‘ எனக்கு மட்டும் ஏன் இப்படி? ’ இதுவும் கடந்து போகும்
-கரிணி – யேர்மனி
பன்னிரண்டு இலக்கங்களை பொறித்து ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம். வாழ்வின் முன்னும் பின்னும் உற்றுப் பார்த்தால் அட! அத்தனையும் கால வெள்ளத்தில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை உணவு உட்கொண்டாலும் மறுபடி பசியும், தேடலும், ஓடலும், அழைக்காமல் வரும் வயோதிபமும், பூத்தது காயாவதும் பின் கனியாவதும், காலத்தால் வற்றி கருகி விதையினின்றும் பின் வீரியமாக முளைத்தெழுதலும் என எவையும் அதேநிலையில் நிறுத்தி வைக்கப் பட முடியாதவை. நடப்பட்ட கருங்கல் கூட மிக நுணுக்கமாக வளர்ந்துகொண்டே செல்கிறது. எதுவும் இங்கு ஒரேமாதிரி நிலைத்திருப்பது இல்லை எனலாம்.
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் இறந்தகாலம், நிகழ்காலம் என்றோ, சொர்க்கம், நரகம் என்றோ எதுவும் தெரியாது. அவை நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்கின்றன. எதைப்பற்றியும் கற்பனைக்கனவுகள் அவை காண்பதில்லை. பயம் என்பதே நடக்க போவதாக நினைக்கும் ஒரு சம்பவத்தை பற்றிய கற்பனையே. பெரும்பாலும் கற்பனைக்கு மாறாகவே நிகழ்கின்றன. எனவே கற்பனையால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக அனுபவித்த வலி தாமே தமக்கு வீணாக ஏற்படுத்தி கொண்டதை விட வேறென்ன?
மிகப்பெரும் பள்ளத்தில் வீழ்ந்து விட்டாலோ, ஆபத்தில் சிக்கி விட்டாலோ பயந்து பதறுவதால் எண்ணங்கள் தாறுமாறாக வேலைசெய்து தன் சக்தியை இழந்து சோர்வைத் தந்துவிடும். அந்த சோர்வே நிலமையை இன்னும் மோசமாக்கிவிடும். மாறாக பதற்றமடையாமல் அந்நிலையிலிருந்து தப்பிக்க அடுத்து என்ன செய்யலாம் என நிதானமாக சிந்திக்கும் போது பல வழிகள் உருவாகுவதுடன் உடல், மனதின் தேவையற்ற சக்தியிழப்பையும் கட்டுப்படுத்தலாம்.
எம் மகிழ்ச்சிக்கான திறப்பு எம்மிடமே இருக்க வேண்டும். மாறாக உணர்வுகளின் கொந்தளிப்பால் அர்ப்பணிப்பு எனும் பெயரில் இன்னொருவரின் கையில் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நபரின் சிறு புறக்கணிப்பு கூட எம் மகிழ்வின் சமநிலையோடு விளையாடிவிடும். உணர்வுகளின் இணைப்புக்கள் உடல்மனநிலையை பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது.
“கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியை தருவதில்லை மாறாக வைரக்கற்களின் புறக்கணிப்பு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் இது மனதின் உயர்வு தாழ்வு என்ற மனப்பான்மையினால் விளைவது. பிறரை தாழ்வாக கருதும் போது உன்னை நீயே உயர்வாகவும், பிறரை உயர்வாக கருதும்போது தாழ்வுமனப்பான்மையினால் உன்னை நீயே தாழ்வாக கருதும் வேளையில் உண்டாகும் புறக்கணிப்பு வலியைத் தருகின்றது. இங்கு பெரும் சூரியனும், சிறுபுல்லும் இயற்கைக்கு சமமாகவே உள்ளன. எனவே உன்னை நீயே உயர்வாக கருதுவதால் புறக்கணிப்புகளை கடந்து செல்ல முடியும்.”என்கிறார் ஓஷோ
இங்கு கொடுக்கப்பட்டது ஒரு வாழ்க்கை. இந்த வாழ்க்கை எனும் சந்தர்ப்பம் எமக்கு மட்டுமல்ல எதிரே இருப்பவர்களுக்கும் மகத்துவமானதுதான். இந்த வாழ்வை எனக்காக வாழ்வதற்கே பிறந்திருக்கின்றேன் என்பது வாழ்வின் பிரதான நோக்கமாக கொள்ளல் வேண்டும். மற்றும் இவ்வுலகில் எத்தனையோ மூதாதையர்கள் முன்பு வந்து சென்றுள்ளனர். அவர்களை நாம் கண்டதில்லை. சம காலத்தில் இவ்வுலகில் வாழும் எல்லோரும் பிற்காலத்தில் வந்து சென்றுவிட்ட மூதாதையர்கள் தான். எனவே ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பை பகிர்ந்துகொண்டு நாமும் வாழ்ந்து மற்றவர் வாழ வழிவிடுதல் வேண்டும். ஒரு மனிதனுக்கான சுதந்திரத்தை வழங்கும் போதுதான் அவனுக்கான பரிணாமத்தை அவன் அடைய முடியும்.
