நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும்.
பாலியல் வன்முறை
கௌசி.யேர்மனி
ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் என வரன்முறைகள் தாண்டிப் பாலியல் வன்முறை சகல இன மக்களிடையிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு ஆணா, பெண்ணா, சமுகமா காரணம் என ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆண்களை ஆண்கள் வன்முறைக்கு உட்படுத்துவது பற்றி எவ்வித விபரங்களும் வெளியிடப்படுவதில்லை. தற்காலத்தில் பெண்களைக் குழந்தைகளை ஆண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதுதான் பெரும்பாலும் பேசப்படுகின்றது. அத்துடன் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதும் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன. இணையங்கள் தகவல்களை வெளிப்படுத்துவதனால், இந்த வன்முறைகள் இக்காலத்தில்தான் நடக்கின்றன என்று பலவாறாகப் பேசுகின்றார்கள். ஆனால், பெண்களை ஆண்கள் மனதாலும் உடலாலும் வன்முறைக்கு உட்படுத்துவது இன்று நேற்று வந்தது அல்ல என்று இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றெனன் அவன்கைவிட் டனனே
என்ற வரிகள் தெருவில் தன் தாயுடன் ஒரு பெண் நடந்து செல்லும் போது அவளுடைய கையை ஒரு ஆடவன் பிடித்து இழுத்து வன்முறைக்குட்படுத்துகின்றான். அந்த நேரத்திலே அம்மா என அவள் கத்துகின்ற போது அவளுடைய கையை விட்டுவிடுகின்றான்.
கள்ளுரிலே வாழுகின்ற ஒரு பெண் தன்னுடன் ஒன்றாகக் கூடி இன்பம் அனுபவித்துவிட்டு அப்படி செய்யவில்லை என்று கூறிய ஆண்மகனை சபையோர் முன் நிறுத்தினாள். அப்போது அவனும் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.அப்படி செய்யவில்லை என்று பொய்யுரைக்கின்றான். இந்த சந்தர்ப்பத்திலே உண்மையை விசாரித்தறிந்த பெரியவர்கள், அவனை மரத்தில் கட்டி நன்றாக சுடப்பட்ட கடற்சிப்பிகளை மண்தொட்டியில் போட்டு அதிலே உப்பில்லாத ஆற்று நீரை ஊற்றுகின்ற போது அது நன்றாகக் கொதித்து வெண்ணை போன்ற நிறத்திற்கு வரும். இந்த நீரைத் தலையில் ஊற்றித் தண்டனை கொடுத்ததாகவும் கூடி நின்றோர் ஆரவாரம் செய்ததாகவும் அகநானூறு 256ஆவது பாடல் வரிகள் எடுத்துக் காட்டுகின்றது.
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளுர்த்
திருநுதற் குறுமக ளணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியே னென்ற
திறனில் வெஞ்சூ ளறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசா லவையத்து ஆர்ப்பினும் பெரிதே.
இதிலிருந்து அக்காலத்தில் பொய்மை தழுவிய ஆண்மகனைப் பலரும் கூடி ஆர்ப்பரித்துத் தணடனை வழங்கியிருக் கின்றனர். ஆனால், இன்று இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் 5 நட்சத்திர சொகுசு விடுதி போன்ற சிறையிலே அடைத்துத் தண்டனை வழங்குகின்றார்கள். தண்டனையின் தாக்கத்தைப் பொறுத்தே தவறுகளின் வீரியமும் குறையும்
பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றார்கள். அதன் பின் தலைவன்; அவளைத் திருமணம் செய்வதற்கு நாளைத் தள்ளிக் கொண்டே போகின்றான். ஆனால் அவனை ஊரறித் திருமணம் செய்ய நினைத்த தலைவிக்கு அவனில் சந்தேகம் ஏற்படுகின்றது. ஒருவேளை தன்னை அவன் ஏமாற்றிவிட்டால் என்ற அச்சத்திலே தோழியிடம் இவள் புலம்புவதாகக் கபிலர் இந்தப் பாடலை பாடியிருக்கின்றார்.
யாரும் இல்லைதானே கள்வன்தான்
அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
நாங்கள் இன்பம் துய்த்த இடத்திலே சாட்சிக்கு யாரும் இல்லை. குருகு தான் இருந்தது. ஆனால், அதுகூட ஒழுகி ஓடுகின்ற நீரில் ஆரல்மீனைப் பிடிக்கும் வேலையில் கவனமாக இருந்தது. தலைவன் தன்னைப் புணர்ந்ததைத் கண்டிருக்காது. கண்டாலும் அதனால் பேசமுடியாது. அவன் மனம் இரங்கி என்னை மணம் செய்தாலன்றி வேறு வழியில்லை என்று புலும்புவதாக இப்பாடல் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு பெண்களை நம்பி ஏமாற்றிய பல பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
தொல்காப்பியர் பெருந்திணையிலே
ஏறிய மடற்றிறம் இளமை தீர்த்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே என்கிறார்.
ஒருத்தியின் காதலைப் பெறுவதற்காக மடலேறி அவளைத் திருமணம் செய்தல். நான் இதை மடலேறுதல் என்னும் கட்டுரையிலே பெண்ணை மிரட்டித் திருமணம் செய்யும் ஒரு சூழ்ச்சி என்று எழுதியிருந்தேன். இளமை தீர்த்திறம் என்றால், தனக்கு இளமைப் பாலியலுணர்வு நீங்கிய மலட்டு நிலையிலும் ஒருத்தியைப் பாலியலாகத் துன்புறுத்துதல், அத்தோடு பிறன் மனைமீது தேற்ற முடியாத காமத்தில் வேட்கையுறுதல், மிக்க காமத்தில் காணும் பெண்களிடமெல்லாம் வன்புணர்ச்சியை விரும்புதல் இவையெல்லாம் பெருந்திணையின் இலக்கணம் என்று தொல்காப்பியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்’ எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று
என்று தொடரும் பாடலிலே
ஏ இவன் ஒருவன் கொஞ்சமும் வெட்கம் இல்லாதவன் அவனை விரும்பவில்லை என்று சொல்பவரையும் விரும்பியவனாகக் கையைப் பற்றி இழுக்கிறான் என்பதற்கு அவன் சொல்கிறான் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். அது எனக்குத் தெரியாது. பூத்திருக்கும் கொடி போன்றவள் நீ. உன்னைத் தழுவினால் எனக்கு இன்பமாக இருக்கிறது. அதனால் அணைத்துக்கொண்டேன் என்றும், தண்ணீர் தாகம் எடுத்து தண்ணீர் குடிப்பவர்கள் தண்ணீரைக் குடிப்பதால் தனக்கு இனிமையாக இருக்கிறது என்றுதான் குடிப்பார்களே அன்றி தண்ணீருக்கு இனிமையாக இருக்கும் என்று நினைத்துக் குடிக்க மாட்டார்கள் என்று கூறும் ஆண்மகனின் வன்முறையும் இப்பாடலில் எடுத்துக் காட்டப்பட்டு;ள்ளது.
இவ்வாறான வாழ்வியல் முறையில்;
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
என பொய்யையும் பிழையையும் கண்ணுற்றதன் பின்தான் திருமண முறை எம்மிடையே வழக்கத்தில் வந்தது.
எனவே அன்று இணையம் இல்லாத காரணத்தால் பாடல்களே மனித மனங்களில் பாலியல் வன்முறையில் மாற்றமில்லை என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
917 total views, 3 views today