நியூட்டனின் மூன்றாம் விதி
வி.மைக்கல் கொலின் இலங்கை
நிலவு தூங்காத இரவொன்றில்
இருவரும் உறங்கிக் கிடந்தோம்
தீரா காதலின்
பெரு வெளியில்
நீ பிரியம் தந்தாய்.
நான்
ஒரு கிண்ணம்
நிறைய கவிதைகள் தந்தேன்.
உறக்கமும்
கனவும்
கலந்த பித்த நிலை
எங்கள் படுக்கையறையில்
தொங்கிய படச் சட்டகத்தில்
திமிறிப்பாயும் குதிரை
எம் கட்டிலுக்கு அருகில் வந்து
கனைத்தது
நீ விழித்துக் கொண்டாய்
உறக்கம் கலைந்த
என்னையும் ஏற்றிக்கொண்டு
குதிரையை
செலுத்துகிறாய் நீ
மாவலி நதியோரம்
எம் இருவரையும்
சுமந்த குதிரை
பயணித்துக் கொண்டிருந்தது.
இரவின் மௌனத்தைக் கலைத்து
நீ பேசுகிறாய்
“இது யாரது குதிரை தெரியுமா?”
நான் மௌனம் காக்கிறேன்
“எங்கள் ராவண மகாராஜாவின்
இளவல்
மேகநாதன்
இந்திரஜித்தின் குதிரை
இன்று எங்களை சுமக்கிறது”
என்கிறாய்.
எனக்கும் தெரியும்
இந்திரஜித் வீரன்
பிரமாஸ்திரம்
வைணவஸ்திரம்
பாசுபதாஸ்திரம் என
மூன்று தேவர்களின்
மூல ஆயுதங்களை கொண்ட
ஒரே வீரன் அல்லவா?
உலகமே வியக்கும்
மிகச் சிறந்த வீரன்.
துரோகத்தால்
வீழ்ந்தவன்.
குதிரை
தென்னவன் மரவடி கடந்து
வீரம் புதைந்த முள்ளிவாய்க்கால்
மண்ணை முத்தமிட்டது.
நந்திக்கடல் காற்று
எம் மேனி தழுவியது
இன்னமும் மாறாத
எம் மக்களின்
ரத்த வாசம்
காற்றின் மூச்செங்கும்
இன்னமும் மாறாத
மரண ஓலத்தின் வீச்சம்.
முழுநிலவு
வானில் பிரகாசித்தது.
நிலவின் முகத்தில்
சில காட்சிகள் வந்து போயின
நியூட்டனின்
மூன்றாம் விதியின்
அரங்கேற்றம்
காட்சியாகியது
உலகத்தெருக்களில்
அகதியாய் அலைந்த
எம் மக்களை விட
மோசமாக
அலையும் தலைவனின்
நிலை
யார் அறிவார்?
1,229 total views, 3 views today