இந்த பழைமை வாய்ந்த உலகில் எத்தனை மனிதர்களை எமக்குத் தெரியும், எத்தனை மனிதருக்கு எம்மைத் தெரியும். குறைந்தபட்ச பரீட்சியமே ஒவ்வொருவருக்கும் இருக்கும். இந்த உலகின் பிரபலங்களைக்கூட அறிந்திராத பூர்வ குடிகள் சேர்ந்து வாழுகின்றனர். அப்படியிருக்க மானம், மரியாதை போய்விட்டதே என்று தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது எத்தகைய முட்டாள்த்தனம். தன்னம்பிக்கையை இழக்காதவிடத்து யாரையும் யாரும் அவமானப்படுத்த முடியாது. தவறுகளும், சோதனைகளும் படிப்பினையை தந்து செல்வது மறுபடி விழிப்புணர்வுடன் நல்வழியில் நடந்து கொள்வதற்காகவே அன்றி கிடைத்தற்கரிய வாழ்வை சிதைப்பதற்கல்ல. எல்லாமே மாறிப்போய்விடும். அப்போது தற்போதைய மனநிலையும் மாறிவிடும்.
வெற்றியும், தோல்வியும் பகலும் இரவும் போல. இரவுப் பொழுதில் அமைதியாக படுத்து ஓய்வெடுப்பதைப் போல தோல்வியின் போது பொறுமையோடு அது தந்த பாடத்தை நினைவில் நிறுத்தி பகல் பொழுது என்ற ஒன்று உண்டு என மறவாது தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். அது போன்று வெற்றியின் போது துள்ளிக் குதிக்காமல் அடக்கமாக அதனை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் எந்த விடயத்திலும் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்ளாமல் அமைதியை கடைப்பிடித்தால் எந்த உணர்வாலும் நாம் தாக்கப்பட மாட்டோம். வெற்றி தோல்வி, இன்பம் துன்பம், பகல் இரவு, வரவு செலவு, தூக்கம் விழிப்பு போன்ற இருமையின் தொகுப்பே இந்த வாழ்வு.
‘நான் எப்பேர்ப்பட்டவன்’ என்ற அகந்தை மற்றும் ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்ற தாழ்வுமனப்பான்மை இரண்டையும் களைந்து விட்டாலே வாழ்வில் விழும் அடிகள் அவமானத்தையோ, விரக்தியையோ தருவதில்லை. தோல்விகள் மூலம் அனுபவத்தால் பெறும் தெளிவை எந்த ஒரு உபதேசமும் முழுதாக தந்துவிடுவதில்லை. தேவைகளை குறைத்துக் கொண்டவர் வாழ்வில் நிம்மதிக்கு குறைவுகள் இருப்பதில்லை.
எல்லா விடயங்களும் நினைப்பது போல் இல்லை, அவை எல்லாவற்றையும் மாற்றிவிடுவது சாத்தியமும் இல்லை. அத்தனை விடயங்களும் எமக்காக மட்டும் நடப்பதில்லை ஆயினும் எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. எனவே அமைதியாக இருப்பது நல்லது. ஆனால் அதற்காக அதனுள் இறங்கி வாழ்வின் பயணத்தை மேற்கொள்ளாமலும் விட முடியாது. செய்யவேண்டியது என்னவெனில் எப்பொழுதும், எச்செயலிலும் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். காரணம் இல்லாமலும், காரணம் இருந்தாலும் கவலை கொள்ளக் கூடாது. துன்பங்களோ, அந்த துன்பத்தை தந்த விடயங்களோ எதுவும் நிரந்தரமில்லை. இன்பத்திலும், துன்பத்திலும் நாம் மறந்துவிடக் கூடாதது இதுவும் பரிமாணம் அடையும் என்பதையே.
எதுவும் கடந்து போகினும் மறந்து போவது பலருக்கு கடினமாகவே உள்ளது. மனதை பலவீனப்படுத்தும் விடயங்களை சேகரித்து வைப்பதனால் இன்னும் அதன்பால் ஈர்க்கப்படுவார்கள் என்பதனால் அவற்றை தூக்கியெறிந்துவிட்டு புத்துணர்வு தரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும். எம்மை நாமே புறக் கணிப்பதை விட்டு எம்மை பலவீனப்படுத்தும் விடயங்களை புறக்கணிக்க வேண்டும். இதோ இப்பிறப்பில் ஒவ்வொரு பிறப்பும் மிகமிக நுணுக்கமானதும், பெறுமதி மிக்கதுமாகும். எம் இப்பூமிக்கான வருகையினை உரிய வகையில் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். மறக்க கூடாத மந்திர வார்த்தை “இதுவும் கடந்து போகும்”
இன்பமோ துன்பமோ எம்மை சிறிதளவும் பாதிக்கவே கூடாது எனில் வேறு வழியில்லை திருவள்ளுவர் கூறியபடி “ வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இறைவனை எந்த ஆசைகளுமின்றி பற்றிக்கொள்வதனால் எந்த துன்பமும் அணுகுவதில்லை.
860 total views, 3 views today