விளம்பரங்களும்,அவை ஏற்படுத்தும் விபரீதங்களும்!
-பிரியா.இராமநாதன் . இலங்கை
ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது இந்த நைட்டி தான்
அட எதை எதையோடு தொடர்புபடுத்துவது என்ற விவஸ்தை இல்லையா?
விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான உத்திகளைக் கையாள்வது இதற்கு முக்கிய காரணம். வித்தியாசமான கரு,படப்பிடிப்பு,உறவுகளை மையப்படுத்தி மனதைத்தொடும் விளம்பரங்கள், குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள் என திணுசுதிணுசாய், புதுசுபுதுசாய் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. இன்றைய முன்னணி கதாநாயகன், நாயகிகளில் பலர் விளம்பரங்களில் முகம் காட்டிய பின்புதான் திரையுலகில் கொடி நாட்டுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் பல ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்த ஐஸ்வர்யா ராயின் பெப்சி விளம்பரமே. (இதற்குப் பின்னாளில்தான் அவர் உலக அழகியாகி ஒரு நடிகையுமானார் என்பது நாம் அறிந்தவொன்றே ) மேலும் நடிகர் ஆர்யாவின் “emerald shirt” விளம்பரமும் குறிப்பிடத்தக்கது!
அது ஒரு ரகம் என்றால் விளம்பரங்களைப் பிரபலப்படுத்த பிரபலமான நபர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் கதாநாயகன், நாயகிகளைத் தேடிப் பிடித்து நடிக்க வைப்பது இன்னொரு ரகம். இந்தப் பிரபலங்களின் தாக்கத்தால், நிறுவனத்தின் பொருள்களை நினைவில் வைக்கும் காலம்போய், பிரபலத்தைக் கொண்டு நிறுவனத்தை நினைவு கொள்ளும் காலம் வந்தாயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைய வர்த்தகத்துறையின் முதுகெலும்பாக இருப்பது எது என்ற கேள்வி எழுமாயின், பதில் “விளம்பரங்கள் ‘ என்றுதான் வரக்கூடும். அந்த அளவுக்கு விளம்பரங்களின் தந்திரங்களை வைத்தே பொருட்களின் விற்பனை நிர்ணயிக்கப்படுகிறது. ஊடகங்கள் வாயிலாக மக்களை எளிதில் சென்றடையும் நிலையில் இன்றைய விளம்பரங்கள் இருப்பதாலும்,கடுமையான வர்த்தகப்போட்டி நிகழ்வதாலும் இன்றைய விளம்பரங்கள் புதுப்புது வசீகர சிந்தனகை களைக் கொண்டதாக புதுமைகளை நோக்கிய அதன் பயணத்தை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது எனலாம்.
“விளம்பரம் செய்யாமல் பணத்தை சேமிப்பவன் கடிகாரத்தை நிறுத்திவிட்டு நேரத்தை சேமிக்கும் மூடனுக்கு ஒப்பாவான்”
எனும் ஆங்கில முதுமொழிக்கேற்ப இன்றைய வர்த்தக உலகம் விளம்பரங்களின் விரல்களைப் பிடித்துக்கொண்டே ஒவ்வொரு நொடியையும் கடக்க வேண்டியிருக்கின்றது. சற்று ஓய்வெடுத்தாலும்கூட அந்த இடத்தினை அபகரிக்க ஏராளமான போட்டிப்பொருட்கள் சந்தையில் உலவிக் கொண்டிருப்பதால்,உலகின் முதன்மையான அத்தியாவசியமான பொருட்களுக்குகூட விடாது விளம்பரம் செய்யவேண்டியிருக்கிறது எனலாம். இவ்வகையில் இப்படியான புதுப்புது வசீகர சிந்தனையில் வெளிவரும் புதுமையான விளம்பரங்களின் வேகத்தில் நுகர்வோருக்கு எது உண்மையான விளம்பரம், எது தவறான முடிவுகளுக்கு தம்மை இட்டுச் செல்கிறது எனக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாகியுள்ளது. இன்றைய நவீன உலகில் விளம்பரம் எனப்படுபவை காலத்தின் அவசியம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள், வாகனங்கள் என்பவை தாண்டி மருத்துவப் பொருட்கள்வரை அத்தனையும் விற்கப்படவேண்டுமாயின் அவையனைத்தும் முதலில் பெண்களைக் கவரவேண்டும் என்ற உளவியல் ஒன்றிருக்கிறது போலும். இந்த உளவியல் அன்று தொட்டு இன்றுவரை எந்த அளவில் எப்படிக் கையாளப்பட்டு வருகிறது என்பது பற்றியே இந்தக் கட்டுரை .
விளம்பரங்கள் இன்று வரம்பு மீறுவது கவலை அளிப்பதாக உள்ளது. அதில் சில விளம்பரங்களில் பெண்கள் மோசமாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.வாசனைத் திரவியங்கள், ஆண், பெண்களின் உள்ளாடைகள், கார், பெயின்ட் என அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறை ஆடைகளில் காண்பிப்பது ஏன்? அதற்கு அவசியம் என்ன வந்தது? என்பதுதான் லட்சோப லட்ச மக்களின் கேள்வி! குறிப்பிட்ட வாசனை திரவியத்தையோ அல்லது விளம்பரங்களில் காண்பிக்கப்படும் பொருளையோ, ஒரு ஆண் உபயோகிப்பதன் மூலம் அனைத்து இளம் பெண்களும் அவரது பின்னால் வருவதைப் போன்றும்,அல்லது ஒரு ஆண், பெண்களை மயக்குவதற்காகவே குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள்களை உபயோகிப்பது போலவும் காண்பிக்கப்படுகிறது.
