நின்னை சரணடைந்தேன்

காதலெனும் கற்பக தரு
இம்மாத பாடல் பகுதியில் எவ்வாறு சரணடைகிறார் நம் பாரதி என்று பார்க்க விழையும் போதே பட்டம் பூச்சி சிறகடிக்கும் சத்தம் கேட்கிறது இதயத்தில்…
பிரபஞ்சத்தில் தோன்றும் பொருள் யாவும் காதலின் தோற்றம் என்று களித்தவன் காதலன் பாரதி.
மண்ணில் மலர்ந்தவற்றை காதல் அறிவினால் வண்ணம் தீட்டி விண் கொண்டு சேர்த்தவன்.
மலையும் கலை சொல்ல , அலையும் மன அலையில் காதல் விதைக்க,
காற்றின் கப்பலில் உருவம் தொலைத்து உணர்வின் பயணம், ஊரறியா மாயம் இது உண்மை பல நேரம்.
முன்னே கண்ட வீணான மனித கனவுகளை மாற்றி பின்னே காதலெனும் மந்திர பொருள் கொண்டு தெய்வீக கனவாக்கி உய்வித்த வித்தகன்.
அரிய அறிவாய் காதல் அன்பெனும் தனிச்சுடரில் ஞானமெனும் மணம் வீச சித்தத்தில் சிவம் காண செய்தவன்.
ஒப்புயர்வற்ற உள்ளத்தில் உவகை மட்டுமே ஊறிட காதல் எனும் ஒற்றை மார்கத்தை அருமருந்தாய் ஏற்றியவன்.
தேனுண்ணும் உணர்வு தான் காதல் என்று கனிவித்தவன்
உனையே மையல் கொண்டேன் வள்ளி
உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்
உன்னையே ( உன்மேல் மட்டுமே ) மையல் (உன்மத்தம்) கொண்டேன்.
பாரதியின் அன்பினை வெறுமனே மயக்கம் என்றோ சாதாரண பித்து என்றோ பொருளுரைக்க முடியவில்லை. அவனது உணர்வில் தோன்றிய மையல் நிட்சயமாய் உன்மத்தமாய் தான் இருந்திருக்க வேண்டும்.
மொழிக்கு உவமை அழகு என்று அறிந்தாலும் மொழி கடந்த காதலுக்கு உவமை அரிதாய் தான் இருக்கும். எதனோடு ஒப்பிட்டு கூற முடியும் உள்ளமதை மென்மையாக்கும் மேன்மையாக்கும் காதலியை ?
ஆக ஒன்று மட்டும் நிச்சயம் ..உயிரினும் இனியதாய் தான் இருக்கும்.
அத்தனை ஆழ்ந்த அதி அற்புத சூட்சும உணர்வை எப்படி தான் ஒருசில இலகு தமிழ் சொற்களுக்குள் அடக்குகிறானோ பாரதி என்று எண்ணி எண்ணியே அவன் மேல் வற்றா காதலில் சொக்கி நிற்கிறேன் தினம் தினம் பல கணம்.
எனையாள்வாய் வள்ளி வள்ளி
இளமையிலே, என் இதயமலர் வாழ்வே
கனியே, சுவையூறு தேனே
கலவியிலே அமுதனையாய் தனியே , ஞானவிழியாய் நிலவினிலே
நினைமருவி,வள்ளி வள்ளி
நீயாகிடவே வந்தேன்
என்னை ஆள்வாய் ..அடடா ஆள்தல் எனும் சொல்லில் அடங்கியுள்ள சரணடையும் தன்மை ….ஆழ்தலில் தானே அடைதலும் உள்ளது .
இங்கு சற்றே விழிக்கிறேன் தமிழை ரசிப்பதா ? இல்லை தமிழை சரிவர கையாண்ட கவி கிறுக்கனை ரசிப்பதா ?
காதல் இருக்கும் வரை இளமைக்கு என்ன குறை ?
என் இதயமலரில் வாழ்ந்து கொண்டு இருப்பவளே ..பெண்களுக்கு மட்டும் தானே இதயத்தை மலர் என்று உவமை கூறலாம்? இல்லை இல்லை ஆண்களின் மனது பெண்களை விட மென்மையானது என்று விவாதத்திற்கு விடை கூற முயலவில்லை பாரதி.
காதல் என்னும் தன்மை கண்டால் ஆண் பெண் என்னும் பால் நிலை கூட தோற்றிடும். ஏக தன்மை மட்டுமே இருக்கும். இதயமே மென்மையானது என்று கருதுவோம் இதிலும் ஒரு படி மேலாக மலரையும் சேர்த்து மேலும் மென்மையான இடத்தை வழங்குகிறான் காதலி இருப்பிடமாய்.
காதலி நீ அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் ஆதலால் தானே நானும் வாழ்கிறேன் என்ற கருத்தில் என் இதயமலர் வாழ்வே என்று கூறுகிறார்
இவ்வாறு கனிந்து என்னுள் இருப்பதால் கனியே,வெறும் கனி மட்டுமல்ல சுவை ஊறுகின்ற தேனே என்கிறார்.
என் இதய மலரில் வாழ்ந்து என்னோடு கலந்தவளே , உன்னை கலவியால் கலந்தால் அமுதெனும் பெரும் பொருளிலும் பிறிதுண்டோ ?
அன்று அப்பாற் கடலை கடைந்து எடுத்த அமுது போன்றவளே ,
தனிமையில் இருந்து உன்னை நினைத்து நினைத்து ஞான விழி கண்டு,
தண்ணும் நிலவினிலே உன்னை நாடி,
நீயும் நானும் வேறல்ல என்று ஐக்கிய நிலையை அடைய வந்தேன்.
அத்வைத உணர்வினில் உயிர் நோக்கம் காண்போம் என்னும் உத்தம சத்தியத்தை ஊருக்கு எடுத்து சொல்லி சென்ற ஒப்புயர்வற்ற பார்தி.
இன்னும் என் உணர்வினில் நித்திய சிரஞ்சீவியாய் உயிரோடு இருக்கிறான்