வன்முறைகளே, வரைமுறைகளா ?
ஆண்கள் என்ன எப்போதும் கத்தியும், கடப்பாரையும்
தூக்கிக் கொண்டுதான் திரிகிறார்களா?
சேவியர். தமிழ்நாடு
சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். என் போதாத காலம் மனைவியோடு சென்றிருந்தேன். படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெட்டும், கொலையும், வெடிகுண்டும் திரையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. என் மனைவிக்கு வன்முறை என்றால் அலர்ஜி. திரையிலோ உலகிலுள்ள அத்தனை வகையான துப்பாக்கிகளும் வெடிக்கின்றன. பீரங்கிகள் வெடிக்கின்றன. கத்திகள் இரத்தம் சொட்டச் சொட்ட தெறிக்கின்றன. முகத்தில் இரத்தம் சாரலடிப்பது போன்ற ஒரு உணர்வு. கையிலிருந்த பாப்கானை அடிக்கடி சோதித்துப்பார்த்துக் கொண்டேன்.
ஒரு வழியாக படம் முடிந்தது. சத்தங்களின் பதுங்கு குழியிலிருந்து மெதுவாக வெளியே வந்தோம். கலிங்கப் போர்முடிந்து வெளியே வருவது போல இருந்தது நிலமை. வீடு வந்து சேரும் வரை மனைவி வார்த்தைகளால் என்னைச் சுட்டுக் கொண்டே வந்தார். நான் பொத்தலாகி வீடு வந்து சேர்ந்தேன்.
யோசித்தேன். வெற்றி பெற்ற திரைப்படங்களில் பெரும்பாலானவை குருதிக் கதைகளையே பேசுகிறது ! ஏன் இப்படி ? ஆண்மை என்பதையும் வீரம் என்பதையும் பறை சாற்ற கத்திகளும், துப்பாக்கியும் தான் தேவையா ? மென்மையையும் பொறுமையையும் பயின்றால் அது கோழைத்தனமா ? ஏன் ஆண்கள் எப்போதுமே மீசை முறுக்குபவர்களா ? அவர்கள் மென்மை பயில்பவர்களாய் இல்லையா ?
திரைப்படம் எவ்வளவு பெரிய ஊடகம். திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய சமூக எழுச்சியை உருவாக்கி விட முடியும். ஒரு வீரபாண்டியக் கட்டப் பொம்மன், ஒரு கப்பலோட்டியத் தமிழன், ஒரு பராசக்தி என சமூக வீதியில் மாற்றத்தை உருவாக்கிய எத்தனையோ திரைப்படங்கள் நமது திரைவரலாற்றின் பக்கங்களில் கம்பீரமாக இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அத்தகைய பதிவுகள் குறைந்து விட்டன, அல்லது மறைந்து விட்டன. வன்முறையின் களத்தில் வாள்வீசுகின்ற காலம் வந்து விட்டது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு விதத்தில் சீசன் பழங்களைப் போல. ஒரு காதல் திரைப்படம் வெற்றி பெற்று விட்டால், அடுத்து அது படுதோல்வி அடையும் வரை காதல் படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். ஒரு ஆக்ஷன் படம் வெற்றியடைந்து விட்டால் கத்தியே கதறும் வரை சண்டைப் படங்களாக எடுத்துக் குவிப்பார்கள். ரசிகர்கள் இதைத் தான் விரும்புகிறார்கள் என்று சப்பைக் கட்டு வேறு !
ஒரு ஹோட்டலில் பிரியாணி மட்டுமே கிடைக்கிறது என்றால் மக்கள் அதைத் தான் சாப்பிடுவார்கள். மக்கள் சாப்பிடுகிறார்கள் என்பதற்காக பிரியாணி மட்டும் தான் மக்களுக்குப் பிடிக்கும் என்பது முட்டாள்தனமான வாதம் இல்லையா ? ஹோட்டலில் எல்லா வகை உணவுகளும் பரிமாறுங்கள், அப்போது தெரியும் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பது.
காந்தியடிகள் அஹிம்சையைப் போதித்தார். ஆனால் இன்றைய திரைப்படங்களில் வில்லன் ஹீரோவுக்கு நாலு அடி கொடுத்தால் ஹீரோ திருப்பி அடித்தாக வேண்டும். குறைந்த பட்சம் எட்டு அடி அடித்தால் தான் ரசிகக் கூட்டத்தின் வேகம் அடங்கும். இல்லையேல் புஜம் உயர்த்தி டைரக்டரை சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்வார்கள். மக்களுக்கு அஹிம்சை பிடிப்பதில்லை. அஹிம்சையைப் போதிக்க வேண்டுமென்றால் கூட ஆயுத்தத்தால் தான் அதைச் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
ஒரு மாணவன் தேர்வுக்காக மாடு பற்றிப் படித்துக் கொண்டு போனான். ஆனால் கேட்கப்பட்டதோ பனை மரத்தைப் பற்றிய கேள்வி. என்ன செய்ய ? மாணவன் தனக்குத் தெரிந்த மாடு புராணத்தைப் பக்கம் பக்கமாய் எழுதினான். கடைசியில், அந்த மாட்டை இந்தப் பனை மரத்தில் தான் கட்டுவார்கள் என எழுதி முடித்தான். அதே போல தான் இன்றைய திரைப்படங்கள். வன்முறையை மூன்று மணி நேரம் காட்டி விட்டு, கடைசிக் காட்சியில் ‘இப்படிப் பட்ட வன்முறை வேண்டாம்பா’ என மெசேஜ் சொல்லி முடித்து விடுகிறார்கள்.
திரைப்படங்களில் சண்டைக்காட்சி இருக்க வேண்டும் என்பதில் எதிர்ப்பு இல்லை. ஆனால் சண்டைக்காட்சிகளே திரைப்படமாய் மாறிவிடக் கூடாது. ஒரு போராட்டம், போர்க்களம் எல்லாம் இருந்தாலும் அந்தத் திரைப்படம் சொல்லும் மையச் செய்தி என்ன என்பதே முக்கியம்.
இன்றைய சமூகத்தில் அன்பே முக்கியமாய்த் தேவைப்படுகிறது. கட்சிகளெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு தங்களை புனிதப்படுத்தவும், எதிராளிகளை காயப்படுத்தவும், எதிர்ப்போரை பலவீனப்படுத்தவும் திரைப்படங்களை எடுத்துக் குவிக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் உணர்வைத் தூண்டி விட்டு சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கிறது. நமக்குத் தேவை அன்பு. அத்தகைய அன்பைப் போதிக்கும் திரைப்படங்களை சமூக வீதியில் உருவாக்கலாம்.
அன்பைப் போல நமக்குத் தேவையான இன்னொரு விஷயம் சகிப்புத் தன்மை. இந்த நவீன யுகம் ஒரு ஃபாஸ்ட் லைஃப் கலாச்சாரத்துக்குள் நுழைந்து விட்டது. ஹோட்டலில் ஆர்டர் செய்து விட்டு நான்கு நிமிடம் பொறுமை காக்க முடியாத தலைமுறை உருவாகிவிட்டது. வங்கியில் வரிசையில் நின்று, டோக்கன் வாங்கி, ஆயிரம் ரூபாய் எடுக்க அரைநாள் செலவிட்ட காலங்களெல்லாம் மலையேறிவிட்டன. எதுவும் வினாடிகளில் முடியாவிட்டால் டென்ஷனாகிவிடுகிறது இளம் தலைமுறை. அவர்களுக்கு சகிப்புத் தன்மையையும், பொறுமையும் போதிக்கின்ற திரைப்படங்கள் தேவை.
சமூக நீதி இன்றைக்கு காணாமல் போய்விட்டது. சமூகத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போர்தொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. அவர்களும் சக மனிதர்களே எனும் அக்கறை உருவாக வேண்டும். அத்தகைய சிந்தனையை உருவாக்குகின்ற திரைப்படங்கள் வரவேண்டும். இப்படி திரைப்படங்கள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற சிக்கல்களை அடையாளப்படுத்தவும், அதற்கு எதிராய் மக்களை ஒன்றுதிரட்டவும் பயன்படவேண்டும். அல்லது திரைப்படங்கள் மனிதத்தின் தேவையை அடையாளப்படுத்தி, மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு,‘யாரு வெட்டுனாலும் அருவா வெட்டும்டா’,‘என்னோட அருவா இரத்த ருசி பாக்காம அடங்காதுடா’, ‘என் துப்பாக்கி உன்னைத் தூங்க விடாதுடா’ என்றெல்லாம் வீர வசனம் பேசித் திரிவதில் அர்த்தமில்லை. திரைப்படங்களா இல்லை அவை கொலைக்களங்களா எனும் சந்தேகமே வருகிறது.
ஆண்கள் என்ன எப்போதும் கத்தியும், கடப்பாரையும் தூக்கிக் கொண்டு தான் திரிகிறார்களா ? அவர்கள் பொறுப்பான பெற்றோராக, பணிவான பிள்ளைகளாக, கண்ணியம் மிக்க இளைஞர்களாக, கடமை மிக்க கணவர்களாக எப்படியெல்லாமோ வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆயுதம் அலர்ஜி !
திரைப்படங்கள் அதீத வன்முறையைக் காட்சிப்படுத்தும் போது பல சிக்கல்கள் உருவாகின்றன. முதலில் அது இளைஞர்களைப் பாதிக்கிறது. அதைப் போல செய்து பார்க்க வேண்டும் எனும் அபத்தமான சிந்தனையை அது இளையவர்களுக்குத் தருகிறது. இப்படிச் செய்வது தவறில்லை எனும் தோற்றம் உருவாகிறது. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை அவர்கள் பார்க்கும் போது, ‘இதெல்லாம் சாதாரணம், இதெல்லாம் இயல்பு’ எனும் சிந்தனை அவர்களுக்கு வந்து விடுகிறது. அது அவர்களுடைய அடிப்படைக் குணாதிசயத்தையே மாற்றி விடுகிறது.
திரைப்படங்கள் வன்முறையைப் பயிற்றுவிக்கும் பாடசாலைகளாக இருக்கக் கூடாது. திரைப்படங்கள் குற்றங்களைக் கற்றுக் கொடுக்கும் கல்வி நிலையங்களாக இருக்கக் கூடாது. அவை சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். சமூக மக்களுக்குத் தேவையான விஷயங்களை கலை வடிவில் ரசிக்கும் படியாகத் தர வேண்டும்.
திரைப்படங்கள், வெறும் படங்களல்ல. வாழ்வியல் பாடங்கள். கவனமாய்க் கையாண்டால் அறுவடை நிச்சயம். இல்லையேல் அழிவுகள் சர்வ நிச்சயம்
1,078 total views, 4 views today