செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

என காயத்திரி மந்திரத்தைத் தமிழில் தந்த பாரதி சூரியனைப் போற்றிப் பாடிய கவிதைகளின் சில தொகுப்பினை முன்னைய கட்டுரையில் வரைந்திருந்தேன். சூரியனை மட்டுமல்ல மொத்த சூரிய மண்டலத்தினையே போற்றித் துதித்து ரசித்துக் களித்தவர் பாரதி.

ஸ{ர்ய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’
என்று தம் கட்டுரையில் வலியுறுத்தும் பாரதி,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைப் பருவத்தில் இருந்தே விண்ணைப் பற்றிய அறிவினைப் பெற வேண்டும் என்று மிகுந்த எண்ணம் கொண்டார். அதனை மிக அழகாக “கண்ணன் என் தாய்“ என்ற பாடலிலும் குறிப்பிடுகிறார்.

விந்தைவிந்தை யாக எனக்கே – பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை – அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் – பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு – அதன்
முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. … 3

வானத்து மீன்க ளுண்டு – சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிட வே-மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை

ஒரு தாய் தன் குழந்தைக்குப் புதிதாக ஒரு பொருளை அறிமுகப்படுத்தும் போது “இந்த பொம்மையைப் பார் ” , “அந்த பொம்மையைப் பார்” என்று மிகுந்த களியுடனும் வியப்புடனும் அறிமுகப்படுத்தும் தாய்மையின் தனித்துவ அழகிற்குள் சூரியக் குடும்பத்தை அறிமுகப்படுத்தும் பாங்கினை கவிதைக்குள் பொதிந்திடும் பேரழகினை அறிந்த பாரதியை என்னென்று சொல்வேன் ஒரு தாயாக?

‘வானையளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” (பாரத தேசம் – 11)
கண்டு தெளிவோம்” ஆக, மானுடர்க்குத் தேவையான தெளிவினைத் தரவல்ல விடயங்களைக் காட்டி நிற்கிறது இந்த சூரியக் குடும்பம் என்று பாரதி உணர்ந்தார். அதனால் தான் சிறு வயதில் இருந்தே அவற்றோடு இணைத்திடச் செய்கிறார்.
ஆஹா இந்த வானுக்கு தான் எத்தனை விசாலம் ? கொட்டி கிடைக்கும் அழகில் குறும் சிரிப்பனைய நட்சத்திர கூட்டங்கள். சேர்ந்தே இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தே ஜொலிக்கிறது. தனைத் தான் ஆளும் தன்மை பெற்றுக் கிடக்கின்றதோ அந்த விண்மீன்கள் ?
விட்டு விட்டு சிரிக்கும் அழும் பிள்ளை போல் ஒன்றும், கண் ஜாடையால் தொட்டணைக்கும் பருவ மங்கை போல் ஒன்றும், மன்னவனுக்காய் காத்திருக்கும் மங்கையவளின் இதயத்துடிப்பை போல் ஒன்றும், பொத்தி வைத்த ரகசியத்தை சொல்லத் துடிப்பது போல் ஒன்றும், மேகலையில் மின்னும் ரத்தினமாய் ஒன்றும், மத யானைகள் பல வென்று வெண்ணிறப் புரவியில் திமிர் கொண்டு துலங்கும் மகுடத்து ஒளி போல் ஒன்றும்,நடனமாடிக் கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள். ஆடல் கலைஞர்களுக்கு நடுவே இருள் நீக்கும் குரு போல, அனைத்துக்கும் நடுவே பல்லாயிரம் பக்குவம் சொல்கிறது ஒற்றை நிலா . இவை அத்தனையையும் ஒன்றாய்ப் பார்த்து ரசித்து உள்வாங்கி விழுங்கிடும் மனதிற்கு நிகராக பிறிதொரு செல்வம் உண்டோ ?? என்று அற்புதமாக வினவுகிறார் பாரதி. இந்த பிரபஞ்சத்தில் கொட்டி கிடைக்கும் இயற்க்கை அழகை ரசித்திடும் மனம் கொண்டோர் எத்தனை பெரிய அதிஷ்டசாலிகள் ? பெரிதினும் பெரிது கேட்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

தாரகை யென்ற மணித்திரள்
யாவையும் சார்ந்திடப் போமனமே,
ஈரச் சுவையதி லூறி.
வருமதில் இன்புறு வாய்மனமே!
சீர விருஞ்சுடர் மீனொடு
வானத்துத் திங்களையும் சமைத்தே
ஒரழ காக விழுங்கிவிடும் உள்ளத்தை ஒப்பதோர் செல்வமுண்டோ?

எழுத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் என்று சொல்லி மகிழும் பாரதி அசையும் பொருட்கள் யாவற்றிற்குள்ளும் உயிர் தன்மையை உணர்பவர். ஆதலால் இடைவிடாது சுழன்று கொண்டிருக்கும் கோள்களையும் உயிராகப் பார்க்கிறார். போற்றுகிறார்.

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது! அகில முழுதும் சுழலுகிறது!சந்திரன் சுழல்கின்றது, ஞாயிறு சுழல்கின்றது. . . வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன!
(வசன கவிதை, காற்று – 13)

சூரியனும், திங்களும், விண்மீனும், கோள்களும் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாய் காலம் நேரம் தவறாமல் இயங்கி கொண்டிருக்கின்றன. அவர்களது ஆற்றல் எத்தனை பெரியது . ஒரு வேளை கூட தவறாமல் இயங்கும் சக்தி கொண்டிருக்க எத்தனை உயிர்ப்போடு இருக்க வேண்டும் ? இவற்றின் சக்தியை கடன் வாங்கி வாழும் நாமும் அப்படித் தான் எந்நேரமும் உயிர்ப்போடு இருக்கிறோமா ? எது நம் பூரண ஆற்றலை வெளிப்படுத்துவதில் தடை போடுகிறது? மனத்தில் எழும் கேள்விகளுக்கு மனமே பதில். மனதினை ஆளும் தன்மை பெற்றால் நாமும் விண்ணைத் தொடலாம். மனிதர்கள் சோர்வடையாது விண்மீன்களைப் போல இயங்க வேண்டும் என்பதனை மற்றுமொரு இடத்திலும் சுட்டிக்காட்டுகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் சரஸ்வதி வணக்கத்தில் கூட என்ன பொருத்தமாக அணுக்களையும் விண்மீன்களையும் இணைக்கிறார் பாரதி. இயற்கையில் உள்ள பொருட்களெல்லாம் இடை விடாமல் இயங்குகின்றனவே.அதே போல உன்னருளால் என உள்ளமும் இடைவிடாமல் இயங்கிச் செயற்கரியன செய்யாதோ?
என்று சரஸ்வதியிடம் பணிகிறார்.

ஸரஸ்வதி வணக்கம்
இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்களெல்லாம்
சுழலுமென வான்நூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கையாயின்
இடையின்றிக் கலைமகளே உனதருளில்
எனதுள்ளம் இயங்கொண்ணாதோ.?

இவ்வாறு பாரதி நேயம் கொண்ட பெரும் பொருளை, சூரிய மண்டலத்தை, வானத்தை, வெளியை இசையில் இழைத்து ஆடலில் நுழைத்து அபிநயக்ஷேத்திரா மகிழ்ந்தது. மகாகவி சுப்ரமணிய பாரதியின் கொள்ளுப் பெயரன் இசைமேதை ராஜ்குமார் பாரதி ஐயாவின் இசை அமைப்பில், “விண்வெளி பாரதி” நடனத்தினை அமைத்து சுவையறிந்து கோடி இன்பம் பெற்றோம்

விண்டுரைக்க, அறிய, அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை.
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
(மகாசக்தி வாழ்த்து – 1)

1,234 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *