பஸ் நிறுத்தியதும், நிரம்பிவிட்டது. சரி இனி இழுத்துக்கொண்டு ஓடுவான் என்று ஒரு நப்பாசை. அது சில நொடியில் நொருங்கிவிட, உள்ளிருக்கும் சனத்தின் அளவு வெளியில் ஏறுவதற்குக் காத்து நிற்கிறார்கள்,

நான் பின்னுக்கு இடம் இருக்கா எனத் திரும்பி பார்க்க, என் பக்கத்தில் இருந்த இளைஞன் எவ்வளவு பேர் எறினாலும் பஸ் கொள்ளும், எவரையும் ஏற்றாமல் போகமாட்டினம் என்றான்.
தம்பி வழமையாக இப்படித்தான் சனமோ என்றேன். எனக்கு தெரியாது! நானும் இப்ப இந்த எரிபொருள் இல்லாதபடியால் தான் ஏறினேன், இல்லை என்றால் மோட்டார் சைக்கிள் தான்.

பஸ் இருக்கை எல்லாம் நிறைந்து, நிற்கும் பகுதியும் நிறைந்து படியும் நிறைந்து இருப்பவர்கள் மடி மட்டும்தான், வெறுமையாக இருந்தது.

அடுத்த தரப்பிலும் பஸ் நிற்க யாரோ இறங்குகிறார்கள் என நினைக்க எனது யன்னலை ஒருவர் வந்து திறந்தார். பின்னுக்கு போங்கோ என்றார். அக்கா உந்தபையை இடிக்காமல் ஐயாவிடம், கொடுங்கோ சனம் பின்னுக்கு போக முன்னுக்கு பத்துபேர் ஏற, என் மடி கனத்தது.

பக்கத்தில் இருந்த தம்பி, கதைக்கத் தொடங்கினார், வெளிநாட்டு காசு இங்கை இருக்கு, இருந்தாலும், எரிபொருள் கிடைக்காதபடியால் தான் இந்தக்கூட்டம். இல்லை என்றால் பாண்வேண்டவும் ஓட்டோ தான்.
ரணில் பிரதமராக வந்ததும் இன்னும் எரிபொருள் கிடைக்காமல் பண்ணி பிரச்சினையை எரியவிட்டார்.
கோத்தாவை விரட்ட மக்கள் நடுத் தெருவுக்கு வந்தால்தான் முடியும் என்று நரிக்கு, அதுதான் ரணிலுக்கு தெரியும், இப்ப அவர் ஜனாதிபதி ஆகப்போகிறார். போகிறார் என்ன அவரேதான் இனி எல்லாம். பாவம் மனுஷன் முப்பது வருடக்கனவு, ஒருக்கா இருந்திட்டு போகட்டும் என்றார்.

பின் சீட்டில் இருந்தவர் எட்டி காதோடு தம்பி சொல்வது சரி, ஆனால் அவர் இந்த 2 வருடங்கள் மட்டும்தான் இருப்பார் என்று எண்ணாதைங்கோ, சனத்தைப் பிரித்து மேய்ந்து, அடுத்த தேர்தலிலும், பொதுவேட்பாளர் என்று வந்து நிற்கபோகுது உந்த மனுஷன் என்றார்.

தம்பி பெடியங்களை பிரித்தவனுக்கு, இனி தங்களின்ர ஆட்களை பிரிப்பது ஒன்றும் பெரிசு இல்லை.
இன்னும் என்காது சூடாக நெருக்கமாக வந்து, நரிக்கு வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. கொஞ்சம் பொறுங்கோ அவனுக்கு, அதுதான் ரணிலுக்கு, தமிழர்மேல் நல்ல கோபம் இருக்கு, எதுவும் செய்யமாட்டான், எங்கட சனம் மகிந்தாவை பிறகு நல்லது என்று சொல்லும்.
எங்களுக்கு எப்பவும், மாறி மாறி நல்லதுதானே! தம்பி இது ஓட்டுமடமே, எனக்கு வெளியே தெரியவில்லை தம்பியைக் கேட்டேன், தம்பி தானும் அதில் இறங்குகிறேன் என்றான்.
அட ஆலடி அரசியல் விமர்சகர்கள் இறங்குகிறார்கள். எனக் கவலையுடன் விடைகொடுத்தேன், தொப்பென்று ஒருவர் என்னருகில் இருந்தார்.

இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, நானும் எல்லாம் கேட்டேன். நீங்கள் வெளிநாடுபோல, உங்களுக்கு வியக்கிற வியர்வையில் தெரியுது, இந்த பஸ்சில் வருகிற சனத்தில பாதிப் பேர் புதுசு. நாளைக்கு எரிபொருள் வந்தால் எல்லாம் பறந்துபோகும், பெடியள் மட்டுமில்லை, பெட்டையளும் தான். நீங்கள் நல் இடத்தில இருந்திடியள். பஸ்ஸில முன்னுக்கும், இருக்கப்படாது, பின்னுக்கும் இருக்கப்படாது, பஸ்ஸின்ரை நீளத்தைப் பார்த்து நாலாம்,ஐந்தாம்,வரிசையில இருக்கவேண்டும், இடம் கனக்க இருந்தாலும் முன்னுக்கு, இருக்கப்படாது. ஏன் குலுக்குமே என்றேன். இல்லை! இஞ்ச பாருங்கோ ஆஸ்பத்திரிக்கு எண்டு பிள்ளையை தூக்கி வருகிற தாய்மாரும் இருக்கினம், வரைக்கை போகைக்க, இடம் விடுவினம் இருக்க என்று வீட்டில் நிக்கிற பிள்ளை ஒன்றை தூக்கி வருகிறதுகளும் இருக்கினம், இதை நான் ஏற்க மாட்டேன், நீங்கள் கண்டனீங்களோ, என்றேன்!
அவருக்கு கொஞ்சம் முகம் சரி இல்லை, நான் தெரியாமல் கதைக்கப்படாது என்றேன். அதற்குப்பிறகு அவர் தெரிஞ்சதும் கதைக்க வில்லை.

யாழ்ப்பாணம் வந்தாச்சு சுத்திச் சுத்தி பழைய நினைவுகளே கை தந்தன. மீண்டும் திரும்ப பஸ் எடுத்தேன். நடுவில் போய் இருந்தேன். சில சமயங்களில் சிலரது அட்வைஸ் நேரம் சென்று றழசம பண்ணுமோ. நான் நல்லவனா? கெட்டவனா அல்லது ஏன் வம்பை என்று ஒதுங்கியவனா?

பஸ் 10 நிமிடத்தில் நிறைந்துவிட்டது, இதோ இதோ புறப்படுகிறது என்று பார்த்தால் அரைமணி நேரம் கோணடித்து தான் புறப்படப் போவதை யாவருக்கும் தெரிவித்து எவரையும் விடாது ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

எனக்கு அருகில் ஒரு கிழவன் அமர்ந்து இருந்தார். அவர் ஒன்றில் அமிர்தலிங்கம் அவர்களின் ஆதரவாளனோ, இல்லை ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஆளாகவோ இருந்திருப்பார் போல் தோன்றியது.
கிழவன் என்று நான் சொன்னது அவருக்கு என் வயதுதான் இருக்கும். அவர் டை தலைக்கு வைத்திருந்தால், அவர் நிச்சயம் எனக்கு தம்பிதான்.

தம்பி 20 திகதி ஜனாதிபதி தெரிவாம். என்ன நினைக்கிறீங்கள் என்றார். இப்படி முன்பின் தெரியாதவர்களிடம், ஒன்றில் சரியான வெய்யிலாக்கிடக்கு, மழைவரும்போல் கிடக்கு என்று மட்டுமல்ல, அரசியலும், கதைக்கலாம். முன்பு அரசில் இங்கு பேசவேண்டாம் என்று தேத்தண்ணி கடைகளில் போட்டும் இருப்பார்களாம். வாதாட்டம் போடாமல் கருத்து அறிவது என்றால் என்ன பிரச்சினை.

நான் நினைச்சது போலவே, தம்பி இப்ப அமிர்தலிங்கம் இருந்தால் என்று தொடங்கி. தமிழர் மத்தியிலும் நல்ல தலைவர்கள் இல்லை சிங்களவர் மத்தியிலும் இல்லை. ரணிலுக்கு பிள்ளை குட்டி இல்லை, சொத்து என்று அலைய மாட்டார். எம். ஜி. ஆர். சுரி! ஜெயலலிதா? தமிழர் மனதில் இப்படி ஒரு எண்ணம் பதிந்து இருக்கவே செய்கிறது. கோல்பேசில் கோத்தாவை விரட்டினதே ரணிலை கொண்டுவரவோ என்று தோன்றுது. ரணில் கோத்தா போல பதிவியை விட்டு ஓடமாட்டார். மகிந்தாவுக்கும் வேறு எவரும் நம்பிக்கையாக இல்லை.
இப்ப ஜனாதிபதி என்றால் ரணில் தான். யார் வந்தாலும் தமிழனுக்கு, ஒன்றும் கிடையாது. நான் மூச்சும் விடவில்லை என்ர மூச்சையும் வாங்கி வாங்கி பஸ் ஓடிக்கொண்டு இருந்தது. மொத்தத்தில் தமிழருக்கு எந்த அரசு வந்தாலும் ஒன்றும் இல்லை என்பது யாவர் மனதிலும், உள்ளதுதான்.
இப்ப கெட்டவனுக்குள், குறைந்த கெட்டவன் மட்டுமே தேடும் காலம் இப்போ!
மு.குறிப்பு: இப்பவும் பொருளை வைத்துவிட்டுப்போனால் அது அவரின் இடம்.அது அவருக்காக ஒதுக்கப்பட்டது. எந்தக்கொம்பன் வந்தாலும் இருக்க முடியாது.இது எழுதாத சட்டம்.

787 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *