இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்
- முருகபூபதி-அவுஸ்திரேலியா
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன், மகாகவி பாரதி மறைந்த அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார்.
கடந்த ஆறு தசாப்த காலத்திற்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டு வந்திருக்கும் கே.எஸ்.சிவகுமாரன் மட்டக் களப்பில் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்தவர். இலக்கியம்,நாடகம், திரைப்படம், ஊடகம்,அறிவியல்,செய்தி,அரசியல் திறனாய்வு,இசை,நடனம்,ஓவியம்,மொழிபெயர்ப்பு,சிறுகதை,கவிதை முதலான பல துறைகளிலும் எழுதியவர்.ஒலி,ஒளிபரப்புத்துறைகளிலும் பணியாற்றியவர்.
இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். வீரகேசரி நாளிதழிலும் சிறிது காலம் பணியாற்றியவர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். அத்துடன் கொழும்பில் கோடகே வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றவர்.ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருந்தவர் கே.எஸ்..சிவகுமாரன்.
தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில,தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ்.எழுதமாட்டாரா?என்று காத்திருந்த படைப்பிலக்கியவாதிகள் அநேகம்.சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர். தொடர்ந்தும் தன்னை திறனாய்வாளன் என்று அடக்கமாகச்சொல்லிக்கொண்ட அவர் சிறுகதை எழுத்தாளருமாவார்.அத்துடன் ஆங்கிலத் திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டவர்.
இருமை, சிவகுமாரன் கதைகள் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும்.பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலப் பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர்.தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர்.சிவகுமாரன் 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மெல்பனுக்கு வந்திருந்தார். அவருக்கு எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் தேநீர் விருந்துபசாரம் வழங்கினோம். எமது ஒன்றியத்தின் வெளியீடான Being Alive (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய தமிழ்ப்படைப்பாளிகளின் சிறுகதைகள்) நூலை இச்சந்திப்பில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
இந்நிகழ்வு அவரைப்பொறுத்தவரையில் எதிர்பாராததுதான். அவுஸ்திரேலியாவுக்கு தமது மகனைப்பார்க்க வருமுன்னரே குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல் பற்றி டெயிலி நியூஸ் பத்திரிகையில் மதிப்பாய்வு எழுதியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சிட்னியிலும் மெல்பனிலும் தமது கலை,இலக்கிய,வானொலி ஊடகத்துறை நண்பர் களை நேரில் சென்று பார்த்து அவர்களது சுகநலன் விசாரித்தார். இலங்கை திரும்பியதும் தமது அவுஸ்திரேலிய பயண அனுபவங்களை ஆங்கிலத்தில் தமது பத்தியில் எழுதினார். மற்றவர்களின் படைப்புகளையும் அவர்தம் இலக்கியப்பணிகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது பத்திகளில் அறிமுகப்படுத்திவந்த சிவகுமாரன்தான் தமிழில் பத்தி எழுத்து என்னும் பிரயோகத்தை அறிமுகப் படுத்தியவர்.
1988 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்த சிவகுமாரன் பற்றி கவிஞர் மேமன்கவி, விரிவாக அன்றே எழுதிவைத்துள்ளார்.அதே ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பான் நாகசாகிப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இதழ் ஒன்றில் கே.எஸ்.சிவகுமாரனை, லெரோய் ரொபின்ஸன் என்பவர் பேட்டிகண்டு எழுதியுள்ளார்.அந்தப்பேட்டியில்,சிவகுமாரன் ஈழத்து கலை,இலக்கிய வளர்ச்சிகுறித்தும் ஈழத்து இதழியல்கள் மற்றும் ஆளமை மிக்க படைப்பாளிகள் பற்றியும், மொழிபெயர்ப்பு எழுத்துக்கள் தொடர்பாகவும் மட்டுமன்றி, வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர்,மீன்பாடும் தேனாடு, தொல்பொருளாராய்சிக்குட்பட்ட கந்தரோடை, திருகோணமலை பற்றியெல்லாம் பேசியிருக் கிறார்.
1988 செப்டெம்பரில் வெளியான மல்லிகை இதழை நூலகம் ஆவணகத்தில் இப்போதும் பார்க்கமுடியும். பிறநாட்டவர்க்கும் ஈழத்தின் மகிமைபற்றியும் பெரும்பான்மை இனத்தவரின் புறக்கணிப்பு குறித்தும் அக்காலப்பகுதியில் சிவகுமாரன் அந்தப்பேட்டியில் பேசியிருக்கிறார்.
நீர்கொழும்பு வாசியான என்னையும் அவர் இனம்கண்டு தினகரன் வாரமஞ்சரியில் எழுதியிருப்பதுடன்,இலங்கை வானொலியில் இளைஞர்களுக்கான சங்கநாதம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த வி.என்.மதியழகனிடத்தில் என்னைப்பற்றிச்சொல்லிவிட்டு,என்னை அழைத்து அவரது அந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்.அத்துடன் நில்லாமல்,தமிழ் நிகழ்ச்சிகளின் பணிப்பாளராக பணியாற்றிய வி.ஏ.திருஞானசுந் தரத்திற்கும் என்னை அறிமுகப்படுத்திய சிவகுமாரன்,எனக்கு அங்கே மற்றும் ஒரு கலை,இலக்கியப்பணிக்கும் பரிந்துரைத்தார். பேராசிரியர்கள் கைலாசபதி,சித்திரலேகா மௌனகுரு,காவலூர் இராஜதுரை ஆகியோர் முன்னர் வாராந்தம் நடத்திவந்த கலைக்கோலம் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பையும் திருஞானசுந்தரம் எனக்குத்தந்தார்.
இவ்வாறு பலரை ஊக்குவித்து வளர்த்துவிட்ட நண்பர் கே.எஸ்.சிவகுமாரன். அவர்களின் மறைவு ஈடு செய்யப் படவேண்டிய இழப்பு என்றே கருதுகின்றேன்.தொலைவிலிருந்து எனது ஆத்மார்த்தமான அஞ்சலியை சிரம்தாழ்த்தி செலுத்துகின்றேன்.
977 total views, 2 views today