பேசும் பொற் சித்திரமே உன்னை இன்று அள்ளி அணைத்திடவே முடியாது!

முத்தம் கொடுக்கும் போது மூக்கைக் கடிப்பதும், கட்டி அணைக்கும் போது மார்பில் உதைப்பதும், வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓட வைப்பதும். ஒளித்து நின்று தேட வைப்பதும் என்று குழந்தைகள் அடிக்கும் லூட்டிக்குக் கணக்கேயில்லை. பெற்றால்தான் பிள்ளையா? பிள்ளை பெற்ற பேரப்பிள்ளையும் எங்களுடைய பிள்ளைகளே என்று தாத்தா, பாட்டி பிள்ளைகளுடன் ஓடுகின்ற காலம் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. தமது பிள்ளைகளைத் தூக்கி வளர்க்க யாரும் புகுந்த நாட்டில் இருக்கவில்லை. இன்று எங்களுடைய பிள்ளைகளுக்கு அந்த சங்கடத்தை நாம் கொடுக்க விரும்பவில்லை. அவர்களுக்குத் துணையாக நாம் இருக்கின்றோம் என்று பேரப் பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவி புத்தகப் பை தோளில் சுமந்து மீண்டுமாய் அன்னையாய்த் தந்தையாய் அவதாரம் எடுத்திருக்கின்ற பாட்டி பாட்டன்மார்களின் கரிசனைக் காலமாக இக்காலம் இருக்கின்றது. இப்போது யாரும் தொலைபேசியிலே சின்னத்திரை கதைகள் பேசுவது கிடையாது. மாறாக பேரப்பிள்ளைகளின் புராணமே பாடப்படுகின்றது. அது சின்னத்திரையை விட அவர்களுக்குப் பிடித்திருக்கின்றது.

பாடசாலைக் காலங்களில் ரொக்கெட்டில ஏறி சந்திர மண்டலம் போகப் போகின்றேன் என்று சொன்ன ஒரு பெண் சந்திர மண்டலத்துக்குப் போகும் ஆடை போல் புத்தகப் பை முதுகில் சுமந்து ஆடைமேல் ஆடையென குளிருக்கு ஆடை உடுத்தி பேரப்பிள்ளையை கூட்டிப் போகின்றாள். இதிலிருந்து என்ன புரிகின்றது என்றால், குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். கட்டையில் போகும் வயதிலும் தொட்டிலில் கிடக்கும் பிள்ளையின் மூலமாக இளமைக்குத் திரும்பும் மனிதர்களே அதிகம். குழந்தைச் செல்வத்தை தேனாகப் பாவனை பண்ணிச் சுவைக்கும் தேன் கண்களுக்குச் சுவையையும் தருகின்றது என்பதைப்

பிள்ளைக் கனி அமுதே – கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே
அள்ளி அணைத்திடவே – என்முன்னே
ஆடி வரும் தேனே

என்று கண்ணம்மாவைக் குழந்தையாய்ப் பாவனை பண்ணிப் பாரதியார் பாடினார்.

 படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
 உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
 குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
 இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
 நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
 மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
 பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

புதல்வர்களைப் பெறுவதால் ஏற்படும் சிறப்பைப் பற்றி புறநானூற்றில், பாண்டியன் அறிவுடைநம்பி,
மிக அழகிய இப் பாடலிலே பாடியுள்ளார்.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!

எனப் பெரியாழ்வர் திருமொழியிலே கண்ணன் தொட்டிலிலே செய்கின்ற குறும்புகளை விவரிக்கின்றார். தொட்டிலிலே படுக்கவென்று கிடத்தினால், தொட்டில் துணி கிழிந்துப் போகும் அளவுக்குத் தொட்டிலை உதைக்கிறான். தூக்கி அவனை இடுப்பிலே வைத்தால், விலா எலும்பு அவன் செய்கின்ற ஆட்டுத்தனத்திலே முறிந்துவிடுகிறது. மார்போடு இறுக அணைத்துக் கொண்டால், வயிற்றின் மேல் துள்ளுகிறான்; இந்த குழந்தை செய்கின்ற குறும்புகளைத் தாங்க மாட்டாமையாலே நான் மெலிந்து போய்விட்டேன் என்று யசோதை புலம்புவதாகப் பெரியாழ்வார் எழுதியிருக்கின்றார்.

