“ முகமில்லாத மனிதர்கள்“ நாடகம் – 1980

எனது நாடக அனுபவப் பகிர்வு – 20
ஆனந்தராணி பாலேந்திரா
கடந்த இதழில் ‘முகமில்லாத மனிதர்கள்’ இதுவரை நான் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு வித்தியாசமான நாடகமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த நாடகம் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே மாதிரியான வேரோட்ட வாழ்க்கையையும் இதிலிருந்து விடுபட எத்தனிக்கும் ஒருவரைப்பற்றியும் கூறும் நாடகம்.
வீடு, பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம், பரீட்சைகள், வெளியுலகம், தொழில், காதல், திருமணம், குழந்தைகள், பதவியுயர்வு, வீடு கட்டுதல், வீடு வாங்குதல் பற்றி, பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கவலைகள், கிரிக்கெட், சினிமா, அரசியல் பற்றிய பேச்சுகள், நோய், துன்பம் பற்றிய கவலைகள் என இவர்கள் சுற்றிச் சுற்றிச் செல்லும் சூழல் வட்டத்தில் இழுபட்டுச் செல்லும் மனிதர்கள். தனித்தனியே இவர்களை இனம் காண முடியாது. முகங்கள்தான் வேறு வேறு. இந்த வட்டத்தில் இருந்து விடுபட நினைக்கும் ஒருவர் கடைசியில் தானும் முகமில்லாத மனிதர்தான் என உணர்கிறார்.
ஒரு எழுத்தாளர் ஒரு நாடகம் எழுத முற்படுகிறார். ஒன்றும் சரிவரவில்லை. ‘எதைப்பற்றி நான் எழுத? யாரைப்பற்றி நான் எழுதிறது? எனக்கு எத்தனை பேரைத் தெரியும்? அதோடை அவையைப்பற்றி எனக்கு என்னதான் தெரியும்”
எழுத்தாளர் பார்வையாளர்களைப் பார்க்கிறார். இவர்களில் சிலரின் கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்று எண்ணி பார்வையாளர்கள் சிலரை மேடைக்கு வரும்படி அழைக்கிறார். அவர்களில் நால்வர் தயக்கத்துடன் மேடையில் ஏறுகிறார்கள். வரிசையில் வந்து நிற்கும் அவர்களைப் பார்த்து என்ன பெயர் என்று கேட்கிறார். அமல், விமல், கமல், நிர்மல் என்று கூறுகிறார்கள். எழுத்தாளர் ‘அமல், விமல், கமல், நிர்மல்! அப்பிடி இருக்கமுடியாது” என்று கத்துகிறார். நாலாவது பார்வையாளரிடம் அவரது உண்மையான பெயர் என்ன என்று கேட்கிறார். அவர் இந்திரஜித் என்கிறார். “ அப்ப ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்கிறார். “ பயம். ஒருவன் ஒழுங்கை, வழக்கத்தை மீறினால் அமைதி குலைஞ்சு போகும்” என்று கூறி தான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட நினைத்து கடைசியில் தானும் அவர்களுள் ஒருவராகிப் போன கதையைக் கூறுகிறார். இந்த நாடகத்தில் வரும் நான் ஏற்று நடித்த மானசி என்ற பாத்திரம்கூட சமூகத்துடன் முரண்படாது ஒத்துப்போகும் மனப்பாங்கின் மாதிரி உருவந்தான்.
இந்த நாடகத்தில் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து நான்கு நடிகர்கள் மேடைக்கு வந்து நடித்தது பல பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. இவர்களை மேடைக்கு வரும்படி அழைத்த அந்த எழுத்தாளராக நடித்தவர் பிரபல ஈழத்து மெல்லிசைப் பாடகர் மா.சத்தியமூர்த்தி. அந்நாட்களில் இலங்கை வானொலியில் பல மெல்லிசைப் பாடல்களைப் பாடி நன்கு அறியப்பட்டவராக இருந்தார். இவர் பாடிய ‘ஓ வண்டிக்காரா’ இவருக்குப் பெரும் புகழைக் கொடுத்த பாடலாகும்.
‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் பல பாடல்கள் இடம்பெற்றன. அதனால் தானே பாடி நடிக்கக்கூடிய நடிகரை நாடக நெறியாளர் பாலேந்திரா தேடியபோது அவருடைய நண்பர் சாந்திநாதன் மூலம் அறிமுகமானவர்தான் சத்தியமூர்த்தி. அவரை அந்த எழுத்தாளர் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். நடிப்பது இதுதான் அவருக்கு முதல்தடவை. பாலேந்திரா அனேகமாக தனது நாடகங்களில் முன்அனுபவம் இல்லாத நடிகர்கள் பலரை நடிக்க வைத்து அந்நாடகங்கள் வெற்றி நாடகங்களாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டன. சத்தியமூர்த்தியும் தான் ஏற்ற பாத்திரத்தை வெகு சிறப்பாகச் செய்து பெரும் பாராட்டுகளைப் பெற்றார். பாடல்களையும் மிகவும் நன்றாகப் பாடினார். இலங்கையில் ஆரம்பித்து லண்டனில் தொடரும் எமது நாடகப் பயணத்தில் சத்தியமூர்த்தி 1980இல் இணைந்து இன்றுவரை தொடர்ந்து எம்மோடு பயணித்து வருகிறார். லண்டனில் பாலேந்திரா தயாரித்து நெறிப்படுத்திய ‘எரிகின்ற எங்கள் தேசம்’, ‘துண்பக் கேணியிலே’, ‘பெயர்வு’ போன்ற நாடகங்களில் பங்குபற்றியுள்ளதுடன் எமது குழுவின் பிரதான பாடகராக ‘கானசாகரம்’ ஈழத்து மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவதுடன் சிறுவர், இளையோர் நாடகங்களிலும் பின்னணிப் பாடகராகப் பாடி வருகிறார்.
‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் வரும் மற்றொரு முக்கியமான பாத்திரம் இந்திரஜித். இந்தப் பாத்திரத்தில் நடித்தவர் கானகலாதரன். இவரும் நடிப்புத்துறைக்குப் புதியவர்.
தொடரும்…..