ஒரு ஆணை அவர் பயன்படுத்தும் வாசனை திரவியத்துக்காகவே பெண்கள் அவரை விரும்புவார்களா? அல்லது அவர் பின்னே செல்வார்களா? இங்கு பெண்களின் மதிப்பு எந்த அளவுக்கு தரம் தாழ்த்தப்படுகிறது? “ஒவ்வொரு பெண்ணுக்கென்றும் ஒரு தனித்தன்மை,ஒரு யதார்த்தமான ஆளுமை இருக்கிறது. ஆனால் விளம் பரங்கள் இந்த ஆளுமையை மாற்றியமைத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும் தன்மை வாய்ந்தவை ” என்கிறார் விளம்பரங்களில் பெண்களின் நிலை பற்றிய ஆராய்ச்சியாளரான “jean kilbourne ” என்ற பெண். அது எப்படி என்பதற்கு சில உதாரணங்கள், ஒரு ஷேவிங் க்ரீம் விளம்பரம். ஒரு அழகான இளம்பெண் ஒரு இளைஞனுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறாள், அவனது தாடை சரியாக சவரம் செய்யப்படாது சொர சொரப்பாக இருப்பதைக் கவனித்து முகம் வாடுகிறாள், உடனே அந்த தருணத்தில் சுத்தமாக ஷேவிங் செய்யப்பட்டு பளிச் என்று அந்த அறைக்குள் நுழையும் ஆடவனைக் கண்டு சொரசொரப்பான தாடை இளைஞனை தள்ளிவிட்டுவிட்டு இவனுடன் ஒட்டிக்கொள்கிறாள். அட ஒரு ஷேவிங் க்ரீமுக்காகவா இப்படி ? கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு முன் உள்ள இளைஞன் தனக்கு மைதானத்தை மறைக்கிறான் என்பதனால் அவன்மேல் perfume அடித்துவிட அவனை பெண்கள் பட்டாளம் மொய்த்து தனியே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். பின் இவன் மைதானத்தை நன்கு வேடிக்கை பார்க்கிறான். இதைவிட பெண்களை கொச்சைப்படுத்த முடியுமா?
அனைத்தும் க்ரீம் விளம்பரம்களுமே கருப்பாய் இருப்பது பாவம் என்பதுபோலவும், அது ஒரு குறைபாடு என்பதுபோலவும்,கருப்பாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை அற்றுப்போவார்கள் என்பதாகவுமே காட்ட முனைவது ஏன்? “நீ கருப்பாக இருக்கிறாய் அதனால் தன்னம்பிக்கை இல்லாது இருக்கிறாய், மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாக நாட்டுக்கும் இந்த நாட்டு ஆண்களுக்கும் அவசியம் என்பதுபோல தினமும் நாம் கண்ணுறும் விளம்பரங்கள் எத்தனை எத்தனை? ஓர் இளம்பெண், அவள் கருப்பாக இருக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு வயதான அழகற்ற ஓர் நபருடன் அவள் திருமணம் அவளது விருப்பத்துக்கு மாறாக நிச்சயிக்கப்படுகிறது. அவளது முக வாட்டம் கண்ட அவளது பாட்டி ஆயூர்வேத மூலிகையடங்கியதாக காட்டப்படும் பெயாரன் லவுளியை அப்பெண்ணின் கைகளில் திணிக்க, அதைப் பூசும் அவ்விளம்பெண் சில வாரங்களிலேயே சிவப்பழகு பெற்று, வேறு ஒரு அழகான இளைஞனின் காதல் பார்வையில் சிக்கி அவனையே திருமணம் செய்து கொள்வதாய் காட்டும் ஒரு விளம்பரம் நம் இளைஞர்கள் மத்தியில் விதைக்க விரும்புவது எதை? ஒரு நைட்டி விளம்பரம் இதில் நடிகையும் குடும்பத்தலைவியுமான தேவயாணி சொல்லுவார் “ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது (பொம்மீஸ் நைட்டி ) நைட்டி தான் “அட பாவமே,எதை எதையோடு தொடர்புபடுத்துவது என்ற விவஸ்தை இல்லையா? ;இப்படி அனுதினமும் தொலைக்காட்சியில் தோன்றும் அழகான மாடல்களைப் பார்க்கும் பெண்களுக்கு,தமது இயல்பான தோற்றத்தின்மீதும் கவர்சியின்மீதும் அதிருப்தி ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதவொன்றாகிப் போககூடுமே? அழகு ..அழகு .. அழகு மட்டும்தானா பெண் ? இதுதவிர ஓர் பெண்ணிடமிருந்து எதிர்பார்க்க வேறு எதுவுமே இல்லையா? ஒரு பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற மீடியா ஏற்படுத்திய ஓர் பிம்பதினுள் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பொருத்திக்கொள்ள முயல்கிறாள். எனவே விளம்பரங்களின் நோக்கம் எதுவானாலும், அது சமூக கட்டமைப்புக்கு பங்கம் விளைவிப்பதாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம் .
737 total views, 3 views today