ராணியாக வாழ்வது அத்தனை சுலபமல்ல
கவிதா லட்சுமி நோர்வே
வடக்கும் தெற்குமாக
கிழக்கும் மேற்குமாக
குறுக்குமறுக்குமாக
ஓட வேண்டும்
ஒரு ராஜாவுக்காக
சுவர்களை உடைக்க வேண்டும்
ஆலோசகர்களைத் தகர்க்க வேண்டும்
எதிர்வரும்
விற்களையும் வாட்களையும்
வீழ்த்த வேண்டும்
தன் மக்களைக் காக்க வேண்டும்
ஒரு ராஜாவுக்காக
நான்கு மூலைகளுக்குள்
வீராங்கனையென
முட்டி மோதி, வீழ்ந்து,
ஓடி ஒளிந்து பாய்ந்து,
இறந்து உயிர்த்து,
ஒரு ராஜாவுக்காக!
உலகம் சதுரமல்ல என்பதும்
வாழ்தல் வெறும்
கறுப்பு வெள்ளையல்ல என்பதும்
ஆட்டத்தை விட்டொழித்து
வந்தால் மட்டுமே
புரியக்கூடும்
ராணிக்கும்
மற்றும்
யாவருக்கும்!
776 total views, 3 views today