யேர்மனியில் இடம் பெற்ற தமிழர் தெருவிழா பரந்த மரநிழலில் பாய்போட்டு இருந்து, மகிழ்ந்த உணர்வைத் தந்தது.

-மாதவி
இதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு.
2018 ஆரம்பமான இத் தெருவிழா இன்று 2022 ஆண்டில் மூன்று தினங்கள் பெருவிழாவாக, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும், இனம் மதம் கடந்து யேர்மன் வாழ் மக்களும் கலந்து சிறப்பித்தது, பெருமைக்குரியது.
கலை நிகழ்ச்சிகளில்கூட அன்று எமது கலைஞர்களை யேர்மனியர் உள்வாங்கிக் பெருமைப்படுத்தியதுபோல், இன்று நாம் பல்லின மக்களையும் உள்வாங்கிக் பயணிப்பது தமிழர்களின் உயர்ந்த பண்பாடகவிரிந்து செல்கிறது.
திருவிழாக்களில் நாம் பெறும் பெரும் பேறு, ஒன்றுபட்டு தேர் இழுப்பது,மனிதமனங்கள் நேருக்கு நேர் உறவாடுவது போன்ற பல பண்புகள் தேர்த்திருவிழாக்கள் எமக்கு தருகின்றன. இங்கு நடைபெற்ற தெருவிழாவும் அப்படி ஒரு உணர்வையே ஏற்படுத்தியது. இரண்டு வருடங்கள் கொரோனாவால் வீட்டுக்குள்,அடைபட்டு இருந்த உறவுகள் பரந்த வெளியில் பாய்போட்டு இருந்து உறவாடிய உணர்வு பெற்றனர்.
விழாக்களில், ஆலயங்களில், நீங்கள் ஒருவரோடு ஒருவர் கதைக்க முடியாது,அது தெய்வ தரிசனத்தையும், விழாக்களில் கலை நிகழ்ச்சிகளையும், இடையூறு செய்யும்,சிறார்களை கட்டுப்படுத்தி, கட்டிவைக்கும் கட்டாயம் அங்கு இருக்கும், ஆனால் தெருவிழாவில் கலை நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும், அதனை ஆயிரம் பேர் பார்க்க, ஒரு ஆயிரம் பேர், மனிதர்களுடன் நேருக்கு நேர் கதைத்து மனச்சுமைகளை இறக்கி சுகம் பெறுவர். வயிறார உண் ணலாம், ஏன் சிறுவர்கள் அவிட்டு விட்ட ஆட்டுக்குட்டிகள் போல் இடை இடையே தாய்மடியில் அமர்ந்துவிட்டு அமர்க்களாமாய் தம்பாட்டிற்கு சுற்றி மகிழ்ந்தனர். உன்னிப்பாக கவனித்தவர்கள் அறிவார்கள்,சிறுவர்கள் தெரு விழாவுக்குள் ஒரு தனி விழாவை அவர்கள் செய்தார்கள் (நடுவில் நின்ற மரத்தை சுற்றி அவர்கள் தாமாக தெரிவு செய்த இடம், மேடை போல் அமைந்தது) தெருவிழாவில் குதிரையாட்டம் என்றால் அவர்கள் பலூன் குதிரையில், ஆடினர், தமக்கு விருப்பமான நடனம் பெரியவர்கள் மேடையில் ஆடும் போது சிறுவர்கள் மரத்தடி நிழலில் அற்புதமாக ஆடினார்கள், விளையாடினார்கள். இவையாவும் தெருவிழா தந்த வரங்கள். இறுதி நாள் நிகழ்வில் தரையில் சிறுவர்களைக் காணோம். எல்லோரும் மேடையில். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.
முன்று தினங்களிலும் ஆரம்ப நிகழ்வில் பாரம்பரிய கலை வடிவான பறை முழங்க, காவடியாட்டம், குதிரையாட்டம் நிகழ தமிழுக்கும், கலைக்கும், சமூகத்திற்கும், பணிசெய்தவர்கள் மாலை மரியாதையுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். தெருவிழா முதல் நாள் ஆரம்ப நிகழ்வில், கலைவிளக்கு சு.பாக்கியநாதன், வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்,கலாசாதனா நடனப்பள்ளி இயக்குனர் கவிதா லட்சுமி,(நோர்வே) ஏலையா.க. முருகதாசன், தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் தவா, எம்.ரிவி, இயக்குனர் சிவநேசன், ஆகியோரும்,
இரண்டாவது நாள் ஆரம்ப நிகழ்வில்
டோட்முண்ட் நகர இயக்குனர் ஜோர்க் ஸ்ருடமன், நாடாளமன்ற உறுப்பினர் றல்வ் ஸ்ரோல்ற்ச, நகரபிதா ஃபிரடரிக் ஃபூஸ், VMDOஇன் இயக்குனர் சாசியே கோய்ச, VMDO இன் தலைவர் ரூலின் டொலுராஸ், நகரசபை உறுப்பினர் ஓலாவ் மயர், VKIIஇன் பொறுப்பாளர் ஆர்மல் டியினிஇ தமிழர் கலையகத்தின் இயக்குனர் குமாரசாமி ஜெயக்குமார், அகரம் சஞ்சிகை ஆசிரியர்.த.ரவீந்திரன். ஆசிரியை சாந்தி துரையரங்கன், இவர்களுடன் தமிழகத்தில் இருந்து
வருகை தந்த கதைசொல்லி பவா செல்லத்துரை அவர்களும் அழைத்து வரப்பட்டனர்.
மூன்றாம் நாள் நிகழ்வில், அறிவிப்பாளர் முல்லை மோகன், பறை வாத்திய இசைக்கலைஞர் பரா,(பரீஸ்) மண் சஞ்சிகை ஆசிரியர் வ.சிவராஜா,’ஆவணகம்’ அன்ரன் ஜோசப்,மற்றும் ஆசிரியர் ஜோச் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். மேடையில் மூன்று தினங்களும் சிறப்பாக தொய்வின்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடைகள் நாம் விரும்பிய உணவுகளை விற்பனை செய்தன. அறிவிப்பாளர் பென்சிகா டொண் நிகழ்ச்சிகளை,சிறப்பாத்தொகுத்து வழங்கினார்,அறிவிப்பில் எந்த நீட்டலும், முடக்கலும், இல்லை, ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நிகழ்ச்சி, இடையில் தன்னுரை எதுவும் கிடையாது. இது நேரத்தையும், மக்களையும் தற்காலத்தில் மேடையின் பக்கம் வைத்திருக்கும் பெருமந்திரமாகப் பார்க்கப்படுகிறது. தெருவிழா பெருவிழாவாக விரிவடைய உதவிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.