நீர் ஓமென்றால் மட்டும்!
- ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்
அன்புள்ள ராசாத்தி,
பரி.யோவானில் படித்த என்னோடு நீர் வாழ்வதால், நீர் எப்போதும் நலமாக இருப்பீர் என்று உமக்கும் தெரியும், உலகத்திற்கும் தெரியும்..
ஆனபடியால், சம்பிரதாயத்திற்காக நீர் நலமா..நான் நலம் என்று கேட்டு உமக்கு அலுப்புத் தர எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை.
இதென்ன புதுப்பழக்கம்.. கடிதம் எல்லாம் எழுதுறீர் என்டு நீர் மண்டைக்குள் யோசிக்கக் கூடும். அந்தக் காலத்தில் நான் உமக்கு எழுதாத கடுதாசியா, நீர் எனக்கு வரையாத மடல்களா.. நாங்க எப்பவும் பழசை மறக்காத தமிழாக்கள் எல்லோ?
சரி.. சுத்தி வளைக்காமல் விஷயத்துக்கு வாறன்..
அடுத்த வரியம் எங்கட batch இற்கு 50 வருது தானே… ஆனபடியால் ஐந்து வரியத்திற்கு ஒருக்கா நாங்க சென் ஜோன்ஸ் பெடியள் போற புனித பயணத்திற்கும் காலம் வந்திட்டு.
இரண்டு வருடம் உம்மோடு மட்டும் நானிருந்த லொக்டவுண் காலங்களை நீர் மறந்திருக்க மாட்டீர், நீர் மறந்தாலும் என்னால கடைசி வரை மறக்கவே ஏலாது.
அந்த லொக்டவுண் பொழுதுகளின் சுமைகளை இறக்கி வைக்கவும், எங்கட டியவஉh பெடியளோடு பம்பலடிக்கவும் போகப் போற.. நீர் ஓமென்டு சொன்னால் மட்டும் போகப் போற.. இந்தப் புனிதப் பயணம் நிச்சயமாக நிவாரணியாக இருக்கும்.
ஜொனியன்ஸ் சேர்ந்தால் குடியும் கும்மாளமும் தான் என்று நீர் கிஞ்சித்தும் யோசிச்சு போடாதேயும். பள்ளிக் காலத்தில் மலர்ந்த புனிதமான நட்பைக் கொண்டாடத்தான் இந்த யாத்திரை நாங்கள் போறம்… நீர் ஓமென்றால் மட்டும் நானும் யாத்திரை போறன்.
அங்க வாற பெடியல் எல்லாம் பக்கா னநஉநவெ ரூ னளைஉipடiநென ஆன பெடியள். எல்லோரும் ஆளை ஆள் கண்டதும் “மச்சாஆஆஆஆன்” என்று கட்டிப்பிடித்து, பழங்கதை கதைக்க குறைஞ்சது நாலு நாலாவது வேணும். அதுவும் காணுமோ தெரியாது…நீர் ஓமென்றால் மட்டும் நானும் நாலு நாள் ஓடிப் போய்ட்டு, பறந்து வாறன்.
இதுக்க ஆகப் பெரிய சிக்கல் என்னென்றால், எங்கட ஸ்கூலுக்கும் அடுத்த வருடம் 200 ஆவது வரியமாம். அதுக்கும் பெரிய கொண்டாட்டம் எல்லாம் நடக்குதாம். எனக்கு அதுக்கெல்லாம் போகத் துண்டற விருப்பமில்லை.. நீர் ஓமென்றால் மட்டும் அதுக்கும் நானும் போறன்.
ஆனா போறது தான் போறன்.. நீர் ஓமென்றா மாத்திரம்.. இன்னுமொரு மூன்று நாலு நாள் நின்டனென்றால் நல்லா இருக்கும் எல்லோ?
அந்த மேலதிக மூன்று நாலு நாளில், எங்களுக்கு சீனியர் அண்ணாமாரையும், ஜூனியர் தம்பிமாரையும் கண்டு கதைக்க சான்ஸ் கிடைக்குமல்லோ? நீர் ஓமென்றா மாத்திரம் நானும் போய் அவங்களையும் சந்தித்திட்டு வாறன்.
ஆனபடியா இவ்வளவு தூரம் போறது தான் போறன், ஒரு கிழமை போட்டு வாறன்… நீர் ஓமென்றா மட்டும் தான்.
திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கும், பள்ளிக்கால நண்பர்களையும் பார்க்கப் போறதை நினைக்க ஒரு பக்கத்தால பெரும் புளுகமாக இருந்தாலும், உம்மை விட்டிட்டு போறதை நினைக்க தான் கவலை கவலையா இருக்கு. நீர் ஓமென்றா மட்டும் போறன்.. இல்லாட்டி பரவாயில்லை.
எனக்கு சத்தியமாக உம்மை கூட்டிப் போகத் தான் விருப்பம்.. ஆனா எங்கட டியவஉh காரன்கள் தான் மனிசி பிள்ளை குட்டிகளை விட்டிட்டு வரோணும் என்று கடும் கொன்டிஷன் போட்டிட்டாங்கள்.. விசரன்கள்..,நான் என்ன செய்ய? நீர் ஓமென்றா மட்டும் நானும் தனியப் போறன்.
இதை வாசிச்சிட்டு, நீர் ஓமென்டுவீர் என்று எனக்கு உள்மனசு அடிச்சு சொல்லுது.
அதோட மட்டுமில்லாமல், நான் போகேக்க நீர் என்னை ஆரத்தி எடுத்து, உச்சி மோந்து, உதட்டில் ஒரு உம்மா தந்து, சிரித்துக் கொண்டே டிலந சொல்லி, ஏயர்போர்ட்டில் கொண்டு வந்து இறக்கி விடுறீர் என்று இன்றைக்கு காலங்காந்தால கனவு வேற கண்டிட்டன்.
காலம்பற கனவுகள் எப்படியும் பலிக்குமாம்.
அந்தக் காலம்பறக் கனவை நம்பி,
உம்மடை அந்த அழகான ஒற்றை ஓமை நம்பி,
பத்து நாளைக்கு இப்பத்தான் டிக்கெட்டை போட்டனான்… டிக்கட்டை போட்டிட்டு தான் உமக்கு கடிதம் எழுதுறன்..
ஆனா ஒன்று ராசாத்தி, இது தான் கடைசி முறை.. இதுக்கு பிறகு நீர் ஓமென்றாலும் நான் போகப் போறதில்லை.
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்
554 total views, 3 views today