அடம்பிடித்து அழும்பிள்ளையைச் சமாளிப்பதற்காக எதை எதையோ எல்லாம் செய்கின்றோம். தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் வரை அடம்பிடித்து அழுது தேவை முடிந்தவுடன் தானாகவே அழுகையை நிறுத்திவிடுகின்ற தந்திரசாலிகளாகப் பிள்ளைகள், வளருகின்ற போதே கற்றுக் கொள்ளுகின்ற முதலாவது தந்திரம் என்று கருதலாம். பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் வேலை நிமித்தமாக வெளியிலே சென்றுவிட பிள்ளையின் முழுப் பராமரிப்பையும் தாத்தா, பாட்டி எடுக்கின்றனர். ஆனால், பல கட்டுப்பாடுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

முதலாவது கட்டுப்பாடு பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுக்கக் கூடாது. தம்முடைய பிள்ளைகளை வளர்க்கின்ற போது பெரியவர்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாகவும் வெளியே சென்று வந்தாலும் இனிப்புத்தான் கொடுத்து சந்தோசப்படுத்தினார்கள். ஆனால், இப்போது அப்படி செய்வதை கட்டுப்படுத்தி விட்டனர்.

கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கக்கூடாது. ~~கன்னத்தில் முத்தமிட்டால் கண்ணம்மா கள் வெறி கொள்ளுதடி|| என்று பாடிய பாரதியார். குழந்தையை அரவணைத்து முத்தமிடும் போது ஒருவித ஆன்மீக இன்பம், அன்பு மயக்கம் ஏற்படுவதைப் பாரதியார் அனுபவித்துப் பாடியிருக்கின்றார். ஆனால், இப்போது பிள்ளைக்கு தொற்று வந்துவிடும் என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அழுது அடம்பிடித்து உணவு உண்ண மறுக்கின்ற பிள்ளையைப் பாடல் பாடி ஆடி அக்காலப் பெற்றோர் உணவு உண்ணச் செய்வர். பெற்றோர் கோபம் கொள்ளுகின்ற போது பிள்ளைகள் அவர்களை உவகைக் கூத்தாட வைக்குமாம். செருக்குறித்தாரை உவகைக் கூத்தாட்டும் என்று கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது. நிலாவைக் காட்டி உணவு ஊட்டுகின்ற போது ~~நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா|| என்று பாடினால், பிள்ளைக்கு அறியாமையை வளர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றனர். நிலாவைக் காட்டிச் சோறூட்டுகின்ற போது குழந்தை மேல் நோக்கிப் பார்க்கும். அப்போது தொண்டைக்குழி விரிவடைகின்றது. உணவு இலகுவாக கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கும். இளம் தலைமுறையினரின் அறியாமையானது அதன் அறிவியலைப் புரிந்து கொள்ளாமையால். இப்போது பசித்தால் பிள்ளை சாப்பிடும். கரைச்சல் கொடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு போடுகின்றது.

அழுகின்ற பிள்ளையின் அழுகையை நிறுத்த ஆரடித்து நீயழுதாய், அண்ணன் அடித்தானோ அணைத்தெடுக்கும் கையாலே, அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே! பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே, மாமன் அடித்தானோ மகிழ்ந்தெடுக்கும் கையாலே என்று உறவு முறை தெரியவைத்து அண்ணன் அணைப்பவன், அத்தை அமுதூட்டுபவள், மாமன் மகிழ்ந்தணைப்பவன், பாட்டி உணவூட்டுபவள் என்று அவர்களின் அன்பைப் பாட்டின் மூலம் புரிய வைத்து மூளைக்குள் பதிய வைப்பார்கள்.

ஆனால், இன்று பிள்ளை அழுதால், அறைக்குள் விட்டுப் பூட்டி விடுங்கள். அழுது ஓய்ந்து வருவார்கள். இல்லையென்றால் அழ விட்டுவிடுங்கள் என்பது இப்போதுள்ள குழந்தை வளர்ப்பு முறை. எனவே இக்காலத்தில் அன்பைத் தேடும் தாத்தா, பாட்டி கூட கட்டுப்பாட்டுடனேயே தேவை கருதி தொழில்பட்டு அன்பைச் சொரிய வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

968 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *