மாத்தி யோசி, வெற்றியை ருசி…
-சேவியர் – தமிழ்நாடு
“ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட நமக்குத் தெரிவதில்லை. வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்களில் இது நடந்து விடுகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் விடையாக நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு தீர்வையே தேர்ந்தெடுக்கிறோம். ஒரு கட்டத்தில் அதுவே பழகிப் போக, “இந்தப் பிரச்சினைக்கு இது மட்டும் தான் தீர்வு” என முடிவு கட்டி விடுகிறோம்.
துப்பறியும் நாவல்களைப் படிக்கும்போது நமக்கு ஆங்காங்கே மெல்லிய ஆச்சரியம் எழுவதற்கான காரணமும் அது தான். “அடடா… இது நமக்கு தோணாம போச்சே !” என்று கதாநாயகர்களைப் பாராட்டுகிறோம். தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளானாலும் சரி, அலுவலகப் பிரச்சினைகளானாலும் சரி, வித்தியாசமாய் யோசித்து புதிது புதிதாய்த் தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்களை வெற்றி தேடி வந்து அரவணைத்துக் கொள்ளும்.
வித்தியாசமாய் யோசிப்பவர்கள் தனித்துத் தெரிகிறார்கள். சாமந்திப் பூக்களின் தோட்டத்தில் ஒரு பூ மட்டும் நீல நிறமாய்த் தெரிந்தால் சட்டென கண்களை ஈர்த்து விடுவதைப் போல.
விண்வெளியில் காற்று இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விண்வெளி வீரர்கள் சாதாரண பேனா கொண்டு போனால் பயன் இருக்காதாம். எனவே வெற்றிடத்தில் எழுதுவதற்குரிய ஸ்பெஷல் பேனாவைக் கண்டு பிடிக்க அமெரிக்கர்கள் பிரம்மப் பிரயர்த்தனம் செய்தார்கள். கடைசியில் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து வெற்றிகரமாக ஒரு பேனாவைக் கண்டு பிடித்தார்கள். ரஷ்யர்களுக்கும் இதே சிக்கல் வந்ததாம். அப்போது ரஷ்ய விண்வெளி ஊழியர் ஒருவர் சொன்னார்,”எதுக்குப் பேனா ? ஒரு பென்சில் கொண்டு போய் எழுதுவோமே” ! அவர்களுக்கு இரண்டு ரூபாயில் பிரச்சினை தீர்ந்தது !
“விண்வெளியில் வைத்து எழுதவேண்டும்” என்பது தான் கொடுக்கப்படும் பிரச்சினை. அதற்குத் தீர்வு பல மில்லியன் டாலர் பேனாவாகவோ, இரண்டு ரூபாய் பென்சில் ஆகவோ இருக்கலாம். ஆனால் எது லாபகரமானது ? எந்தச் சிந்தனை வலுவானது ? எந்தச் சிந்தனை எளிதானது ? எது வழக்கத்துக்கு மாறாகச் சிந்திக்கிறது ? இவை தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.
ஒரு பெரிய சோப் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு புகார் வந்தது. ஒருவர் வாங்கிய சோப்களில் ஒரு கவருக்குள் சோப் இல்லை. வெறும் கவர் மட்டுமே இருந்தது ! நிறுவனத்துக்கு இதே போல அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் புகார்கள் எழ, நிர்வாகம் இதற்கு ஒரு பரிகாரம் கண்டுப் பிடிக்க முயன்றது. கம்பெனியிலுள்ள பெரிய வல்லுனர்கள் எல்லாம் ஒரு அறையில் கூடி விவாதித்தார்கள். ஏகப்பட்ட ஐடியாக்கள் வந்தன.
சோப்கள் வரிசை வரிசையாக ஒரு பெல்ட் வழியாக ஊர்ந்து போய்க் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சேரும். அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு முன் அந்தக் கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சோப் இல்லையேல் அதை எடுத்துத் தனியே வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
சரி. கவருக்குள் சோப் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஒருவர் சொன்னார். “ஒரு எக்ஸ்ரேக் கருவியைப் பொருத்தலாம். அந்தக் கருவி ஒவ்வொரு சோப்பாக ஸ்கேன் செய்து உள்ளே சோப் இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டி விடும். அப்புறம் ஒரு ரோபோ கையை வைத்து அந்த டப்பாவை எடுத்துத் தனியே வைக்கலாம் !
இன்னொருவர் சொன்னார். சோப் ஊர்ந்து போகும் இடத்தில் ஒரு சின்ன எடை மிஷின் ஒன்றை வைக்க வேண்டும். சோப் இல்லையென்றால் எடை குறைவாய் இருக்கும். அதை அப்புறப்படுத்தி விடலாம்
இப்படி ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். நீங்களாய் இருந்தால் இந்தச் சூழலில் என்ன பதில் சொல்வீர்கள் ? இதில் எது சிறந்த வழி ? அல்லது இதை விடச் சிறந்த எளிய வழி உண்டா ? இவை தான் இங்கே கேள்விகள்.
கூட்டத்திலிருந்த ஒருவர் ஒரு அட்டகாசமான ஐடியா சொன்னார். “சோப்கள் ஊர்ந்து வரும் இடத்தில் ஒரு பெரிய ஃபேனை வேகமாகச் சுழல விடுங்கள். சோப் இல்லாத கவர்களெல்லாம் தானே பறந்து போய்விடும். பறக்காத கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறது என்று அர்த்தம் ! ” இது தான் அவருடைய ஐடியா ! மிக எளிமையான, செலவில்லாத இந்த ஐடியா கரகோஷத்துடன் அங்கீகரிக்கப் பட்டது.
இதை ஆங்கிலத்தில் “அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்” என்பார்கள். அதாவது வழக்கமாக மக்கள் யோசிப்பது போல யோசிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாய் யோசிப்பது. லேட்டரல் திங்கிங் என்றொரு சமாச்சாரமும் உண்டு. அதுவும் ஏறக்குறைய இதே அடிப்படையிலானது தான். ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக வழக்கமாக உள்ள வழிகளையோ, சட்டெனப் புலப்படும் வழிகளையோ விட்டு விட்டு வேறு புதுமையான வழிகளை யோசிப்பது தான் இரண்டுக்குமான அடிப்படை. ஒரு சின்ன வித்தியாசமான ஐடியா போதும் ஒரு நிறுவனம் உச்சிக்குப் போக ! ஐபேட், ஐபோன் போன்றவற்றின் வருகைக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் அடைந்திருக்கும் பிரமிப்பூட்டும் வளர்ச்சி நாம் அறிந்ததே.
ஐடியாக்களைக் கண்டுபிடிக்க செலவு ஏதும் இல்லை. மூளையைக் கசக்க வேண்டும் அவ்வளவு தான். பெரிய பெரிய கண்டுபிடிப்புகளெல்லாமே சின்னச் சின்ன ஐடியாவின் நீட்சிகள் தான். ஒரு காலத்தில் தீக்குச்சியும், அதை உரசி நெருப்பு பற்ற வைக்கும் மருந்தும் தனித்தனியே இருந்தன. பெட்டிக்குள் குச்சியைப் போட்டு, அதன் பக்கவாட்டில் மருந்து தடவி உரச வைக்கலாம் என்பது ஒரு சின்ன ஐடியா தான். ஆனால் எவ்வளவு அட்டகாசமான ஐடியா இல்லையா ?
எட்வர்ட் டி பானோ என்பவர் லேட்டரல் திங்கிங் விஷயத்தில் புலி. இவர் எழுதிய 40 நூல்கள் இருபத்து ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இவருடைய பார்வையில், அறிவும் சிந்தனையும் வேறு வேறு. வித்தியாசமானச் சிந்தனையை யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக உருவாக்கலாம். ஏன் ? எப்படி ? எனும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமாம்.
இன்னொரு விதமாகச் சொன்னால், லேட்டரல் திங்கிங் என்பது ஒரு விஷயத்தை பலருடைய பார்வையில் பல கோணங்களில் யோசிப்பது. உதாரணமாக வீடு கட்டுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். படுக்கையறை நல்ல வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.
எலக்ட்ரீஷியன் “நிறைய லைட் போடலாம்” என்பார். கார்ப்பெண்டரோ,“ ரூம் சன்னலைப் பெரிசு பெருசாக வைக்கலாம் ?” என்பார். “பளிச் நிறத்தில் பெயிண்ட் அடித்தால் வீடு வெளிச்சமாய்த் தெரியும்.” என்பது பெயிண்டரின் பார்வையாய் இருக்கும். டிசைனரோ “இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டலாம், நிறைய கண்ணாடி பொருத்தலாம்” என்பார். வாஸ்துக்காரர் ஒருவேளை “பெட்ரூமை கிழக்குப் பக்கம் பார்க்கிறமாதிரி வையுங்க” என்பார். இப்படி எழும் பலருடைய கோணத்தை நீங்கள் ஒருவரே யோசித்துச் சொன்னால் உங்கள் சிந்தனை வளர்ச்சியடைகிறது என்று பொருள்.
வாழ்க்கை எந்த அளவுக்கு போட்டிகளும், சவால்களும் நிறைந்ததோ அந்த அளவுக்கு வாய்ப்புகளும், வரவேற்புகளும் நிரம்பியது. உங்களுடைய சிந்தனை கூர்தீட்டப்பட்டதாக இருந்தால் பாதைகளில் சிவப்புக் கம்பளம் நிச்சயம் உண்டு. வந்தோமா, போனோமா என்றிருக்காமல் தினசரி செய்யும் வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் ? என்ன புதுமைகள் புகுத்தலாம் என யோசித்துக் கொண்டே இருங்கள். ஆச்சரியமூட்டும் உயரிய இருக்கைகள் உங்களுக்கு இடமளிக்கும்.
கூரான சிந்தனைகள் கருவாகட்டும் எதிர்காலம் வளமாக உருவாகட்டும்.
கதை :
ஒரு கோடீஸ்வரர் இருந்தார். அவருக்குப் பயங்கரமான கண் வலி. அவருடைய வலியைப் போக்க வழி தெரியாமல் எல்லா மருத்துவர்களும் கையைப் பிசைந்தார்கள். கடைசியில் ஒரு துறவியைக் கூட்டி வந்தார்கள். அவர் “உங்கக் கண்ணுக்கு நிற அலர்ஜி வந்திருக்கிறது. இன்னும் ஒரு மாசத்துக்குப் பச்சை நிறங்களை மட்டும் பாருங்க. மற்ற நிறங்களைப் பார்க்காதீங்க” என்றார் இவர் கோடீஸ்வரரல்லவா ? வீடு, படுக்கை துணிகள் எல்லாமே பச்சை கலராய் மாற்றப்பட்டன. பச்சை உடை, பச்சை முகமூடி இல்லாமல் யாரும் அவரை நெருங்க முடியவில்லை.
ஒரு மாதம் கழிந்து துறவி வந்தார். அவர் மீதே பச்சை பெயிண்டைக் கொட்டினார்கள். துறவி அதிர்ச்சியடைந்தார். கோடீஸ்வரரோ, “மன்னியுங்கள் உங்க உடை காவி நிறம். அதனால் தான் பச்சை பெயிண்ட் கொட்டச் சொன்னேன்.” என்று சமாதானப்படுத்தினார் . துறவி வாய்விட்டுச் சிரித்தார். “இவ்வளவு களேபரத்துக்குப் பதிலா நீங்க மட்டும் ஒரு பச்சைக் கலர்க் கண்ணாடி வாங்கி கண்ணுல மாட்டியிருந்தா போதுமே ! ” என்றார் !
இது தான் எளிய, அதே நேரம் வலிமையான சிந்தனை. எந்த ஒரு செயலைச் செய்யவும் பல வழிகள் இருக்கும். நமக்கு ரொம்பவேப் பரிச்சயமான வழியில் நடப்பதைத்தான் நாம் விரும்புவோம். ஆனால் அந்த வழியை விட்டு விட்டு இன்னொரு வழியில் நடக்கும் போது தான் புதுமைகளைக் கண்டடைய முடியும்.
848 total views, 3 views today