பெண் சாதுக்கள்! உருவாக்கும் ஆண் அதிகாரிகள்
மாலினி மாலா – யேர்மனி
அப்பா வந்தால் அடிக்கப் போறார். அப்பா வந்து கத்தப் போறார். அப்பா கண்டாரெண்டல் கொல்லப் போறார். மனுசன் வந்து சதிராடப் போகுது. பிள்ளைகளின் கல்வி, குறும்பு குழப்படி போன்ற அனைத்திலும் திருப்தியின்மை தோன்றும் போது அதிகளவான அம்மாக்களால், முக்கியமாக எம்மினத்தவர்களால் இன்று வரை பயன்படுத்தப்படும் இந்த வாக்கியப்பிரயோகங்கள், பற்றிய குழப்பம் எனக்குண்டு. அப்பா வந்தால் அடிக்கப்போகும் அந்த விடயத்துக்கு அம்மாவால் ஏன் அடிக்க முடியாது. (அடிப்பது சரிஎனச் சொல்லவில்லை. தண்டனை என்பது அடிப்பதும் உதைப்பதுமல்ல.தவிரவும் தண்டிப்பதால் கிடைப்பது எது என்பது பற்றி வேறோர் பதிவில் என் மனக்கிடக்கைகளைப் பதிவிடலாம் என இருக்கிறேன்.) அப்பா வந்து கத்தப்போகும் விடயத்துக்கு அவர் வருமுன்னமே ஏன் அம்மாவால் கத்த முடியாது. (கத்துவது சாதிக்குமா கதைப்பது சாதிக்குமா) அப்பா கண்டாரெண்டல் கொல்லப்போகும் விடயத்துக்கு அதை முதலில் கண்ட அம்மா கொன்றால் என்ன ( கொல்வது என்று முடிவெடுத்து விட்டபின் அதை யார் செய்தால் தான் என்ன. பிள்ளை என்பது என்ன உயிரா உணர்வா, என்ர பிள்ளை நான் அடிப்பன் கொல்லுவன் ஆர் கேட்க முடியும் என்று சொல்லும் பெற்றோரின் பொருளை எவர் கொன்றால் தான் என்ன ) மனுசன் வந்து சதிராடப் போகுதெனத் தெரியும் விடயத்துக்கு, அதற்கு முதல் தானே சதிரோ சாமியோ ஆடிமுடித்தால் என்ன.
இவற்றின் மூலம் எவற்றை உணர்த்த முயல்கிறார்கள். அப்பா என்பவர் பொல்லாதவர் ஆதிக்க சக்தி அதிகாரமும் ஆக்ரோசமும் அடக்கு முறையும் கொண்டவர் என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்தும் போது, குழந்தையிலேயே அவர்களுக்குள் ஏற்படும் மன இடைவெளிகள் பின்னெப்போதும் நெருங்கிய ஒரு நட்புணர்வுக்குள் இணைந்து கொள்ள முடியாமல் நெஞ்சுக்குள் நேசத்தைப் பொத்திக்கொண்டு நெருங்காமல் நொறுங்கும் நிலைக்குத் தள்ளி விடாதா. இன்னொன்றும் கூட நடக்கும். அப்பாவின் கத்தலில் இருந்து பிள்ளைகளைக் காப்பதாக அணைத்துக் கொண்ட சாமர்த்தியம் வயோதிபத்தில் தனித்துப் போகும் அம்மாக்கள் இலகுவில் பிள்ளைகளோடு சேர்ந்து வாழவும், அப்பாவிலிருந்து அம்மாவின் வார்த்தைகள் தூரமாகப் பிரித்து வைத்த இடைவெளி அப்பாவின் இறுதிக்காலத்தில் தனிமைக்குள் தள்ளிக் கொல்லும் தண்டனையும் கொடுக்கும். எவ்வளவோ மென்மையும் நிதானமும் பொறுப்பும் பிள்ளைகளோடு நட்புப் பேண முயலும் தந்தைகளையும் இந்தக் கொடுமையான நிலைக்குத் தான் தள்ளி விடுகிறது பல அம்மாக்களின் தப்பிக்கொள்ளும் சாமர்த்தியம் அது போதாதுக்கு, அண்ணன் வரட்டும் சொல்லுறன், சித்தப்பன் வரட்டும், பெரியப்பன் வரட்டும் மாமன் வரட்டும் மண்ணாங்கட்டி வரட்டும் என்ற மிரட்டல்கள் வேறு பிள்ளைகள் மீது ஏவப்படும் போது பெண் குழந்தை சிறுவயதிலேயே ஆண் என்பவன் அதிகாரசக்தி ஆதிக்க சக்தியாக எண்ணி ஒடுங்கவோ, அன்றி எதிர்க்கவோ முற்படுகிறது.
கூடவே ஆண்குழந்தைகள் ஆண் என்பவன் மட்டுமே அதட்டிக்கேட்கும் உரிமை கொண்டவன் என்பதாகவும். ஏதொன்றையும் அதிகாரத்தின் மூலம் ஆளும் உரிமை தனக்கே உள்ளதாகவும், முடிவெடுக்கும் சக்தியும் அறிவும் தன்னிடமே உள்ளதாகவும் எண்ணத் தலைப்படுகின்றன. இந்த அம்மாக்களுக்கு ஏற்றாப்போல, கத்துவதும், கொல்வதும் சத்திராடுவதும், அடிப்பதும் தான் கொண்டிருக்கும் உறவு முறையின் தலையாய கடமைகளில் ஒன்றாக எண்ணிக்கொண்டிருக்கும் அப்பாகளும், இல்லாமலில்லை. எந்த ஒரு விடயத்தையும் அமைதியாக இருந்து பேசுவதோ நிதானமாகப் பிள்ளையைச் சிந்திக்கத் தூண்டுவதோ அன்றி தாய்க்கும் பிள்ளையின் செய்கைகளில் முடிவெடுக்கும் செயற்படுத்தும் உரிமை உள்ளது என்பதைத் தவிர்த்து அனைத்தும் என் ஆதிக்கத்துக்கு உட்பட்டது என அவசியமே இல்லாமல் ஆடித்தீர்ப்பது. என்னைப் பொறுத்தவரை இந்தக் குணவியல்பின் அடிப்படையே தாழ்வு மனப்பான்மையின், தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடு எனத்தான் கொள்வேன். எம்மால் பேசிப் புரியவைக்க முடியாத போது, விடயத்தைப் புரிந்து,அல்லது அறிந்து கொண்டு அதற்கேற்ப வினையாற்ற முடியாத போது, எம்மையே எம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தகமை இல்லாத போது எமது அதிகாரத்தின் மூலம், அதை அங்கீகரிக்கும் உறவு முறையின் கிரீடத்தைச் சூடிக்கொண்டு அடக்கவும் அடிக்கவும் கத்தவும் என அனைத்து வன்முறைகளையும் பிரயோகிக்க முயல்கிறோம் யோசித்துப்பார்த்தால் எந்த ஒரு ஆதிக்க, அதிகாரமும் வன்முறையும் நேசத்தையும் நெருக்கத்தையும் உடனிருப்பையும் பேணுவதேயில்லை நாடுகளிலாகட்டும் வீடுகளிலாகட்டும். சமத்துவமும் புரிதலும் நேசமும் பேணாத மனிதர்களை காலம் கனமாகத் தண்டித்துத்தான் விடுகிறது
1,245 total views, 3 views today