பகிர்ந்துண்டு வாழாத வாழ்வென்ன வாழ்வோ?
-கரிணி.யேர்மனி
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
பாட்டன் காலத்து வாயிற்படிகளின் இருபுறத் திண்ணைகள் எங்கே போயின? தெருவில் செல்லும் ஆடுமாடுகளுக்கு தாகம் தீர்க்கவென வீதியோரம் வீட்டுக்கு வீடு அமைக்கப்பட்ட நீர்தொட்டியும், வழிப்போக்கர்களுக்கு தாகம் தீர்க்கும் மண்குடமும் எங்கே? இரவுப் பொழுதிலும் உணவு அத்தனையும் உண்ணாமல் யாரும் பசி என வந்தால் மிச்சம் வைக்க வேண்டும் என நீர் ஊற்றி வைத்த சோற்றுக் கலயம் எங்கே? அம்மா என்றழைத்தவர்க்கு முகம் நோக்கி அற்றது போக்கும் அத்தகையவள் கரங்கள்தான் எங்கே? இந்த நவீன கட்டுமானம் நவநாகரிகம் என்ற நரித்தோல் போர்த்திக் கொண்டதா? பக்கத்து வீட்டில் ஒரு பருக்கை உணவு இல்லாமல் இறந்துபோய்விட்ட விடயம் தெரியாமல் வாழும் முறை நாகரிக வளர்ச்சி என ஆகிவிடுமா?அடுத்தவன் பார்த்துவிட கூடாது என்றளவில் செல்வத்தை மறைக்க கட்டும் மதிற்சுவருக்கு அப்பால் எப்படி ஒருபிடி அரிசியும், சீனியும் பரிமாற முடியும் அட கொடுமையே! படைத்தவனையே பதைபதைக்க செய்யும் பகட்டு வாழ்வு என்பது நாகரிக கொடுமையல்லவா?
ஒருவர் வயிறு பசித்து கண்கள் இருட்டி, காதுகள் அடைபட்டிருக்கும்போது அத்தகையவரிடம் சமூகம், கல்வி, ஞானம் என்பனவற்றை புகட்டுதல் அழகல்லவே. அவை சரியாக உள்வாங்கப்படக்கூட மாட்டாது. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதற்கு ஏற்ப களவு, பொய் போன்ற ஒழுக்கக்கேடான செயல்களையெல்லாம் செய்யத் தூண்டும் இந்தப் பசி. உலகில் உண்ணவே முடியாத பொருட்கள் எவ்வளவு இருக்கின்றன என்பது கொடும் பசி உடையவருக்கே தெளிவாக புலப்படும்.ஏனெனில் கண்ணில் புலப்படும் எதையேனும் வாயில் வைக்கும் குழந்தையை விட அதிகமாக பசித்தவர் வயிறானது கல், மண் என காண்பவை எவற்றையும் உண்ண முடியாதா என ஏங்கும்.
உலகில் ஒருவருக்கு உணவு இல்லை எனில் இந்த உலகு எதுக்கு இதனை கொழுத்தி விடுவோம் என்றார் பாரதி. கண்களுக்கு முன்பு கடைகளிலும் மற்றவர் கரங்களிலும் வகை வகையான உணவுகள் இருக்கும் போது ஒருவர் பசியால் வாடுவது மிகவும் கொடுமையிலும் கொடுமை. பக்கத்து வீட்டில் பசித்து வயிறு ஒட்டியிருக்க பாற்சோறும் பாயாசமும் உண்பது எவ்வாறு. இல்லாதவர், இயலாதவர் முன்னிலையில் தன் செல்வச்செழிப்பு, ஆற்றல் பற்றி பெருமை பேசுவது எவ்வகையான கீழ்மையான இழிசெயல் என ஆன்றோர் பலவாறு கூறியுள்ளனர். நல்லதொரு விளைநிலத்தில் அகலக்கிளைகள் பரப்பி கண்கவர் கனிகளை கொண்டு ஓங்கிநிற்கும் நச்சு மரத்தினால் பயன் என்ன வழங்கிட முடியும் என்று கஞ்சத்தனத்தை அகற்றி வாழும்படி பெரியோர் கூறியுள்ளனர்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும்
பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்.
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேருறக் கண்டுளந் துடித்தேன்.
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
என்று ஊன் உருகி விழிநீர் பெருகி “இறைவா உலகம் முழுதும் அனைத்து உயிரினங்களும் இன்புற்றிருக்கும் நிலையை இக்கணமே ஏற்படுத்த மாட்டாயா?” என உளம் பதைத்து வேண்டுவார் வள்ளலார் பெருமான். கருணை இவ்வாறு இருத்தல் வேண்டும். அற்றாரைக் கண்ணில் கண்ட பொழுதே மடைதிறந்த வெள்ளம் போல் பெருக்கெடுக்க வேண்டும். எனக்கு, என்னுடையது என்ற கொள்கை உடைந்து உதவ வேண்டும்.
“ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” அதாவது ஓடிக் கொண்டிருக்கும் நீரே தூய்மையானது. குளம் குட்டை போன்றவற்றின் நீரை சுத்தப்படுத்தியே பயன்படுத்த முடியும். தேங்கிய நீர் அழுக்கடைவது போல ஈயாது பொத்திப் பாதுகாக்கும் செல்வமும் அழுக்கடைந்து இன்னல்களைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாது களவு, மருத்துவச் செலவு, தீயவழி போன்ற எதிர்மறையான விளைவுகளால் அழிந்து போகும்.
கஞ்சத்தனமும் பேராசையும் ஒருவரை தனிமைப்படுத்திவிடும். அவரை நிழல்போல் சார்ந்திருப்பவர் உள்ளகத்திலே உண்மை அன்போடு இருக்க மாட்டார்கள். மாறாக சரியான சந்தர்ப்பத்திற்காகவே காத்திருப்பார்கள். இன்றைய சூழலில் இன்னும் பலர் தாம் தமக்காகவா பாடுபடுகின்றோம், தாம் பெற்ற பிள்ளைகள் வறுமைப்பட கூடாது என்றுதான் சேமிக்கின்றோம் என ஓடி, ஓடி உழைத்து சேமிப்பார்கள். இதனால் அந்த பிள்ளைகள் ஆழுமையற்ற வகையில் வளர்க்கப்படுவதோடு ஏதோ ஒரு காரணத்தினால் இந்த செல்வங்கள் இழக்கப்படும் தறுவாயில் இவ்வுலகில் நின்று நிலை கொள்ளும் சக்தியற்று வீழ்ந்து போவார்கள். அதனால்தான் தம் பிள்ளை ஊனமாக பிறந்தால் அப்பிள்ளைக்கு அளவாக சொத்து சேமித்து வையுங்கள் மாறாக நல்ல ஆரோக்கியமான பிள்ளைக்கு சொத்து சேமித்து அதனை ஊனமாக்கி விடாதீர்கள் என்பார்கள்.
பலர் தூர தேசத்தில் பாதுகாப்பாக பஞ்சு மெத்தையில் படுத்துறங்கிக்கொண்டு இருக்கும் செல்வச்செழிப்பினால் தம் தாயகத்தின் செலாவணி விகிதத்தை பயன்படுத்தி ஏக்கர் கணக்கில் நிலப்பரப்புக்களையெல்லாம் வாங்கி கட்டாந்தரையாக விடுகின்றனர். அதனுள் யாரையும் குடியிருக்க அனுமதிக்காமலும், மூதாதையர் சொத்து என சொந்த ஊரில் உள்ள காடு போன்ற நிலங்களை தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்யவும் விரும்பாமலும், பிறரை குடியமர்த்தாமலும் அதனை பற்றைப்புற்கள் படர்ந்து வளரவும் விடுகின்றனர். இருபக்க வழிப் போக்கிற்கும் இடைப்பட்ட அபாய பிரதேசங்களாக இவை காணப்படுவதே உண்மை. அந்த நிலங்கள்தான் தற்காலத்தில் களவு செய்பவர்களுக்கு காவலாளியாகவும், கடத்தல், துஷ்பிரயோகம், கொலை, மறைத்தல் போன்ற பாதகச் செயல்களுக்கு அடிப்படையாகவும் விளங்குவதனால் இந்த பாவச் செயல்களின் பங்குதாரிகளாக இத்தகைய பன்னாட்டு வாழ் பணக்காரர்களும் அடங்குகின்றனர் என்பதனை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இருப்பவர் இயல்பாக இருக்கும் இயற்கை வளத்தின் விற்பனை விலைகளை வானுயர ஏற்றிவிட்டு விடுவதனால் இல்லாதவருக்கு தேவை ஏற்படுகையில் என்ன செய்ய முடியும். எரியும் வீட்டில் பிடுங்கும் வரை இலாபம் பார்க்கும் தன்மைகள் கைவிடப்பட வேண்டும். அளவான வளங்களோடு போதும் என்ற மனதோடு வாழப் பழக வேண்டும். இவை குற்றம் போன்று தோற்றமளிக்காத குற்றங்கள்தான். இன்று சமுதாயத்தின் பிடியில் இத்தகைய குற்றவாளிகள் தப்பித்தாலும் இயற்கையின் பிடியில் ஒருநாள் நழுவி விட முடியாது.
கடினப்பட்டு உழைத்தவற்றையெல்லாம் அற்றவர்களுக்கு வாரி வழங்குகின்றோமே அவர்கள் திரும்பவும் பிரதியுபகாரம் செய்யும் நிலையில் இல்லையே என ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. செய்த நன்மை அவரவர் மூலம் திருப்பி கிடைக்காது போனாலும் தக்க சமயத்தில் பிறிதொரு வழியாக பலமடங்கு கிடைக்கும் என பல ஞானிகள் உறுதியாக கூறியுள்ளனர். இப்பிரபஞ்சம் எவருடைய கடனையும் வைத்திருப்பதில்லை. “நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கோல் என வேண்டா – நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருதலால்”. என்பது போல காத்திருந்து கனி உண்ணலாம் நற்கருமம் செய்து வந்தால். தர்மம் தலை காக்கும் எனவும் அதாவது தர்மத்தால் அகமகிழ்ந்து கூறிய ஆசிகள் உயிர் கவசமாகவே செயற்படும் என சொல்லப்படுகிறது.
பிறருக்கு பயன்பட்டு வாழும் வாழ்வில் எதன்மீதும் பயம் உண்டாகாது. சொல்லப்போனால் குறுகிய வாழ்வு பரந்து விரிவடைவதனால் மரணத்தறுவாயில் கூட நிம்மதியும் புன்னகையும் ததும்பி உயிர் உலகெங்கும் வியாபித்து நிற்கும். இதில் இறப்பு என்பதும்தான் ஏது? ஆசை அற்ற நிலையே மோட்சம். அறம் ஆசையினை அறுத்துவிடும் ஆகையால் ஜீவ காருணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் எனப்பட்டது.
754 total views, 3 views today