ஆற்றங்கரையில் நான் வாசித்த புத்தகம். 01
நம்பிக்கைத் துரோகங்கள்.
ஆற்றங்கரை ஓரம், நல்ல வெய்யில், ஒய்யாரமாக இருந்து பலர் மீன்பிடிக்க தூண்டில் போட்டு காத்து இருக்கின்றனர். எவரும், மனைவியுடனோ , காதலியுடனோ , நண்பர்களிடமோ தொடர்பில் இல்லை.
எப்படி இவ்வளவு திடமாகச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?
நான் ஒருமணி நேரம் ஆற்றங்கரையில் நடக்கிறேன், ஒருவர் கையிலோ , கழுத்து இடுக்கில் போன் இல்லை.
அவர்களது பொழுது அவர்களுக்காகவே விடிந்துள்ளது. பாதிப்பேர் வீட்டை விட்டு விலத்தி இருக்கவே வந்துள்ளனர்.
ஒருவர் தூண்டிலில் மீன் மாட்டிக் கொண்டது.
தூண்டிலில் மீன் போல் என்று கவிதை, கட்டுரைகளி படித்து இருக்கிறேன்.
அதில் எல்லாம் தூண்டில் மீனின் உணர்வுகளை மனிதன் மீது ஒப்பிட்டு, மனிதர்களின் துடிப்பை உணர்த்தியிருப்பார்கள்.
ஆனால் மீனின் துடிப்பை எந்த மனிதராலும் உணர்ந்திட முடிவதில்லை.
மாட்டிக்கொண்ட அந்த மீன் துடித்து துடித்து, இறுதிவரை போராடுகிறது, அந்த தூண்டிலில் இருந்து தன்னை விடுவிக்க. அது படும்பாடு சொல்ல முடியாது.
மேலும் நடந்தேன்.
தூண்டில் மாட்டிய மீனைவிட அதிகமாக தலையை ஆட்டி, ஆட்டி, துடித்தபடி நின்றார் ஒருவர்.
உற்று நோக்கிய பின்தான் புரிந்தது, அவரது தூண்டில் பிடிபட்ட மீன் துடித்து, துடித்து, தன்னை விடுவித்து மீண்டும் ஆற்றுக்குள் பாய்ந்துவிட்டது.
இதனை பொறுக்க முடியாது அவர் துடிக்கிறார்.
ஒரே நேரத்தில் மனிதனது துடிப்பையும், மீனினது துடிப்பையும், காணும் சந்தர்ப்பம் கிட்டியது.
இதில் கொடுமை என்ன என்றால் மீனுக்கு உண்ண உணவினைக் கொடுத்து உண்ணும் வேளை கொல்வது.
நாய்க்கு எம்மை நல்லவராக காட்ட பக்கத்து வீட்டில் வைத்து, குறி சுடுவதும், நலம் எடுப்பதும், அந்த நாய் பக்கத்துவீட்டார் தனக்கு கொடுமை செய்ததாக எண்ணி அதனை தனது எஜமானுக்கு சொல்லி, கண்ணீருடன், காலடியில் வந்து படுப்பதும், என் வீட்டு சேவலை நாம், உண்ணாது பக்கத்து வீட்டுக்கும், பக்கத்து வீட்டு சேவலை நாமும் மாறி, மாறி அறுத்து உண்பதும்,
நாம் வாழ்வில் கண்ணெதிரில் கண்டு வளர்ந்த நம்பிக்கைத் துரோகங்கள்.
இன்றும் பலரது வாழ்வில் அன்று கற்றவை கைகொடுக்கின்றன, இளமையில் கல்வி சிலையில் எழுத்தல்லவா.
911 total views, 3 views today