பக்கத்து இலைக்கு பாயாசம்….

Dr. கோபிசங்கர்

காலமை கோப்பி குடுத்த வெள்ளிப்பேணிகளை கிணத்தடீல வைச்சு கழுவத் தொடங்க அங்கால யூஸ் கரைக்கத் தொடங்கிச்சினம். விசேசங்களுக்கு முதல் நாளே எசன்ஸ் வாங்கி சீனி பாணியும் சிற்றிரிக் அமிலமும் போட்டு காச்சி் வைக்கிறது. பெரிய பிளாஸ்டிக் வாளீல காச்சின எசன்ஸை ஊத்தி தண்ணி விட்டு, சாக்கில உமியைப் போட்டுக் சுத்திக் கொண்டு வந்த ஜஸ் கட்டியை வடிவா கழுவீட்டு உலக்கையால நாலு போடு போட உடைஞ்சு வாற துண்டுகளை அள்ளிப்போட்டு சீனி அளவும் பாத்து யூசைக் கரைச்சு வைச்சம். பத்தரைக்கு வெக்கையா இருக்கும் அப்ப யூஸைக் குடுங்கோ எண்டு ஓடர் வந்திச்சுது. பதினைஞ்சு பேணி அடுக்கின வசயல ஐ தூக்கிக்கொண்டு நடுங்காம, ஊத்தாம ஆக்களுக்கால நெளிஞ்சு சுளிஞ்சு போய் எல்லாருக்கும் குடுக்க தம்பி சரியான தண்ணிவிடாய் ரெண்டு எடுக்கிறன் எண்டு சிலர் வாங்கி வாங்கி குடிச்சினம். ஆனாலும் அந்த வெக்கையிலும் எனக்கு உது வேணாம் கோப்பி தான் வேணும் எண்டு சிலர் அடம்பிடிக்க அதையும் குடுத்திட்டு வர மணி பதினொன்டாச்சுது.

ஓடிப்போய் கொட்டிலுக்க “ சமையல் முடிஞ்சுதா “ எண்டு கேக்க, “இந்தா வாழைக்காய் பொரியுது நீங்கள் போய் ஆயத்தப்படுத்துங்கோ “ எண்ட பதிலோட ரெண்டு வடையும் சுடச்சுட கையில வந்திச்சிது. ஆறும் வரை பொறுமை இல்லாமல் வடையை வாயக்குள்ள போட்டிட்டு வாய்க்குள்ள வைச்ச படி ஊதி ஊதி ஆறப்பண்ணிக்கொண்டே சாப்பிட்டன். கிடாரத்தில இருந்த சோத்தை கிளறிப்போட்டு இறக்க சமைச்சு முடிஞ்ச கறிகள் எல்லாம் சட்டிக்குள்ள மாறிச்சுது.

சபை போடத் தொடங்கலாம் எண்ட நியூஸ் போக பொம்பிளை மாப்பிளையின்ட தேப்பன் மார் தேடித்தேடி செம்பு குடுத்து கையைப்பிடிச்சு ஒவ்வொருத்தரா சாப்பிடக் கூட்டிக்கொண்டு வந்திச்சினம் .

குனிஞ்சு நிமிந்து சபை போட்டிட்டு களைச்சுப் போய் வர யாரோ தந்த மஞ்சள் நளளநnஉந ஜூஸை குடிக்க தலையால வெக்கை ஆவி பறந்திச்சுது. “தம்பி உந்தச் சாக்கைக் கொண்டா “ எண்டு அண்ணா ஒராள் கூப்பிட சாக்கைக் கொண்டு ஓடினன். எனக்குப் பின்னால தும்புத்தடியோட வந்தவருக்குப் பேச்சு “உனக்கென்ன விசரே, சனத்தை கலைக்கத்தான் தும்புத்தடி, நல்ல நாள் விசேசத்தில விளக்குமாறு தும்புத்தடி எடுத்தா விளங்குமே கொண்டு போ அங்கால “ எண்டு. பந்திப்பாயை பக்குவமா உதறி சோத்துப் பருக்கைகளை சிந்தாமல் சிதறாமல் அப்பிடியே சாக்குக்க கொட்டீட்டு, விழுந்திருந்த சாப்பாட்டை ரெண்டு மட்டையால அள்ளி, ஊத்தியருந்த பாயாசத்தை ஈரத்துணி போட்டுத் துடைச்சிட்டு நிமிந்து இப்ப ஆக்களைக் கூப்பிடுங்கோ எண்டது பெடியள் குறூப்.

அடுத்த பந்திக்கு ஆக்கள் எல்லாம் வந்து இருந்திச்சினம். நுஒவசய வந்த ரெண்டு பேர் இருக்க இடம் இல்லைப் போல எண்டு கேட்டிட்டு திருப்பி போக வெளிக்கிட, ரெண்டு பேர் அரக்கி நடுவில இடம் இருக்கு வாங்கோ எண்டு இடம் குடுக்க கழுவின வாழை இலையோட முதல் பசழரி போச்சுது.
முதல் நாள் சோடிச்ச குறூப் தான் அடுத்த நாள் சபையும் போடிறது. புதுக்கடகத்துக்க சோறு, சோறு போட ஒரு எவர்சில்வர் தட்டோட முதல் ஒரு குறூப் போகும். நாலு கறி போட்ட தூக்குச்சட்டியோட போறது தான் ரெண்டாவது, பயித்தங்காய், பூசணிக்காய், கோவா வறை எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு வர, மூண்டாவதா கத்திரிக்காய் சம்பல் வரும், கரண்டி மாறினா புளிச்சுப்போயிடும் எண்டு அதை தனிச்சட்டீல தான் கொண்டு போறது. உருளைக்கிழங்கு பிரட்டல் போக பின்னால அப்பளம், மிளகாய் பொரியல் , வாழைக்காய் பொரியல் போட்ட சுளகோட போவினம். கடைசியாய் பருப்புப் போட்டு மேல நெய் விட்டிட்டூ வர, “சரி சாப்பிடலாம் “ எண்டு செம்பு குடுத்தவர் சொல்ல முதல் செம்பு வாங்கி முதலாவதா வந்திருந்தவர் கைவைக்க சபை களைகட்டும். இந்த முதல் மரியாதை நெருங்கிய உறவில் மூப்புக்கு கிடைக்கும் மரியாதை.

சாப்பிட்டுக்கொண்டிருக்கேக்க இலை வெறுமையாக முதல் பாத்து பாத்து சோறும் கறியும் போகும். ரெண்டாவது தரம் சோறு போட்டாப் பிறகு தான் சொதி, குளம்பு தயிர் எல்லாம் போகும். முழுப்பேரும் சாப்பிட்டு முடியேக்க தான் பாயசத்தையும் வடையையும் கொண்டு வாறது . பக்கத்து இலைக்கு கேக்க முதலே பாயாசம் போகும். பாயசத்தோட சேத்துச் சாப்பிட இன்னொருக்கா வடையும், அப்பளமும் போகும். கடைசீல வாழைப்பழமும் பலகாரமும் வைக்க எல்லாரும் முட்டின வயித்தோட கஸ்டப்பட்டு மெல்ல மெல்ல எழும்புவினம் . சபைகுளப்பிகள் ஆரும் இடையில எழும்ப மற்றாக்கள் விடமாட்டினம். “ எழும்பிறாக்கள் இலையை விட்டிட்டு எழும்புங்கோ “ எண்டு திரும்பத்திரும்பச் சொல்லி, ஏலாத ஆக்களைத் தூக்கி விட, கிணத்தடீல கைகழுவவும் குடிக்கவும் தண்ணி குடுத்துக்கொண்டு இருப்பினம் கொஞ்சப்பேர்.

ஆம்பிளைச் சபை முடிய பொம்பிளைச் சபை எண்டது வழக்கம். பெண்டுகள் சாப்பிடேக்கேம் கதைச்சுக்கொண்டிருப்பினம் சாப்பிடவும் மாட்டினம் வடிவாச் சாப்பிடவும் விடாயினம் எண்ட படியால் தான் இந்த சமத்துவமின்மை எண்டு நான் நினைக்கிறன்.

தாலி கட்டி ஆசீர்வாதம் முடிச்சு மாப்பிளை பொம்பிளை பூதாக்கலம் பண்ண சாமியறைக்குப் போக, அவையை மறந்திட்டு பொம்பிளை மாப்பிளையின்டை தாய் தேப்பன் மார் வந்து தேடித்தேடி சாப்பிடாத ஆக்களை கூட்டிக் கொண்டுவாறது, சோறு கறி காணுமா எண்டு பாக்கிறது, சாப்பிட்ட ஆக்களிக்கு பலகாரம் வெத்திலை, சுருட்டு எல்லாம் போனதா எண்டு பாக்கிறது, சபை போடிற பெடியளுக்கு எண்டு சோடா, யூஸ் குடுக்கிறது,வந்திட்டுப் போறாக்களுக்கு வெத்திலைப்பை குடுக்கிறது எண்டு சுழண்டு கொண்டு நிப்பினம்.

மச்சான் கிழங்கு முடியுதாம் பாத்து குறைச்சுப்போடு, கரண்டியை சின்னனா மாத்து, பாயசம் கொஞ்சம் கட்டிப் படுது சுடுதண்ணி விட்டு தண்ணியாக்கு, ப்பளத்தை ரெண்டாக்கு, பெரிய வாழையிலையைப் போடாத , தயிரை மோராக்கு, கனக்க மிச்சம் இருக்கிற கறியை ரெண்டு மூண்டு தரம் கொண்டு போ எண்டு நிலமைகளை அறிஞ்சு ஓடர்கள் வரும்.

“எல்லாரும் சாப்பிட்டிட்டினம் பெடியள் வாங்கோ சாப்பிடுங்கோ “ எண்டு கடைசியா எங்களைக் கூப்பிட , மிச்சம் பிடிச்சு ஒளிச்சுவைச்ச எல்லாக் கறிச்சட்டியும் வெளீல வரும். பெரிய இலையில அவாவில அள்ளிப்போட்டிட்டு ரெண்டு வாய் வைக்கப் பசி போயிடும். தம்பியவை சபை போட்ட கைக்கு பசி போயிடும் கொஞ்சம் எண்டாலும் சாப்பிடுங்கோ எண்டு கேக்கிற அன்புக்கு இன்னும் கொஞ்சம் சாப்பிடினாங்கள்.

ஆனால் கலியாண வேலை எல்லாம் செய்து சபை போட்டவைக்கெண்டு பிறகு ஒரு மச்சச் சாப்பாட்டு வைபடும் அண்டு மாப்பிளை பொம்பிளையோட வீட்டுக்காரர் எல்லாரும் எங்களுக்கு சாப்பாடு போட உண்டி பிதுங்கச் சாப்பிடுவம். அண்டு சாப்பிடேக்க எனக்கு பாயாசம் வேணும் எண்டு கேட்டுச் சாப்பிடுறது.

ஒரு கலியாணத்தில போய் இந்தக் கனவில இருக்க திடீரெண்டு மனிசி தட்டி “ என்ன பாயாசம் எண்டு சொல்லிறீங்கள், பாயாசம் வேணும் எண்டால் மேசையில இருக்கு கெதியெண்டு எடுத்தச் சாப்பிட்டிட்டு வாங்கோ, வீடியோக்காரன் படம் எடுக்கத் தொடங்கினா நாங்கள் றiளா பண்ணிறது கஸ்டம் “ எண்டு சொன்னா. மனைவி சொல்லே மந்திரம் எண்டு அவசரமா பாயாசத்தை விழுங்க அது பிளாஸ்டிக் உரி க்கால வரமாட்டன் எண்டு அடம் பிடிக்க அப்பிடியே வைச்சிட்டு மேடைக்கு மனிசிக்குப் பின்னால ஓடிப்போய், கையைக் குடுத்திட்டு ரெண்டு நிமிசம் படத்துக்கு நிக்க, கமராக்காரன் சரி காணும் போங்கோ எண்டான்.

Dr. T. Gobyshanger
யாழ்ப்பாணம்

628 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *