இனி மனிதனை ஆளக்கூடிய சக்தியை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி பெறும்?
Dr. நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி
நாம் வாழும் இந்த நவீன உலகில் தொழினுட்பங்கள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள். அவற்றில் சில நம் சமூகத்தைத் தீவிரமாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளன என்பதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை. இவற்றுள் தன்னாட்சி வாகனம் ஓட்டுவது, நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் செயற்கை அறிவுத்திறன் போன்ற தொழினுட்பங்கள் அடங்கும். இவ்வாறு நமது உலகை எதிர்காலத்தில் தலைகீழாக மாற்றி அமைக்கவிருக்கும் சுவாரசியமான தொழினுட்பங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தன்னாட்சி வாகனம்
முதலில் தன்னாட்சி வாகனம் ஓட்டுவது பற்றிப் பார்ப்போம். தற்போது நாம் ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்குச் செல்வதற்கு நாமே நமது வாகனத்தை ஓட்ட வேண்டும். அதாவது ஒரு மனிதன் அந்த வாகனத்தை ஓட்டினால் தான் அது நகரும். ஆனால் தன்னாட்சி வாகனத்தில் நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். உள்ளே ஏறி இருந்ததும் வாகனம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச்செல்லும். குறிப்பாக கணினி ஒன்று அந்த வாகனத்தை ஓட்டும். வெகு விரைவில் அறிவியல் புனைவு போல் தோன்றும் இந்தத் தொழினுட்பம் எங்குப் பார்த்தாலும் காணக்கூடியதாக இருக்கப் போகிறது. இதற்குத் தேவையான ஆராய்ச்சிகளும் வேலைகளும் உலகின் வாகனத் தொழில்துறையில் நடாத்தப்படுகிறது. எதிர்காலத்தில் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு போக்குவரத்தை மேம்படுத்த முடியும். இதன் விளைவாக குறைவான போக்குவரத்து நெரிசல்கள், குறைவான விபத்துக்கள் மற்றும் வாகனங்கள் வெளியேற்றும் புகையால் குறைந்த காற்று மாசுபாடு இருக்கும்.
மரபணு திருத்துதல்
ஒரு மனிதனை நமக்குப் பிடித்தவாறு மாற்றி அமைக்கவோ அல்லது உருவாக்கவோ முடிந்தால் எப்படி இருக்கும்? என்ன புரியவில்லையா? பிறப்பதற்கு முன்பே ஒருவரின் தோற்றத்தையும் புத்திசாலித்தனத்தையும் நாம் விரும்பும்படி தீர்மானிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? சொல்லப்போனால் நாம் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதே தான் உண்மை. மரபணு பொறியியலின் வளர்ச்சி CRISPR-Cas9 என்று அழைக்கப்படும் ஒரு விதமான மரபணு கத்தரிக்கோலின் (genetic scissor) கண்டுபிடிப்புடன் அதிவேகத்துடன் ஆரம்பித்தது. அதன் மூலம், மரபணுவை எளிதாகவும் துல்லியமாகவும் மாற்றியமைக்க முடியும். குறிப்பாக னுNயுவின் சேதமடைந்த பகுதிகளை அகற்றவும் மாற்றவும் இதைப் பயன்படுத்தலாம். இந்த மரபணு கத்தரிக்கோல், மரபணுப் பொருளைத் தேர்ந்தெடுத்து மாற்றியமைக்கவும், உதாரணமாக, ஓர் உயிரினத்தின் வளர்ச்சி செயல்பாட்டில் தலையிடவும் பயன்படுகிறது. விஞ்ஞானிகளின் கணிப்புப் படி இந்தத் தொழினுட்பத்தின் ஊடாக நோய்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கவும் முடியும், அதே நேரத்தில் மனிதனையும் மேம்படுத்த முடியும். இந்த வழியில், ஒருவரின் உடலமைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், முதுமையடைதலையும் எதிர்க்க முடியும். இதன் விளைவாக மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் – மனிதர்கள் உட்பட – எதிர்காலத்தில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.
நானோ தொழினுட்பம்
நானோ மீட்டர் அளவுகளில் செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் அதே அளவுகளில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தை நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் என்றும் அழைக்கின்றோம். நானோ ஆராய்ச்சியில் உள்ள வியப்பான விஷயம் என்ன தெரியுமா? இந்த ஆராய்ச்சி பல்வேறு துறைகளில் நடாத்தப் பட்டு வருகின்றது. அதில் மருத்துவமும் ஒன்றாகும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தற்போது நாம் என்ன செய்வோம்? உடனடியாக மருத்துவரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு, நோய் போய்விடும் என்கின்ற நம்பிக்கையில் இருப்போம், சரி தானே? ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த நிலைமை முற்றிலும் மாறி விடும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் தரவே மாட்டார்! அவர் நானோ தானியங்கி (யேழெ சுழடிழவ) என்று அழைக்கப்படும் மிக மிக நுண்ணியமான எந்திரங்களை உங்கள் உடலுக்குள் அனுப்பிவிடுவார். இந்த நானோ தானியங்கிகள் உங்களது இரத்தக் குழாய்களூடாகச் சென்று உங்கள் நோய்க்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கண்டுபிடித்து அழித்து விடும். அது மட்டும் இல்லை! புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக் கற்கள், எய்ட்ஸ் போன்ற எண்ணற்ற நோய்களையும், ஏன் இன்று வரை எவ்விதமான சிகிச்சை முறைகளுமே இல்லாத நோய்களையும் கூடக் குணப்படுத்த இந்த நானோ தானியங்கிகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
ஆனால், இதில் உள்ள அதிசயம் என்ன தெரியுமா? ஒரு நானோ தானியங்கியின் அளவு வெறும் 0.000000001 மீட்டர் மட்டுமே தான் இருக்கும்! ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒரு நானோ தானியங்கியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு நானோ தானியங்கி சுமார் 100,000 மடங்கு சிறிதாக இருக்கும்! எனவே, நமது கண்களாலே பார்க்கமுடியாத இந்த எந்திரங்கள் மனிதனின் உயிரைக் காப்பாற்றப் போகின்றன என்பதைக் கேட்கவே அதிசயமாகத் தானே இருக்கிறது?
நோய் எதிர்ப்பு சிகிச்சை
நோய் எதிர்ப்பு சிகிச்சை நோயை எதிர்த்துப் போராட உங்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக புற்றுநோயைப் பொறுத்தவரை, இது மிகவும் நம்பிக்கை தரும் சிகிச்சைமுறையாக மட்டுமல்லாமல் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலரைக் குணப்படுத்தியும் உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் இரத்தப் புற்றுநோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு உயிரணுக்களில் மரபணு மாற்றங்களைச் செய்து, அவை சிதைந்த உயிரணுக்களை அடையாளம் கண்டு அவற்றை அழிக்கும்படி அமைத்துள்ளனர். இவ்வாறு சிகிச்சை பெற்ற புற்று நோயாளிகள் முற்றிலும் புற்றுநோயற்றவர்களாக மாறினர். தற்போது இந்தச் சிகிச்சை முறையினால் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்பட்டாலும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் மருத்துவர்களிடையே எந்த விதச் சந்தேகமும் இல்லை.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்கள் தானே கற்றுக்கொள்ளும் திரணை கொண்டுள்ளதால் போகப் போக மனிதனால் மட்டும் செய்யக்கூடிய விஷயங்களில் மனிதனை விடச் சிறப்பாகச் செய்யும் திரணைப் பெற்றுவிடும். இன்று வரை செயற்கை நுண்ணறிவு ஒரு சில பகுதிகளில் பயண்படுத்திவருகின்றது. ஆனால் விஞ்ஞானிகள் சில பகுதிகளில் மட்டும் இல்லாமல் மனிதனைப் போல் அனைத்து விஷயங்களிலும் திறமையுடன் செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி மனிதனை ஆளக்கூடிய அறிவையும் சக்தியையும் பெறக்கூடலாம் என்றும் அச்சம் இருக்கிறது.
இதில் விளக்கிய தொழினுட்பங்கள் நாம் எதிர்காலத்தில் காணப்போகும் தொழினுட்பங்களில் ஒரு சில மட்டுமே தான். என்ன தான் இது ளஉநைnஉந கiஉவழைn படங்களில் வரும் விஷயங்கள் போல் தோன்றினாலும்,இதில் உள்ள ஆச்சரியமான உண்மை என்னவென்றால், இவை அனைத்தும் வெகு விரைவில் எங்கள் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமான தொழினுட்பங்களாக இருக்கப்போகிறது என்பது தான். இதை நினைத்தால் சுவாரசியமாக இல்லையா? மொத்தத்தில் இனி நாமாக நாம் இல்லை.!
638 total views, 2 views today