” நிறை ஓதம் நீர் நின்று “
தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்.
அபிநயக்ஷேத்திராவின் பயணத்தில் பெறும் அகவெளி அனுபவமும், ஆய்வும், ஆனந்தமும் அதிகரித்துக் கொண்டே செல்வதை அவதானித்தவளாய், மரபு மாறாத மற்றுமொரு புதிய மார்க்கத்தை செதுக்கிடும் அகத்தூண்டலில் உருப்பெற்றதே ” நிறை ஓதம் நீர் நின்று ” – ஐம்பெருங் காப்பிய மார்க்கம்.
புகப் புகப் பேரொளி காட்டவல்ல தொல்லுதமிழ்த் திரவியத்தை, நல்லியல் நாட்டியத்தில் கலந்திடச் செய்ய, உயிரிசை தந்த இசையிறை ராஜ்குமார் பாரதி ஐயாவைப் போற்றிப் பணிகின்றோம். செறிந்த இயலாக்கமும், ஆழ்ந்த லய அமைப்பும் , நுண்ணிய இசையுமென ஆய்வுப் படைப்பாக பாரதி ஐயா தரும் போது, வெள்ளமெனப் பாய்ந்த உள்ளக்களியை மீள மீள நினைந்து பகிர்ந்தோம்.
ஐம்பெருங் காப்பிய மார்க்கத்தில் முற்பகுதியில் தமிழ் வணக்கமாக புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், சீவகன் கவுத்துவம் , சிலப்பதிகார வர்ணம் என்பன இடம்பெற்றன. இதனை வெற்றிமணியின் கடந்த மாத இதழில் குறிப்பிட்டு இருந்தோம். வர்ணத்தினைத் தொடர்ந்து மணிமேகலை பதம் இடம்பெற்றது.
துணிவும் பணிவும் கொண்டு துலங்கும் பெண்டிர், தெய்வமெனப் போற்றப்படும் வரலாற்றினைக் காப்பியங்கள் காட்டித்தருகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
மணிமேகலை காப்பியத்தின் முக்கிய கதையாக ஆபுத்திரன் கதை திகழ்ந்ததானால் மட்டும் அன்றி இது நம் இலங்கையில் மணிபல்லவத்தீவில் நடந்தேறிய கதை என அறிவதால் ஆபுத்திரன் கதையை மையப்படுத்தி மணிமேகலை பதம் , “மணிபல்லவத்தீவில் மணிமேகலை” என்ற தலைப்பில் அமைந்திருந்தது.
அத்தோடு இந்த மணிபல்லவ தீவில் தான் மணிமேகலை கையில் பெரும் புதையலாக பசிப்பிணி தீர்க்கவல்ல அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் கிடைக்கப்பெறுகிறது.
கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளைத் தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சென்று விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை ‘அமுத சுரபி’ என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழை எளியோருக்கு வழங்கினாள்.
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது
தானம் செய்மின்
ஐம்பெருங் காப்பியங்களில் வளையாபதி ,குண்டலகேசி இரண்டிலுமே குறிப்பிடப்பட்ட தத்துவங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தினமும் சிந்திக்க வேண்டிய திருக்குறளை ஒத்தன. ஊன், உடல் ,சொத்து, செல்வம், பெயர், புகழ், குடும்பம், ராஜ்ஜியம் என யாவுமே அழிந்துபோகவல்லன என்ற நிலையாமையை தௌ;ளத் தெளிவுற உணர்வுக்கும் காப்பியங்கள். பொய் சொல்ல கூடாது, புறம் சொல்லலாகாது, உயிர்களிடத்தே அன்பாக இருக்க வேண்டும், சிறியாரோடு சேரக் கூடாது என இன்ப வாழ்விற்கான வழிமுறையையும் கற்றுக் கொடுக்கிறது.
இத்தத்துவங்களைத் தம் வாழ்வில் இயல்பினில் ஏற்ற ராஜ்குமார் பாரதி ஐயா , வளையாபதி குண்டலகேசி இரண்டினையும் இணைத்து , தத்துவப் பாடலாக வடித்துள்ளார். உயிர்கள் ஓம்புமின் , ஆருயிர் போற்றுமின்
சீவகசிந்தாமணி , சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என நிறை கடலாய் விரியும் ஐம்பெருங் காப்பியத்தில் ஆழித் திவலைகளை முத்தமிழ் படைப்பாய் , இசை மேதை ஞானபாநு ராஜ்குமார் பாரதி ஐயாவின் பிறந்த நாளை ஒட்டி அவர் முன்னிலையில் சமர்பித்தோம். கண்டோர்க்கும், கருதியோர்க்கும் அறமே அணிகலனாகட்டும்.
ஐம்பெருங் காப்பியங்கள் போற்றுமின்
“உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்
தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்”
என்ற பாரதியின் புத்தமுதத்தேனொத்த வரிகளைக் கொண்டு புதிய முறையில் தில்லானா வடிவமைக்கப்பட்டு நிறை ஓதம் நீர் நின்று நிகழ்விற்கு பூரண நிறைவினைத் தந்தது.
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் குயிலுவக் கலைஞர்கள் மிடற்றிசை திருமதி வித்யா கல்யாணராமன் , தண்ணுமை முனைவர் குரு பரத்வாஜ் , நரம்பிசை திருமதி நந்தினி சாய் கிரிதர் ஆகியோர் சென்னையில் இருந்து வருகை தந்திருக்கிறார்கள்.
அமரலோகத்தை ஐவிரலில் தாங்கும் ஓவியர் மதிப்பிற்குரிய பத்மவாசன் ஐயா உட்பட, தேர்ந்தெடுத்த கருப்பொருளின் மேன்மையுணர்ந்தும், நம் எண்ண உண்மை அறிந்தும் தம் அகங்கோர்த்த அன்பினோர்க்கு என்றென்றும் நன்றியுடையோராய், மெயின்பம் அவர்பால் தங்கப் பிரார்த்திக்கின்றோம்.
நெருங்கிய தமிழ்க் காதலை நீள் காலம் கொண்டுசேர்க்கும் நெடுங்கனவின் வேராழத்தை வெளிப்படுத்த அருந்தினமாய் மலர்ந்த இந்த முத்தமிழ்ப் படைப்பு ,இனிமுதல் அகில மகிழ்வு தரும் என்பதில் ஐயமில்லை.
1,157 total views, 2 views today